Saturday, December 19, 2015

பயங்கரவாதி

ஒருவழியாய் தடவித்தடவி எடுத்த டோர்ச் லைட்டை எடுத்து  சுவரில் தொங்கிய மணிக்கூட்டுக்கு குறிவைத்தான். நள்ளிரவு தாண்டியும் கொஞ்சமும் பயமே இல்லாது தன்னம் தனியாய் ஓடிக்கொண்டிருந்தது அந்த ஜீவன் ! இரண்டு மணிக்கு கிட்டே முள்ளுக்கள் ரெண்டும் முட்டிகொண்டு ஓடிகொண்டிருக்கும் இந்த நடு நிசிநேரத்தில் குமார் ஒருபோதும் தூக்கத்திலிருந்து இப்படி திடிரென முளிப்பது இல்லை .இருந்தாலும்; "டக் டக்" எனும் மின்விசிறி சத்தம் "ஹூஊ "எனும் நுளம்பு சத்தம் என பழகிபோன சப்தங்களை  தாண்டியும் சின்னதாய் கேட்கும் குசு குசு சத்தம் , கடக் கடக் என கேட்கும் புதிய வினோதமான சப்தங்களே இந்த திடீர் முழிப்புக்கு ஏதுவான காரணமாகி போயின.

என்னவாக இருக்கும் ?யாரும் கள்ளனுகளோ?? ஆர்மி இல்லாட்டி  எஸ்.ரி.எப்.மார் ரோட்டில நிக்கிறானுகளோ பல கேள்விகள் வந்து போயின. காதை கொஞ்சம் கூர்மையாக்கியபடி கேட்டுகொண்டிருந்தான் .சத்தம் கொஞ்சம் குறைந்து போக உள்ளூர சமாதானம் ஆகி மீண்டும் தூங்க ஆயத்தமாகி பெட்சீட்டை எடுத்த போதிலே அம்மாவின் மீது காலை போட்டு கொண்டு தூங்கும் தன் மகளை பார்த்ததும் தான் சற்று ஜோசிக்க ஆரம்பித்தான் , புள்ளையிட வருத்தம் சுகமாயிடனுமெண்டு காளிகோயிலுக்கு நேர்த்திகடனுக்காக விட்ட சாவலை அடிச்சிட்டு போக யாரும் வந்திருப்பானுகளோ எனவும் ஒரு ஜோசனை  ;ஆர்மிகாரன் ,எஸ் ரி எப் எல்லாம் திரியுற இந்த நட்ட நடு இரவுல  இவனுகள் எங்க வரபோறானுகள்  ?? தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிகொண்டு  அந்த குருட்டு இரவிலும் சாரனை சரியாய் கட்டிக்கொண்டான் ! 

சரி எதுக்கும் ஒரு எட்டு போய் கோழிகூட்ட பார்த்துட்டுவருவமே என  பின் பக்கத்து கதவின் வார்த்தடியை தூக்க ஆரம்பிக்கும் போது திரும்பவும் அதே   பேச்சு சத்தம் கேட்டது ஆனாலோ இந்த முறை அந்த கோழி கூடு இருக்கும் பக்கம் இல்லாது ரோட்டு பக்கமாய் கேட்டது , முதல் முறையாய் பயப்பட தொடங்கினான் ,யாராக இருக்கும்  ????

மரக்கதிரை ஒன்றை சத்தமே இல்லாது தூக்கி ஜன்னல் பக்கதிலே வைத்து சுவரின் பூக்கல் ஊடாக பார்க முயன்றான் , ஆட்கள் தென்படவே இல்லை இருட்டின் கருமை  அவனது வீட்டை சுற்றிவர ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. என்னதான் ஆள்நடமாட்டம் தெரியாவிட்டாலும் சின்னதான குசு குசு சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்கிறது .மனிசிய எழுப்பி விசயத்த சொல்ல நினைக்கும் போது சின்ன ஒரு லைட்டர் வெளிச்சமும் ரெண்டு பேரும் பக்கத்து பாள் கிடக்கும் வளவுக்குள் இருக்கும் இத்தி மரத்தடியிலே  ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது .

எல்லாம் விளங்கிட்டு குமாருக்கு ! !!  ரெண்டு இயக்க காரனுகள் கிளைமோர் குண்டு செட் பண்ணுறானுகள் . நாசமா போனவனுகள் இவனுக கிளைமோர் வைக்க நம்மட வீட்டு ஏரியாதானா  கிடைச்சுது. இது என்ன சோதனை?

