Monday, September 28, 2015

ஒரு டவுசர் கிழிந்த கதை

அப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க  போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ  பள்ளிகூடத்து யூனிபோர்மான  நீல கால்சட்டைதான் ரவுசர், டெனிம் எல்லாமே! எப்படா நாமளும் இப்பிடி ரவுசர் ஒன்ன வாங்கி போடுறன்னு நினைச்சு நினைச்சு "இதயம் பட முரளி " மாதிரி உருகி உருகி "டவுசரே என் டவுசரேன்னு" பாட்டு பாடியே திரிஞ்சுகிட்டு இருந்தேன் . அப்போதைய என் குடும்ப நிலமைக்கு  நொக்கியா 1100 மொடல் மொபைலே பெரிசு  எதுக்கு ஐபோனுக்கு எல்லாம்  ஆசைப்பட என்கிற   மாதிரித்தான் என் ஜீன்ஸ் ஆசையும் இருந்துச்சு ,அதால என் டவுசர் ஆசைய கிணத்து தண்ணியில கழுவிட்டு பள்ளிக்கால்சட்டையிலே துடைச்சிகிட்டன்.  

 .மொபைல் போன்ல "போல்டர் லொக்"  போட்டு பிட்டு படத்த பூட்டி வைக்கிற மாதிரி நானும் என் டவுசர் ஆசைய மனசுக்குள்ள பூட்டு போட்டே வச்சிருப்பன் .தைப்பொங்கல் சித்திரைவருசம் வர போகுது எண்டாலே  திரும்பவும் என் மனசுக்குள்ள ஓரமா டவுசர் போடுற  ஆசை நைலோன் கயிற்றுல ஊஞ்சல் கட்டி  ஆடும் . எப்படியாச்சும் இந்த முறை அப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த டவுசர வாங்கி ரெண்டு காலையும் அதுக்குள்ள பூத்திட்டு நிண்டு ஒரு போட்டோ எடுக்கோனும் அதுதான் என் வாழ்க்கை உயர்ந்த லெட்சியமாவே அப்போ இருந்துச்சு. உடல் ரவுசருக்கு உயிரும் ரவுசருக்கே !!  அப்பிடின்னு வாய் மட்டுமில்ல உடம்பில இருக்கிற மூனுலட்சத்து மூப்பத்து மூனு கோடி செல் களும் ஒன்னு சேர்ந்து கோசம் போட்ட காலம்.  ஆனாலோ ஒவ்வொரு சித்திரைக்கும் , தைப்பொங்கலுக்கும்  டீ சேர்டோ அல்லது கால்சட்டையோதான் அம்மா கையால கிடைக்கும் . அப்பிடியே மனசுக்குள்ள ஓரத்தில ஊஞ்சல் ஆடிகிடந்த ரவுசர் ஆசை சூத்தடிபட கீழே உளுந்து கிடக்கும் . 

வரிசையா இருந்த அண்ணன்மாரின் ரவுசரை போட ஆசை இருந்தாலும் என் தன்மானம் ரெண்டு பேர் இருக்கவேண்டிய பஸ் சீட்ல உட்காந்திருக்கிற மெகாசைஸ் குண்டன் மாதிரி என ஆசைய கொஞ்சம் ஓரத்திலே உட்கார வச்சிருந்துச்சு . போனது போகட்டும் வருவது வரட்டும் என அண்ணாட ரவுசர எடுத்து போட நினைச்சப்பதான்  , முட்டுகட்டையா ஒரு விசயமே வந்துச்சு. ஜட்டி எனும் வஸ்துவை போட்டாத்தான் டவுசர் போடனுமாம் . அடச்சீ இந்த சுகந்திர இலங்கை திருநாட்டில் ஒரு மனிசன் ரவுசர் போட இவ்வளவோ பிரச்சனைய சமாளிக்கவேண்டி இருக்குதேன்னு நினைச்ச போதுதான் ஜட்டி மேட்டர்ல அவமானபட்ட  இன்னுமொரு மிகப்பெரிய சம்பவம் நினைவுக்கு வந்துச்சு.


