Tuesday, October 13, 2015

மொட்டை கத்தரிகோல்

இந்தியா   தோல்வியடைவதை    தாங்கமுடியாத  ரசிகர்கள்  தண்ணீர்  போத்தல்களை  வீசி  போட்டிக்கு இடையுறு  விளைவித்தனர் எனும் கேவலமான விளையாட்டு செய்தி முதல்கொண்டு உலக சந்தையில்  கச்சா  எண்ணெய் விலை பரலுக்கு   இவ்வளவு டொலர் அதிகரிப்பு  வரையான  வணிக செய்திவரைக்கும்  வாசித்தது  போதாதென்று   மரணஅறிவித்தல்கள்  மற்றும் யாழ் இந்து வேளாளர் வயது 40 ,கனடா  குடியுரிமை பெற்ற  மணமகனுக்கு  என வரும்  மணமகன்/மணமகள் தேவை விளம்பரங்களையும் விட்டு வைக்காமல் வாசித்துவிட்டேன் .

செய்திகள் முழுவதையும் தின்று விட்டு பெரிய ஏப்பம்  விட்டு நிமிர்ந்து சலூன்காரரை பார்த்தேன் . சலூன் கடைகாரர் என் வயதை ஒத்த ஒருவனுக்கு முகத்திலே இன்னமும் கோலம் போட்டு கொண்டிருக்கிறார்  .
எனக்கு முன்பே கடைக்கு வந்து முடிவெட்ட காத்துகொண்டிருக்கும் இன்னும் மூன்று பேருக்கும் முடியும் வரை  இங்கேயே காத்திருப்பதானால் அந்த மணமகள்தேவை விளம்பர    யாழ் இந்து வேளாளர் வயது 40 கார மணமகனுக்கு பெண் கிடைத்துவிடும் என்றே தோன்றியது  . சுற்றி  சுற்றி அந்த  சலூன் கடையை பார்க்கிறேன் வழக்கமாக எல்லா கடைகளிலும் தொங்கும் அனுஸ்கா, நயந்தாரா படங்களோடான கலண்டர்களை கானவில்லை . நூற்றாண்டு பழமையான கட்டிங் ஸ்டைல் முறைகள் அடங்கிய போட்டோக்கள் கூடவே ,"தேவனிடத்தில் விஸ்வாசமாய் இருங்கள் " என  இருக்கும் ஸ்டிக்கர் வகைகள் தான் சுவர்களில் பல்லி போல் ஒட்டிஇருகின்றன.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 90 காலப்பகுதியிலெல்லாம் ஊரில் முடிவெட்ட சலூன்கடை  என்பதே இருக்கவில்லை . அந்த அவர்  ஒருவர் மட்டுமே  எல்லோரரின்  வீட்டுக்கு  வந்து முடி வெட்டிவிட்டு போவார்.அதனால்தான் என்னவோ   உங்கட ஊரே எண்ட  சொல்லுக்கு கட்டுபட்டு தலை ஆட்டுவாங்கடா என்று எங்களிடம் சொல்லிசிரிப்பார்   ." அம்பட்டன் கணேசன்" அப்படித்தான் அவர் பெயர் எனக்கு அறிமுகமானது .மழை பெய்து குளத்துக்குள் தண்ணீர் சேர வந்து சேரும் பறவை போல சரியாய் எங்கள் தலையில் முடி சேர்ந்த நேரத்துக்கு அவர் வீடுகளுக்கு வந்து சேருவார் .நீல நிற ஹீரோ சைக்கிள் அவருக்கு வாய்த்த பிஎம்டவிள்யூ கார்  .அந்த சைக்கிளுக்கு  கடைசியா எப்போது பிரேக் வேலை செய்ததென அவருக்கே  நினைவில் இருக்காது .செருப்பை  கிறவல் ரோட்டில் தேய்த்து பிரேக் அடிக்கும்  சத்தம் கேட்டாலே அவர் வருகிறார் என மதித்து விடலாம் .எங்கள் வீட்டுக்கு முன்னால் செருப்பை ரோட்டில் தேய்க்க தொடங்கினால் பக்கத்து கோவில் மூலையிலே போய் நிற்கும் அவரின் சைக்கிள் .அப்படி இருந்தாலும்  அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் , அப்பாவிடம்  கள்ளு , சீல் சாராயம்  குடிக்கவென காசு வாங்கி போவார் சிலவேளை ரெண்டு பேரும் சேர்ந்தே குடிக்க போவார்கள் . அதே சைக்கிளில் அப்பாவை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் பழக்கமும் வைத்திருந்தார் .
சனி ஞாயிறு தினங்கள் அவரின் வேலைபழு மிகுநாட்களானாலும் காலையிலே எட்டு மணிபோல தொழில் செய்ய இருக்கும் வீடுகளுக்கு நேரத்துக்கேவந்து விடுவார். "பன்" நாரினால் பின்னபட்ட கைபிடி வைத்த ஒரு பையினுள்ளே அவரின் தொழில் ஆயுதங்கள் எல்லாம் சுற்றி சைக்கிள்  கரியரில்   இறப்பர் பட்டியினால் இறுக்க கட்டியபடி  இணைத்திருக்கும்.  அவர் எங்களுக்கு முடிவெட்ட வருவது பற்றி அப்பா முதல்நாளே எங்களுக்கு சொல்லிவிடுவார்  

