Monday, June 13, 2016

ஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)

ஆசைதான் அது ! அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல்  " எனும்மாதிரியான ஒருவகையாசை

நீல கலர்ல ஒரு பஸ் "கொழும்பு -கல்முனை " எனும் பெயர்பலகை ;கூடவே சூப்பர்லைன் எனும் பெயரோடையும் புதுசா அப்போதான் எங்க ஏரியாவால போகதொடங்கின காலம். "இதோட பல்லே பலகோடி ரூவா போகுமன்ன" இதோட ஈரலு மெடிசின்" எனும் மாதிரியாய்

புல்லா ஏசி;

போர்த்துதான் இருக்கனும்;
ஓட்டமெட்டிக் டோர்;

அக்சிடெண்ட் பட்டா அப்பிடியே பலூன் மாதிரி ஒண்டு வந்து அதுக்குள்ள போய் சேப்பா இருப்பம்;

அப்பிடியே ஏரோப்பிளேன்ல போற மாதிரி இருக்கும்( இத சொன்ன நாயி மட்டக்களப்ப தாண்டி கூட இன்னமும் போகல , அவன் சொன்னத நான் நம்பி)

எனும் படியாய் " ஏசி பஸ்சை பிடிக்க பத்து காரணங்கள்  " எனும் படியாக அடுக்கிவிட்டார்கள் !!

பொரிச்ச நெத்தலிகருவாட்டுவாசம் ஊர்முழுக்கபரவுன மாதிரி என் மூளை , மூக்கு ஈரல் இதயம் கை கால் எல்லா இடத்துக்கும் "ஏசி பஸ் "ஆசை பரவி பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுது .
டிக்கெட் விலை 1000/= ஓவா! இதுதான் லவ் பண்னின புள்ளையிட்ட லவ் சொல்லபோக்க அவளுட  அடிதடி அண்ணன் குறுக்கவந்தமாதிரி  அடிவகுத்துக்குள்ள குறுகுறுக்கவைச்ச விடயமா இருந்தாலும்  . "நீ ஏசி பஸ்ல எல்லாம் போய் படிச்சு கிளிக்க வேனாம் வீட்டிலயே தின்னுட்டு கிட" எண்டெல்லாம் அம்மா ஏசாம காச தந்தாங்க ! (இப்பிடி சொன்னா நம்பிடவா போறீங்க ).

ரஜனி படத்துக்கு FDFS டிக்கெட் புக் பண்னின எபெட்ல அந்த ஏசி பஸ்க்கும் டிக்கெட் புக் செய்தாயிட்டு அந்த பொன்னான நாளும் வந்தாயிற்று
ஏற்கனவே இவனுக புல்லா ஏசி ஆகையால கை கால் எல்லாம் விறைச்சிபோயிடும், காதுக்கால குளிர் ஏறி   .......

எண்டெல்லாம் எச்சரிக்கை இல்லை கட்டளை எனும் படியாய் சொன்னதும் கட்டிலில் கிடந்த மெத்த பெரிய பெட்சீட்டை மடித்து இன்னும் பெரிய பையினுள் வைத்துக்கொண்டு ஒரு குருசேத்திர போருக்கே தயாராகினேன் .

சரியாய் 9:30 க்கு சொல்லிவைத்தது போல வந்துநின்றது அந்த பஸ் .கண்டக்டர்தான் சிங்களத்தில் ஏதோ கேட்டான் ! "கொழும்பு கொழும்பு புக்கிங் புக்கிங் சீட் நம்பர் ருவெண்டி;    ஓடிப்போன பொண்டாட்டிய தேடிப்போன புருசன் மாதிரி என் நாக்கு நாலைஞ்சு இங்கிலீசு சொல்ல தேடித்தேடி அலைஞ்சுது .
அவன் முகத்தில மலர்ச்சி! தன்ன விடவும் கேவல இங்கிலிசு கதைக்க ஒருத்தன் ஊருக்குள்ள இருக்கான்னு நினச்சு சிரிச்சிருப்பான் போல
அத விடவும் நம்ம கேனத்தனமா இங்கிலீச  புரிஞ்சிட்டான் எனும் விஸ்பரூபமலர்ச்சி எனக்கு

டிக்கியில bag க போடுவமா எண்டு சிங்களத்தில கேட்டிருப்பான் போல நானும் டிக்கெட் காசு கீசு குடுத்தாச்சா எண்டு கேட்கானோ எண்டு நினைச்சு பயத்தில பெரிய சத்தமாவே " ஓவ் ஓவ்" எண்டு மாட்டுவண்டி ஓட்ட, அந்த பெரிய bag க தூக்கி அவனும் டிக்கியில போட்டுட்டு வந்துட்டான்.