வழக்கமாய் குமார்  இரவில் மெயின் ரோட்டில் இருக்கும் இந்த வீட்டில் தங்காம  இரவையாகினாலே பெட்டி படுக்க்கையோட மனிசியிட அண்ணண்ட வீட்ட போய்த்தான்  தூங்குவது ஊருக்கே தெரியும் ,யாரோ ஒரு இயக்கத்து வால் இத சொல்லித்தான் இவனுகள இங்க கூட்டி வந்திருப்பான் . நாசமா போனவன் கைல கிடைக்கட்டும் இருட்டடி எண்டான அடிக்கனும் என அவனை மனசுக்குள் திட்டி கொண்டே
நாளைக்கு காலையில "ஸ்கொட் " வார எஸ் ரி எப் க்கு தான் இந்த "கிளைமோர்" வைக்கானுகள்  போல என தலையில் கையை வைத்து கதிரையில் இருந்து இறங்கி மெதுவாய் மனிசிய மெதுவாய் தட்டினாள்  

பேசாமபடுங்க !! புள்ளை  எழும்பிடும் உங்களுக்கு எந்நேரமும் இந்த நினைப்புத்தான் என மனிசி தூக்க கலக்கதில்  உளறினாள் 

அடியேய் ! இது வேற விசயம்டி ! கொஞ்சம் எழும்பன் ,ஆறு மாசத்துக்கு முன்னே மார்கெட்டுக்கு முன்னுக்கு எஸ் .ரி.எப் ஒருத்தன இயக்ககாரனுகள் சுட்டு போட்டு ஓட ,அந்த சம்பவ இடத்துக்கு பக்கத்திலே நிண்ட குற்றத்துக்காக  எஸ்.ரி. எப் புடிச்சி போய் நாளு நாளைக்கு வைச்சி அடிச்ச அடி கண்ணுக்கு முன்னுக்கு வந்து போனது. எஸ்லோன் குழாய்ல சீமெண்ட் நிரப்பி படுக்க போட்டு முதுகுல அடிச்ச அடியால் இப்பவும் பாரம் ஒண்டும் தூக்க ஏலாம இருப்பதும் ,குத வழியில்  புகுத்திய உருக்கு குழாயினால் உண்டான வேதனை எல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்து மயிர் கூர்ச்செறிந்தது . 

கண்ணை கசக்கிகொண்டே  எழும்பி என்ன சொல்லுங்க என கேட்ட மனிசிக்கு விளக்கதினை சொல்லி முடிக்க முதலே கண்ணில இருந்து தண்ணிய கொட்ட தொடங்கிட்டாள் .எண்ட கண்ணகி அம்மாளே எங்கள காப்பாத்துப்பா!!!!!! அடுத்த நேர்த்திகடன் கூடி போனது .

கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் இப்போதைய நிலமைக்கு அதுதான் துணை ! முருகா முருகா என சொல்லி முளித்து கொண்டே இருந்தார்கள் புருசனும் பொண்டாட்டியும் .

காலையில நேரத்தோட போய் எஸ் ரி எப் ட சொல்லுங்கள் மனிசி  சின்ன ஜோசனை சொன்னாள் ,
சம்பந்தமே இல்லாமல் அண்டைக்கு யாரோ சுட்டதுக்து  தனக்கு அத்தனை அடி அடித்த அந்த எஸ் .ரி.எப்   சாவதில் எந்த வித மனவருத்தமோ அவனுக்கு உண்டாகுவதில் நியாயம் இருப்பாதாய் தெரியவில்லை கூடவே ஒட்டிகொண்டிருக்கும் ஈழ தாயக ஆசையும் சேர்ந்து மனிசியின் ஜோசனை நிராகரிக்க பட்டது . விடியச்சாமமே பெட்டி படுக்கையோட மனிசிட அண்ணண்ட வீட்டுக்கு போயிடுறது எண்டும் அங்கதான் இரவு தங்கின ஐயா! எங்களுக்கு ஒண்டும் தெரியா எண்டு சொல்லி தப்பலாமெனவும் முடிவாகி அதன் படியே எல்லாம் நடந்தது .

