Wednesday, October 7, 2015

உதவி !

அய்யலா ;அம்மால என ஆரம்பித்திருதான் ஒருத்தன், இன்னுமொருத்தன் சிங்களத்தில் அச்சடிக்கபட்ட காகித துண்டை பேருந்திலிருந்தவர்களுக்கு  விநியோகிக்க தொடங்கியிருந்தான். பேச்சுவாக்கில் யாரோ ஒரு சிறுமிக்கு கிட்னி பெயிலியர் என்றும் அதற்கு வைத்தியம் செய்யவெனவே உங்களிடம் காசு கேட்கிறோம்,  என அவர்கள் சொல்வது கொஞ்சம் புரிந்தாலும்  அவர்களின் நடை உடை பாவனை எல்லாமே சுத்த ஏமாத்துபேர்வழிகள்  போலவே இருப்பது நன்றாகவே தெரிந்தது.

அன்றாடம் கொழும்புக்கு வரும் போகும் பேருந்துகளில்  நடக்கும் சூட்சுமான ஏமாத்து நடவடிக்கை இதுவும் ஒன்று என்பதால் எல்லோரும் தத்தம் வேலையில் முழ்கி இருக்க , எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அறுபதுவயசை ஒத்த ஒருவரோ  கையில் இரண்டு நூறுரூபா தாளை எடுத்து வைத்திருந்தார். கட்டாயம் அவர்களுக்கு கொடுத்து விடுவார் என்றே தோன்றியது. 
உள்ளே போயிருந்த கன்னம், சேர்வ் செய்யபடாத வெள்ளை தாடி முகம், நன்றாய் களைப்படைந்த பொலிவற்ற தேகம் ,உடைகள் என எல்லாமே அவரின் வாழ்க்கை வறுமைகோட்டுகீழேதான் என்பதை உணர்த்தியே நின்றது.சீ பாவம் கஸ்டபட்டு உழைச்ச காச இப்பிடி குடுத்து ஏமாற போகிறார் எப்படியாவது தடுக்கவேனும் என நான் நினைத்த போதே தம்பி!!!!!  என அவர்களை அழைத்து  பணத்தை கொடுத்து ஒரு பெருமூச்சை விட்டுகொண்டார் அந்த வயசானவர் .


எனக்கு இருப்புகொள்ளவில்லை ; ஏன் கொடுத்தீர்கள் ? உங்களுக்கு இவர்கள் ஏமாத்துபேர்வழி என தெரியவில்லையா என கேட்க நினைத்தாலும் அவர் தமிழ்பேசுவாரா சிங்களம் பேசுவார என கணிக்க முடியாததால் உள்ளுக்குள் புழுங்கியது மனசு.

கொழும்பிலிருந்து மட்டகளப்பு போகும் அரச பேருந்து பஸ் என்பதால் தமிழ் பேசுபராய் இருக்கவே வாய்ப்பதிகம் என தோனியது .

ஐயா எவ்வடம் ? எங்க போறேள் ? மட்டகளப்புக்கா?

ஒம்தம்பி 

நானும் மட்டகளப்புக்குதான் போறன். ஏண்ட்டாப்பா அவனுகளுக்கு போய் அநியாயமா காச குடுத்தேள் ? பச்ச கள்ளனுகள் அவனுகள் உங்கட காசில கஞ்சாதான் அடிப்பானுகள் கள்ளனுகள்

தெரியும் தம்பி . பார்க்க அப்பிடித்தான் கிடக்கு  எண்டாலும்  சின்ன புள்ளைக்கு வருத்தம் எண்டு சொல்லிகாசு கேட்கானுகள் அதான் 

இப்ப எங்க இருந்து வாரியள்? 

கொழும்பு பெரியாஸ்பத்திரில இருந்து தம்பி, புள்ளையிட மகளுக்கு  சுமமில்ல வோர்ட்ல வைச்சி  ஒரு மாசமாகுது . ஒரு கிழமை இப்ப ஒப்பர்ரெசன் பண்ணி   . இப்ப மருமகன் காரனை துணைக்கு உட்டுட்டு  நான் ஊருக்கு போயிட்டு வர போறன் . பிச்சை காசு எடுக்க போகனும் ஏஜீஏ ஒப்பீஸ்ல.

என்ன பேத்திக்கு பெரிய வருத்தம் ஏதுமா ஐயா?

இதயத்தில ஒரு ஓட்டையாம் தம்பி 
கனகாலமா இந்த ஒப்பரேசன் செய்ய சொன்ன டாகுத்தர் . காசு இல்லாம கிடந்து மறுகா இப்பதான் ஒருமாதிரி காசு சேர்ந்து செய்திருக்கு 

எண்ட பேத்திக்கும் இவனுக சொல்லுற இதேமாதிரித்தான்   தம்பி!!! 
பேப்பர்ல எல்லாம் புள்ளையிட படத்த போட்டு சுகமில்ல ஒப்பிரேசனுக்கு காசு வேனுமெண்டு  சொல்லி  விளம்பரம் குடுத்துத்தான் காசு சேர்த்த , காசு தந்தவங்க எல்லாரும் இப்பிடி ஏமாத்துற எண்டு ஜோசிச்சிருந்தா இந்நேரம் எண்ட பேத்தி செத்துபோயிருப்பா.உண்மையோ பொய்யோ அதான் தம்பி அவனுகளுக்கும் காசு குடுத்தன்; அவனுகளுக்கு இந்த காச குடுத்த பொறவுதான் எனக்கு தெம்பா இருக்கு தெரியுமா 

அவரின் கண்ணீல் இருந்து வரும் நீரை துடைக்க  ஒர்மை இல்லாதவனாய் மாறிப்போயிருந்தேன் நான் .