உள்ள ஏறினதும்
பெஸ்ட் நைட் ரூமுக்க வந்த புதுபொண்டாட்டி மாதிரி என் நிலமை இருந்துச்சு.
எங்க இருக்கிற , எத இழுக்கிற , எத வைக்கிற ஒண்டுமே விளங்கவும் இல்ல புரியவும் இல்ல ,மீண்டும் அவனேதான் வந்தான் , ஒரு சீட்டை காட்டிவிட்டான் போய் உட்காந்துகொண்டேன்.

பஸ்சில் கொழும்பு போகும் அந்த வழமையான அனுபவம் டோட்டலா மிஸ்ஸிங்
வெற்றிலை பாக்கு போட்டு துப்பி துப்பி பேசும் கண்டக்டர் இல்லை,பஸ்ல போற சிங்கள பைலா பாட்டு கடபுடா கடபுடா சத்ததையும் தாண்டி சைனா போனில் " காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே" வகை பாட்டு போடும் பக்கத்து சீட் காரர் இல்லை, வியர்க்குது எண்டு சொல்லி சேர்ட்டை கழட்டி வெறும் பனியனோடு உட்காந்திருக்கும் சனியன்கள் இல்லை, இது போக "பாஸ்போர்ட் எடுக்க போறன் பெரியப்பா அங்க போயிட்டு கோல் எடுக்கன்" மாதிரியான செல்போன் உரையாடல் இல்லை ,இதை விடவும் பஸ் ட்றைவருக்கு சுண்ணாம்பு தடவிகுடுக்கும் ஒரு அள்ளக்கை ,முதலாம் ரெண்டாம் நம்பர் இருக்கைகளில் இருக்கும் பெண்கள் அணியினர் என எதுவும் இல்லாமல் வெத்துவேட்டாய் இருந்தது அந்த பஸ்.

உட்காந்தாயிற்று! அட பரவாயில்லையே எனும் படியான சீட்; அதை அட்ஜெஸ்ட் செய்வதில்   என் அதிதீவிர சிக்ஸ்பக் தன ஜிம்மை காட்ட முயன்று கொண்டிருந்தேன் .பக்கத்துசீட்காரர் என்னை பாவமாய் பார்த்தார்,உள்ளே இருந்த மான மரியாதை ரோச நரம்பு நாடிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து "லொக் இறுகிட்டுது போல அதான் நிமித்தேலாம கிட்டகுதுன்னு "கேவமான ஒரு சமாளிபிக்கேசனை சொல்லியதுகள்

அப்பிடி இல்ல இத மெதுவா அமத்துங்க எண்டு சொல்லி  சின்னதாய் ஒரு நைஸ் சிமைல் செய்துவிட்டார்,அவமானம் அங்க இருந்தே சீவி சிங்காரிக்க தொடங்கியது.

கொஞ்சம்  கொஞ்சமாய் குளிர் ஏற ஆரம்பித்ததும்  தான்
ஆரம்பத்தில்  பஸ் கண்டக்டருடன் பேசிய  அரைகுறை  இங்கிலீசு தனது வேலைய  காட்டி விட்டதை  உணர்ந்தேன்  ,"தானறியா இங்கிலிசு  தன் புடரிக்கு  சேதம் " என  தமிழர் பெருமை  பேசும் பிரேசில்  நாட்டில்  கிடைத்த   கல்வெட்டு  மொழிகளுக்கு  ஏற்ப   எனக்கு  அந்த  அரைகுறை  இங்கிலிசு  மடிச்சு  வைச்ச பெட் -சீட்டை  எடுக்காமலே  பயணப்பையை   பஸ் -டிக்கிக்குள்ளே  போட வைத்துவிட்டது  .பக்கத்துக்கு  சீட்  காரர்  வேறு  பல்லைக்காட்டி  சிரிச்சாலே  பத்து லெட்சம் ரூவா  நட்டமாகி போயிடும் என்பது போல  ஒரு உம்மணா மூஞ்சியாக கற்பனை கடந்த  சோதியாக  காட்சி கொடுத்துகொண்டிருந்தார்.

குறுக்க கைய எப்ப கட்டினேன்னு  நினைவில்ல  கொஞ்சம் கொஞ்சமா  குளிர்  வேலைய காட்டி  காது  கன்னம்  குடல்  குந்தாணி  வரைக்கும்  தாக்குதல்  நடத்த  தொடங்கியது  .அடிக்குது  குளிரு துடிக்குது  தளிரு  பாட்டுக்கு  என்  மேல் கீழ் பல்லுகள் டுயட்  பாட தொடங்கியிருந்தன  .நாராயணா!!!!!!! நாராயணா  !!!  சேலை உருவினாதான்  ஏதும் துணி குடுப்பியா  எனக்கெல்லாம்  துணி  குடுக்கமாட்டியா  என  தீடிர் சாமி பக்தனா்னேன்  .என் குரல்  நாராயணனுக்கு  கேட்டுச்சோ இல்லையோ  பக்கத்துக்கு  சீட்  உம்மணா மூஞ்சி  அங்கிளுக்கு  கேட்டிருக்கும்  போல
தம்பி  இந்தாங்க  துவாய்  இத போர்த்து கொள்ளுங்க!என சொன்னதும் தான்  தாமதம் போர்வை என் உடம்பை  சுத்தியிருந்தது  .ஓட்டமாவடி  சாப்பாட்டு கடையில  நிப்பாடினா  பஸ் கொண்டக்கர் கிட்ட   கேட்டு  அந்த  டிக்கிக்குள்ள  கிடக்கிற  பெட் சீட் எடுத்து விட வேண்டியதுதான்  என  நினைத்தாலும்  எப்படி  போய்  அவனுட்ட கேக்கிறது