சிவப்பு வானம் விடிய தொடங்கியது ,குமாரின் குடும்பத்துக்கு மட்டும் அந்த நாள் ஏன் விடிந்தது என்பதாய் இருந்தது , வழக்கம்போல சாமன் சக்கட்டு எல்லாம் ஏத்திகொண்டு மார்கெட் வியாபாரத்துக்கு போய் விட்டார்கள் குமாரும் மனிசியும் . மார்கெட்டுக்கு பக்கதிலே சின்னதாய் ஒரு சில்லறை கடை அதில்தான் அவர்களில் சீவியம் ஓடிக்கொண்டிருந்தது. கடைக்கு பக்கதிலே வெத்திலை விக்கும் கனகம்மா கிழவி இருவரின் முகத்திலும் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டே பிடித்துவிட்டாள் ,கிழவியின் நச்சரிப்பு தாங்காமல் சொல்ல ஆரம்பித்த போதே குண்டு சத்தத்தில் மார்கெட் அதிர்ந்தது !!!!கூடவே குமாரும் மனிசியும் இன்னமும் கொஞ்சம் சேர்ந்து அதிர்ந்து போனார்கள் .

அரைமணி நேர துப்பாக்கி சூட்டு சத்தம் எல்லாம் தணிந்து அரசல் புரசலாய் ஸ்கொட் போன எஸ்டிஎப் ரெண்டு பேர் செத்துட்டானுகளாம் என கதை மார்கெட் முழுதும் பரவியது கூடவே அன்றைய மார்கெட் நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்து கடை சாமான்களை மூட்டை கட்டி கொண்டிருக்கும் போதே 

அடோ அடோ குமார் கோ!!

என கேட்டு கொண்டே மானை பிடிக்க வரும் சிங்கம்போலெ பாய்ந்து வந்து கொண்டிருந்தான் ஒரு எஸ்.டி.எப் , அது அவந்தான் கொஞ்ச நாளுக்கு முதல் தன்னை தலை கீழாய் தொங்க போட்டு வயிற்றில் துவக்கால் அடித்த அந்த முரடன் தான் வந்து கொண்டிருந்தான் .

அடோ உத்... புத்....  அங்க வீட்டு  பக்கதில கிளைமோர் வச்சிட்டு இங்க பிசினஸ் என அரைகுறை தமிழில் ஏசிக்கொண்டு துவக்கை நீட்டிய படியே வந்தான் அந்த கொலைகார எஸ்.டி.எப் , காலை பிடித்து கொண்டு கதறினாள் குமாரின் மனிசி 
சேர் எங்களுக்கு தெரியா சேர்
நாங்க இரவையில அங்க 
படுக்கிறல்ல சேர் எங்கள விடுங்க சேர்!!

அவளில் வயிற்றிலே பூட்ஸ் காலால் உதைத்ததில் கடை தகரத்தில் போய் மோதிக்கொண்டாள் ,குமாரை சேர்ட் கொலரில்  
இழுத்து பிடித்து கொண்டே போனான் அவன் , குமாருக்கு விளங்கிவிட்டது தன் வாழ்க்கை கடைசி நாள் இன்றுதான் என மகள கவனமாபார்த்குக்கோ என மனிசியிடம்  சொல்லிகொண்டே போனான் குமார் , அவளிடம் கடைசியாய் பேசிய வார்த்தை அதுதான் ஆனால் அதை கேட்கும் நிலையில் அவள் இல்லை . எஸ்.டி.எப் உதைத்த உதையில் மூர்ச்சையற்று போயிருந்தாள்.


தம்பி ! தம்பி நீ சொன்ன ஊர் வந்துடுச்சு பஸ் கொண்டக்ரர்  இறக்கி விட்டதும்தான் பழைய நினைவிலிருந்து மொத்தமாய் திரும்பினான் குமார்,  ஊர் மொத்தமாய் மாறி போயிருந்தது . மலைப்பாம்பு வீதிகள் மாடமதில்கள் என தன் வீட்டை தன்னாலே அடையாளம் காணாமல் தவித்து கொண்டே ஒரு சாப்பாடு கடைக்குள் புகுந்து கதிரையில் உட்காந்திருக்கும் போது ஓங்கி ஒலித்து கொண்டிருந்த   வானொலி செய்தியில்
"விடுதலை செய்யபட்ட அரசியல் கைதிகள் எல்லாம் புலி பயங்கரவாதிகள் எனவும் அவர்களை விடுதலை செய்தது தவறெனவும் " ஒரு இனவாதி பேட்டி கொடுத்து கொண்டிருந்தான் ! அப்படின்னா நானும் புலியா? ம்ம்ம் புலி பயங்கரவாதியா?? என தன்னை தானே கேட்ட படி  பிலேண்டி ஒன்றை  சுரத்தை  இல்லாமலே குடித்து முடித்து  . தனக்கு "பிணை"  தந்த அந்த புண்ணியவானுக்கும்  நன்றி சொல்லி கொண்டே வீட்டை தேடி  நடக்க தொடங்கினான்