என் கிளாஸ்ரூம்ல கொஞ்சம் உயரமா இருக்கிறதாலயோ என்னவோ  , ரவுண்டப் பண்ணி வந்த ஆர்மிகாரன் ரெயினிங் எடுத்த இயக்க காரனை விட்டு போட்டு  சும்மா இருக்கிற அப்பாவிய எட்டி புடிக்கிற மாதிரி எங்க P.T மாஸ்டர் என்னைய கபடி ரீமுக்கு செலட் செய்ய ,வருங்காலத்துல நாமளும் ஒரு சச்சினோ சங்ககாரவாகவோ ஆகிடலாமுன்னு மூளைய சுத்தி கலர் கலரா பட்டாம்பூச்சி வட்டமிட்டு ஆசைய தூண்ட  நானும் சரியின்னு  தலைய ஆட்டும் போது ஒரு நாள் இந்த கபடியால அவமானபடுவேன்னு என் மனசுக்குள்ள உட்காந்துருந்த நஸ்டராம்ஸ் சொல்லல.
ட் ரெயினிங் சீசன்  எல்லாம் நல்லபடியா போய்முடிச்சிட்டன் , விஜய்காந் மாதிரி பின்காலால எட்டி உதைக்கிறது, குருவி விஜய் மாதிரி அந்திரத்தில பறக்குறது அப்பிடியெல்லாம்  இல்லாம சும்மா ஹீரோ கையால அடிவாங்கன்னு வந்த வில்லனின் அடியாட்கள்ல நானும் ஒருத்தன் மாதிரிதான் அந்த கபடி மெட்சுக்கு செலக்ட் ஆகி போனேன். மெட்ச்க்கு டீம் செலக்ட் செய்யும் போதே என் முகத்த உத்து பார்த்தே , அந்த P.T வாத்தி நீ இங்கயே உட்காந்து தண்ணி கிண்னீ கேட்டா எடுத்து குடுன்னு சொல்லி என் சச்சின் டெண்டுல்கர் ஆசையிலே  5 லிட்டர்  மினரல் வோட்டர  ஊத்திட்டு போயிட்டான்.

உலகத்திலே இருக்கிற ஒட்டுமொத்த தெய்வத்தையும் கூப்பிட்டு ஓப்பாரி வைச்சு அழுதுச்சு என் மனசு, அப்பதான் என் மனசுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த கருப்பு ஆடு  முழிச்சி டீம்ல விளையாடுற யாருக்காச்சும் அடிபட்டு காயப்பட்டா நீதாண்டா விளையாடோனும் அப்பிடின்னு "கோலிங் பெல்" அடிச்சுவிட்டுச்சு.அக்கணமே என் வேண்டுதலோ யாருக்காச்சும் அடிபட்டுடனும் அவன் காயப்படோனும்
என டைவேர்ட் ஆனது, அம்மன் கோவிலுக்கு காவடி எடுப்பேன்னு கூட வேண்டிகிட்ட போது கூட அப்பிடி ஒரு அவமானம் நிகழுமென நினைச்சு கூட பார்கல.

நான் வச்ச வேண்டுதல் தெய்வங்களுக்கு கேட்டுச்சோ இல்லையோ எதிரணியில விளையாடுன ஒருத்தனுக்கு கேட்டிருக்கோனும் ! எங்க அணியில "ரைடு " போயிட்டு கோட்ட தொடப்போனவனை படக்கூடாத இடத்துல புடிச்சி இழுத்து அவனை அவுட் ஆக்க , ஆளும் அவுட் ஆகி அவனின் அந்தரங்க உறுப்பும் அவுட் ஆகிற நிலமைக்கு வந்துட்டான் .டீம்ல எல்லோரும் அப்செட் ஆகி போனாங்க , அவுட் ஆகின அவந்தான் கொஞ்சம் நல்லா விளையாட கூடியவன் .அவங்க எல்லோரும் சோகமா இருந்தாலும் நானோ உள்ளுக்குள்ள ஒரே பாட்டுல பணக்காரர் ஆன படையப்பா ரஜனி போல ஆகிட்டேன். என்னதான் இருந்தாலும் சோகமா மூஞ்ச வச்சிகிட்டு P.T வாத்தி கிட்ட போய் சேர்!! நான் இருக்கன் சேர் என் உயிரே போனாலும் சரி இந்த மெட்ச் வின் பண்ணுறம் சேர் என சொல்ல அவர் முகத்திலே பெரிய மிரட்சி ,அம்பி மாதிரி குந்திட்டு இருந்தவன் இப்போ அந்நியன் மாதிரி பேசுனா எப்பிடி? மிரளதானே செய்வார் . சரி சரி நீ விளையாடு என ஒரு வித தயக்கதோடே அனுப்பி வைச்சார் 

சுறா படத்துல விஜய் இன்ரோ சீன்ல தண்ணியே பிச்சிட்டு மேல பாய்ஞ்ச மாதிரியே கபடி கிரெண்டுக்குள்ள நான் பாய்ஞ்சி ஒரு வழியா பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு நின்னு எதிராளி ஒருத்தன கோழி அமுக்கிற மாதிரி அமுக்க உதவி செய்ய பார்த்துட்டு இருந்த P.T மாஸ்டர் மெல்ல மெல்ல சந்திரமுகியா மாறிக்கிட்டு வரும் உங்க மனைவி கங்காவ பாருங்கன்னு பக்கதிலே நிக்கிறவர் கிட்ட என்னை பத்தி சொல்வது போலவே பட்டுச்சு ! மொத்ததுல என்னைய ரொம்ம நல்லவன்னு நம்பிட்டாங்கன்னு நினைச்ச போதே  நானும் "ரைட் " போக வேண்டிய துர்ப்பார்கிய சூழ்நிலை உண்டாது . 