my bag  is inside the  dikki .please take that

எனக்கு  தெரிந்த ஓட்டு மொத்த இங்கிலிச  வடிச்சு எடுத்து  இந்த நாலு  வசனத்தையும்  பாடமாக்கி கொண்டிருந்தேன் .அதுக்குள்ளே  ஒரு டவுட்டு
take என்டு வருமா  இல்லை  took  என்டுவருமா  ??  பிரெசென்ட் டேன்ஸ்வருமா  ? பாஸ்ட் பார்டிசிபேட்  ல  has ,have போட்டு  வருமா ?  எண்டெல்லாம்  குழம்பி முடிவுக்கு வரமுதலே  சாப்பாடு கடயில பஸ்  நிப்பாடி பிரேக்  போட்டான்  .என்  கூட படிச்ச ஒருத்தனுக்கு  போன்  செய்துனைய  சொல்லி எப்படி சிங்களத்துல  கேட்கிறது  எண்டு  கேட்டன்  அவன்  சொன்னத  பார்த்தா   முத்து படத்துல  இரஜனி   "இறுக்கி அணைச்சு  ஒரு  உம்மா  கொடு   "  மாதிரி  மாட்டி  விட்டுடுவான்  போலவே  தோணியது  .

குதிச்சுடுடா கைப்புள்ள எண்டு நானேவே போய் அவனுட்ட கேட்டுடலாமெண்டு "பட்ஷா பாரு பாட்ஷா பாரு பால்வழியும் முகத்தபாரு " என சோகமான BGM பின்னால ஒலிக்க பஸ்ல இருந்து இறங்கினேன் , இந்த ஹொட்டல்ல ஓசியில தின்னனுமெண்டு காலையில இருந்து பட்டினி கிடந்திருப்பான் போல இறங்கி வார நேரத்துக்குள்ள  " ட் ரைவரும் கண்டக்டரும் மட்டும் வரவும் " எனும் போர்ட் இருந்த ரூமுக்குள் போய் விட்டான்.அவன் திரும்ப வருவதுக்கு இடையிலே வயிற்றுக்கு அப்லோடிங் , வயிற்றுக்கு கீழே டவுன்லோடிங் என்பன செய்ய கிடைத்தது. அந்தாட்டிக்கா கண்டத்துல பிறந்தவங்கதான் பஸ்ல வருவாங்கன்னு நினைச்சிருப்பானோ தெரியல ,வெப்பம் மைனஸ் செல்சியஸில் இருந்ததால் டவுன்லோட் செய்ய நிறைய "டேட்டா " இருந்தது. முழுவதும் டவுண்லோட் ஆகி மொபைல் டேட்டாவை ஓப் செய்து கொண்டேன்,இன்னமும் அவன் வெளியாக வில்லை.  லவ் பண்னின புள்ளை கிளாஸ் முடிஞ்சுவெளியில வாரத பார்க்க கூட இப்பிடி வெறிச்சு வெறிச்சு பார்த்து இருக்க மாட்டான் ;அந்த கொண்டக்டர பார்க்க வேண்டிய ஒரு குளிர்கால சூழ்நிலை.

கையில் ஒரு மணக்குச்சியோடு வந்தான் , அய்ய bag டிக்கி  எடுக்கனும் என என்னவோ எல்லாம் உளறினேன்!
என்ன அண்ணன் bag எடுக்கனுமா? கொச்சை தமிழில் பேசி எடுத்துகொடுத்தான். அந்நியன் போல இருந்தவன் இப்படி அம்பியாய் மாறி காட்சியளித்தான் .

கிளைமாக்ஸ் இப்பிடி இனிதாய் விக்கிரமன் படம் போல முடியுமென நான் நினைத்தே இருக்கவில்லை , பாலா படத்து ஹீரோ / கிளைமாக்ஸ் போல தான் இந்த பயணம் அமையுமென்றே நினைத்திருந்தேன் .


பெட்சீட் மணம் எல்லாம் தாண்டி நன்றாய் தூங்கியது, பக்கத்து உம்மனா மூஞ்சி அங்கிள் சிரித்தது என எல்லாம் சுபமாய் அந்த ஏசி பஸ்சில் போன முதல் இரவு முடிந்தாலும் இப்போதும் ஏசி பஸ்சில் போக கிடைத்தால் பெட் சீட் எடுக்க தவறுவதே இல்லை.