"நாளைக்கு கணேசன் வருவான் தலைமயிர் வெட்ட , விளையாட கிளையாட போயிடாம வீட்ட நில்லுங்க"

உரிமட்டையில் இருந்து தும்பை கிளித்து எடுப்பது அப்போதைய என் வயதுக்கு ஐம்பது கிலோ சீமேந்து மூடையை தனியே தூக்குவது போல. முடிவெட்ட எதிர்பார்த்திருக்கும் அண்ணாமார் தும்பை பிய்த்து எடுத்து வீட்டு விறாந்தையில்  லங்காரானி பவுடர், உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி சகிதம் அவரை எதிர்பார்த்து இருப்பார்கள் . நானோ உரிமட்டையிலிருந்து தும்பெடுக்க முயன்று அமுதம்  கடைந்த தேவ,அசுர சேனைகள் போல வியர்த்து கொட்டி நிற்பேன். பரிதாபபட்ட ஒரு அண்ணா வந்து  பிய்த்து கொடுத்துவிட்டு போவான் .அந்த நேரத்தில் அவனில் இடத்தை இன்னுமொரு அண்ணா பிடித்து கொள்வான் , யார் முதலில் முடிவெட்டி விட்டு விளையாட ஓடுவது என்பதே அவர்களில் தலையாய  பிரச்சனை 


சம்மர்கட், பொண்டிங் தாடி, பெக்கம் கட் என அவருக்கு எதுவும் தெரியாது.அத்தோடு அப்போதெல்லாம் சேவிங் மெசின் , றீம்மர் என எதுவும் அவரிடம் இருக்கவில்லை மாறாக ஒரு கையில் கத்தரிகோல், மறுகையில் சீப்பு இதெல்லாம் போக வாயிலே பீடி வேறு ஒட்டிகொண்டிருக்கும் .சில பொழுதுகளில் அவருக்கு பிடித்த பாடல்களை பாடிகொண்டே முடிவெட்டுவதில் அலாதி இன்பம் அவருக்கு   .அநேகமாய்    அவர்  "சொந்தமும் இல்லே பந்தமும்  இல்லே  சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்  " பாட்டை  கரகர  இருமல்  குரலோடு பாடி கொண்டே  எங்களுக்கு முடிவெட்ட ஆரம்பிப்பார்   .அவர் மூலமாகதான்  அப்படி ஒரு பாட்டே  இருப்பதாய் எனக்கு தெரியவந்தது  வேறுகதை.