என் மைண்ட்ல கில்லி விஜய் ரொம்ம ஆழமா  போய் உட்காந்து கிட்டு போ போ போய் அவனதொடுன்னு ஓடர் போட்டுகிட்டு இருந்தாத்  மனசு பூரா வெறி இத விட்டா நீ சச்சின் மாதிரி ஆக வேற சான்ஸ் இல்ல விட்டுடாத சங்கர்னு சுத்திநிக்கிற மூனு லெச்சத்து மூப்பத்து முக்கோடி தேவர்களும்  சேர்ந்து கரகோஷம் போட்டாங்க  

கபடி கபடி கபடி சொல்லிக்கொண்டே என்  வலதுகால வைச்சே( முதல் முதலா வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கிற செண்டிமெண்ட்) உள்ள போயிட்டன் .அங்க எதிர்பக்கதிலே இருந்த நாலு பேரு நாலாயிரம் பேர தெரிஞ்சானுக எல்லாம் பயம் செய்யுற வேலை . கையும் ஓடல காலும் ஓடல எனும் மூத்தோர் வாக்கை முழுசா அனுபவிச்ச நேரம் அது . அப்போதான் விளங்கிச்சு எனக்கும் "பில்டிங் ஸ்ரோங்கு பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குன்னு" . மூச்ச புடிச்சிகிட்ட வலப்பக்கம் இடப்பக்கமுன்னு மாறி மாறி ஓடி ஒரு கட்டதுல ஏதாச்சும் உருப்படியா செய்வமேன்னு சூசைட் பண்ண முடிவெடுத்துது மனசு உள்கோட்டுல நிக்கிறவன் கால முன்னுக்கு வைச்சி டாண்ஸ் ஆடிட்டு இருப்பத ஒத்த கண்னாலே கண்டு மீனு சிக்கிடும் தூண்டில எட்டி போட்டுபார்க்கலாமேன்னு .அவன் காலை  என் காலாலே  நசிச்சி விடுவோமுன்னு கொஞ்சம் எட்டி அகட்டி கால வச்சன் பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு சத்தம் என் மானம் மரியாதை எல்லாமே கீழால கிழிஞ்சு போன கால்சட்டை வழியா எதிரணி கோட்டுக்குள்ள கீழ வந்து கிடந்துச்சு 

உலகத்திலே இருக்கிற் ஒட்டு மொத்த ஜீவராசியும் ஒன்னா சேர்ந்து "கொல்" என சிரிச்ச மாதிரி இருந்துச்சு எதிரணி முதல் கொண்டு என் அணி ஆட்கள் வரை சிரிச்சு என் மானம் ரோசம் எல்லாம் இப்பிடி கவுட்டுக்குள்ளால வெளிய வந்து கிடந்துச்சு . என் P.T வாத்தி கிட்ட வந்து டேய் தம்பி ஜட்டி எல்லாம் போட மாட்டியான்னு கேட்டார் 

மார்பிலே பாய்ந்த அம்பை புடிச்சிட்டு தேர்சில்லு அடியிலே சரிஞ்சு கிடக்கிற கர்ணன் போல என் கால்சட்டை ஓட்டைய பொத்திபுடிச்சிட்டு  கபடி கோர்ட்டுக்கு வெளியில இருந்தேன் .துரியோததன் சபையிலே துகில் உரியப்பட்ட திரெளபதையா நான் பரிதவிச்சு நின்றப்ப ;ஆபத்தாண்டவனா என் P.T வாத்தியாரே இன்னுமொரு சோர்ட்ஸ் மாதிரி கொண்டு வந்து தந்து இத போட்டு விளையாடுன்னு 
சொல்லும் போதே மனசு  "நன்றிசொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" ன்னு பாட்டு பாடியது .

மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியா அவமானம் அது !!!!!  அடுத்த தீபாவளியே சொந்தமா ரவுசர் போட்டாலும் அந்த கபடி விளையாட்ட டீ வியிலே பார்க்கும் போதெல்லாம் இப்போவும் ரவுசர் போட நான் பட்ட பாடு நினைவுக்கு வரும் ஆனாலும்  ! நாளாக நாளாக  "இதுவும் கடந்துபோம்"  எனும் போர்மியுலாவில் அந்த சம்பவம் கடந்து போய்விட்டது அதையெல்லாம்   தாண்டி இப்போ  டெனிம் ,அது இதுன்னு ஜீன்ஸ்  போட்டாலும்  இப்போ கூட புதுசா ஜீன்ஸ்  வாங்கும் போது அந்த கபடி முதல் ரவுசர் வரை நினையாமல் இருந்ததில்லை .ஆயிரம் சுகம் தரும் ஒரு அனுபவ  புதையல் அது !!!