சேர்ட் , டீ சேர்ட் கழட்டி விட்டு தனியே கால்சட்டையோடு  ஒரு மரகுத்தி ஒன்றில் குந்தியபடி இருப்போம்  .தலையில் நீர் தெளித்து அபிசேகத்துடன்ஆரம்பித்த பூஜையானது   கத்தரிகோல் சீப்பு முதலியவற்றை கொண்டு  எங்கள் தலையில் பரதநாட்டியம் ,குச்சுபுடி, கதகளி எல்லாம் ஆடி கடைசியாய் சவரகத்தியால் ஓரங்களில் ரத்தபலி எடுக்கபட்டு  இனிதே வெறும் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் முடிந்திருக்கும் . ரத்தம் வடிவதை தடுக்க லங்காராணி பவுடர், உடம்பில் ஒட்டிய முடிகளை தட்டிவிட அந்த உரிமட்டை தும்பு என ஏற்பாடுகளையும் சேர்த்து பதினைந்து இருபது நிமிடங்களில் மூன்று நாலு பேருக்கு வெட்டி முடிந்து புறப்பட ஆயத்தமாயிருப்பார்; அதற்கான காசு , பணமெல்லாம் ஏலவே கொடுக்கபட்டு குடிக்கபட்டிருக்கலாம் அல்லது இனித்தான் கொடுக்கப்பட குடிக்கபட காத்திருக்கலாம் .தம்பி !! தம்பி உங்களத்தான்  நீங்க வாங்க ;அவங்க பிறகு வெட்டிகொள்ளுவாங்க என கடைக்காரர் அழைத்தது நினைவிலிருந்த என்னை நனவுக்கு கொண்டுவந்தது  

 எப்பிடி தம்பி சேவ் எடுக்கவோ?

ஓம் ஓம் கொஞ்சம் றீம் பண்ணிவிடுங்க போதும் ,அவர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது 

உங்களுக்கு கணேசன்னன தெரியுமோ? சின்ன வயசுல முதலெல்லாம் எங்க வீட்டுக்கு எல்லாம் வந்து முடி வெட்டிவுடுறவர் இப்போ ஆள் எங்க எண்டே தெரியலடாப்பா   இருக்காரா இல்ல செத்துட்டாரோ  தெரியல  என சலூன்காரரிடம்  கேட்க நினைத்தேன் !! 

தள்ளி இருந்த  ரேடியோவில் இருந்து     "சொந்தமும் இல்லை பந்தமும் இல்ல சொன்ன இடத்தில்  அமர்ந்து கொள்கிறார் நாங்க  மந்திரி இல்ல மன்னர்கள் இல்ல"""    என  பாடல்  ஒலிக்க தொடங்கியது  .ஆமாம் அந்த கணேசன்  அண்ணன்  எங்கேயோ  உயிரோடுதான்  இருப்பார்  என  நம்பிக்கை  பிறந்தது  .
Wednesday, October 7, 2015

உதவி !

அய்யலா ;அம்மால என ஆரம்பித்திருதான் ஒருத்தன், இன்னுமொருத்தன் சிங்களத்தில் அச்சடிக்கபட்ட காகித துண்டை பேருந்திலிருந்தவர்களுக்கு  விநியோகிக்க தொடங்கியிருந்தான். பேச்சுவாக்கில் யாரோ ஒரு சிறுமிக்கு கிட்னி பெயிலியர் என்றும் அதற்கு வைத்தியம் செய்யவெனவே உங்களிடம் காசு கேட்கிறோம்,  என அவர்கள் சொல்வது கொஞ்சம் புரிந்தாலும்  அவர்களின் நடை உடை பாவனை எல்லாமே சுத்த ஏமாத்துபேர்வழிகள்  போலவே இருப்பது நன்றாகவே தெரிந்தது.

அன்றாடம் கொழும்புக்கு வரும் போகும் பேருந்துகளில்  நடக்கும் சூட்சுமான ஏமாத்து நடவடிக்கை இதுவும் ஒன்று என்பதால் எல்லோரும் தத்தம் வேலையில் முழ்கி இருக்க , எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அறுபதுவயசை ஒத்த ஒருவரோ  கையில் இரண்டு நூறுரூபா தாளை எடுத்து வைத்திருந்தார். கட்டாயம் அவர்களுக்கு கொடுத்து விடுவார் என்றே தோன்றியது. 
உள்ளே போயிருந்த கன்னம், சேர்வ் செய்யபடாத வெள்ளை தாடி முகம், நன்றாய் களைப்படைந்த பொலிவற்ற தேகம் ,உடைகள் என எல்லாமே அவரின் வாழ்க்கை வறுமைகோட்டுகீழேதான் என்பதை உணர்த்தியே நின்றது.சீ பாவம் கஸ்டபட்டு உழைச்ச காச இப்பிடி குடுத்து ஏமாற போகிறார் எப்படியாவது தடுக்கவேனும் என நான் நினைத்த போதே தம்பி!!!!!  என அவர்களை அழைத்து  பணத்தை கொடுத்து ஒரு பெருமூச்சை விட்டுகொண்டார் அந்த வயசானவர் .


எனக்கு இருப்புகொள்ளவில்லை ; ஏன் கொடுத்தீர்கள் ? உங்களுக்கு இவர்கள் ஏமாத்துபேர்வழி என தெரியவில்லையா என கேட்க நினைத்தாலும் அவர் தமிழ்பேசுவாரா சிங்களம் பேசுவார என கணிக்க முடியாததால் உள்ளுக்குள் புழுங்கியது மனசு.

கொழும்பிலிருந்து மட்டகளப்பு போகும் அரச பேருந்து பஸ் என்பதால் தமிழ் பேசுபராய் இருக்கவே வாய்ப்பதிகம் என தோனியது .

ஐயா எவ்வடம் ? எங்க போறேள் ? மட்டகளப்புக்கா?

ஒம்தம்பி 

நானும் மட்டகளப்புக்குதான் போறன். ஏண்ட்டாப்பா அவனுகளுக்கு போய் அநியாயமா காச குடுத்தேள் ? பச்ச கள்ளனுகள் அவனுகள் உங்கட காசில கஞ்சாதான் அடிப்பானுகள் கள்ளனுகள்

தெரியும் தம்பி . பார்க்க அப்பிடித்தான் கிடக்கு  எண்டாலும்  சின்ன புள்ளைக்கு வருத்தம் எண்டு சொல்லிகாசு கேட்கானுகள் அதான் 

இப்ப எங்க இருந்து வாரியள்? 

கொழும்பு பெரியாஸ்பத்திரில இருந்து தம்பி, புள்ளையிட மகளுக்கு  சுமமில்ல வோர்ட்ல வைச்சி  ஒரு மாசமாகுது . ஒரு கிழமை இப்ப ஒப்பர்ரெசன் பண்ணி   . இப்ப மருமகன் காரனை துணைக்கு உட்டுட்டு  நான் ஊருக்கு போயிட்டு வர போறன் . பிச்சை காசு எடுக்க போகனும் ஏஜீஏ ஒப்பீஸ்ல.

என்ன பேத்திக்கு பெரிய வருத்தம் ஏதுமா ஐயா?

இதயத்தில ஒரு ஓட்டையாம் தம்பி 
கனகாலமா இந்த ஒப்பரேசன் செய்ய சொன்ன டாகுத்தர் . காசு இல்லாம கிடந்து மறுகா இப்பதான் ஒருமாதிரி காசு சேர்ந்து செய்திருக்கு 

எண்ட பேத்திக்கும் இவனுக சொல்லுற இதேமாதிரித்தான்   தம்பி!!! 
பேப்பர்ல எல்லாம் புள்ளையிட படத்த போட்டு சுகமில்ல ஒப்பிரேசனுக்கு காசு வேனுமெண்டு  சொல்லி  விளம்பரம் குடுத்துத்தான் காசு சேர்த்த , காசு தந்தவங்க எல்லாரும் இப்பிடி ஏமாத்துற எண்டு ஜோசிச்சிருந்தா இந்நேரம் எண்ட பேத்தி செத்துபோயிருப்பா.உண்மையோ பொய்யோ அதான் தம்பி அவனுகளுக்கும் காசு குடுத்தன்; அவனுகளுக்கு இந்த காச குடுத்த பொறவுதான் எனக்கு தெம்பா இருக்கு தெரியுமா 

அவரின் கண்ணீல் இருந்து வரும் நீரை துடைக்க  ஒர்மை இல்லாதவனாய் மாறிப்போயிருந்தேன் நான் .


Thursday, October 1, 2015

சிறுவர்கள் தினமாம்

இன்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும்

ஒரு நேரத்து  உணவுக்காய் தெருவோரத்தில்
யாரிடமோ கையேந்தி
ஒரு சிறுவன் நிற்கலாம்

இன்னுமாடா  வேலைய முடிக்கல??என
ஒரு முதலாளி ஒரு சிறுவனை
ஏசவோ அடிக்கவோ செய்யலாம்

ஆசை வார்த்தை காட்டிய காமுகன்
யாரோ ஒரு சிறுமியை
துஸ்பிரயோகம் செய்யலாம்

அந்த சிறுவர்களுக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இன்று தங்களை  கொண்டாடும்
சிறுவர் தினமென !