Saturday, December 19, 2015

பயங்கரவாதி

ஒருவழியாய் தடவித்தடவி எடுத்த டோர்ச் லைட்டை எடுத்து  சுவரில் தொங்கிய மணிக்கூட்டுக்கு குறிவைத்தான். நள்ளிரவு தாண்டியும் கொஞ்சமும் பயமே இல்லாது தன்னம் தனியாய் ஓடிக்கொண்டிருந்தது அந்த ஜீவன் ! இரண்டு மணிக்கு கிட்டே முள்ளுக்கள் ரெண்டும் முட்டிகொண்டு ஓடிகொண்டிருக்கும் இந்த நடு நிசிநேரத்தில் குமார் ஒருபோதும் தூக்கத்திலிருந்து இப்படி திடிரென முளிப்பது இல்லை .இருந்தாலும்; "டக் டக்" எனும் மின்விசிறி சத்தம் "ஹூஊ "எனும் நுளம்பு சத்தம் என பழகிபோன சப்தங்களை  தாண்டியும் சின்னதாய் கேட்கும் குசு குசு சத்தம் , கடக் கடக் என கேட்கும் புதிய வினோதமான சப்தங்களே இந்த திடீர் முழிப்புக்கு ஏதுவான காரணமாகி போயின.

என்னவாக இருக்கும் ?யாரும் கள்ளனுகளோ?? ஆர்மி இல்லாட்டி  எஸ்.ரி.எப்.மார் ரோட்டில நிக்கிறானுகளோ பல கேள்விகள் வந்து போயின. காதை கொஞ்சம் கூர்மையாக்கியபடி கேட்டுகொண்டிருந்தான் .சத்தம் கொஞ்சம் குறைந்து போக உள்ளூர சமாதானம் ஆகி மீண்டும் தூங்க ஆயத்தமாகி பெட்சீட்டை எடுத்த போதிலே அம்மாவின் மீது காலை போட்டு கொண்டு தூங்கும் தன் மகளை பார்த்ததும் தான் சற்று ஜோசிக்க ஆரம்பித்தான் , புள்ளையிட வருத்தம் சுகமாயிடனுமெண்டு காளிகோயிலுக்கு நேர்த்திகடனுக்காக விட்ட சாவலை அடிச்சிட்டு போக யாரும் வந்திருப்பானுகளோ எனவும் ஒரு ஜோசனை  ;ஆர்மிகாரன் ,எஸ் ரி எப் எல்லாம் திரியுற இந்த நட்ட நடு இரவுல  இவனுகள் எங்க வரபோறானுகள்  ?? தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிகொண்டு  அந்த குருட்டு இரவிலும் சாரனை சரியாய் கட்டிக்கொண்டான் ! 

சரி எதுக்கும் ஒரு எட்டு போய் கோழிகூட்ட பார்த்துட்டுவருவமே என  பின் பக்கத்து கதவின் வார்த்தடியை தூக்க ஆரம்பிக்கும் போது திரும்பவும் அதே   பேச்சு சத்தம் கேட்டது ஆனாலோ இந்த முறை அந்த கோழி கூடு இருக்கும் பக்கம் இல்லாது ரோட்டு பக்கமாய் கேட்டது , முதல் முறையாய் பயப்பட தொடங்கினான் ,யாராக இருக்கும்  ????

மரக்கதிரை ஒன்றை சத்தமே இல்லாது தூக்கி ஜன்னல் பக்கதிலே வைத்து சுவரின் பூக்கல் ஊடாக பார்க முயன்றான் , ஆட்கள் தென்படவே இல்லை இருட்டின் கருமை  அவனது வீட்டை சுற்றிவர ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. என்னதான் ஆள்நடமாட்டம் தெரியாவிட்டாலும் சின்னதான குசு குசு சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்கிறது .மனிசிய எழுப்பி விசயத்த சொல்ல நினைக்கும் போது சின்ன ஒரு லைட்டர் வெளிச்சமும் ரெண்டு பேரும் பக்கத்து பாள் கிடக்கும் வளவுக்குள் இருக்கும் இத்தி மரத்தடியிலே  ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது .

எல்லாம் விளங்கிட்டு குமாருக்கு ! !!  ரெண்டு இயக்க காரனுகள் கிளைமோர் குண்டு செட் பண்ணுறானுகள் . நாசமா போனவனுகள் இவனுக கிளைமோர் வைக்க நம்மட வீட்டு ஏரியாதானா  கிடைச்சுது. இது என்ன சோதனை?

வழக்கமாய் குமார்  இரவில் மெயின் ரோட்டில் இருக்கும் இந்த வீட்டில் தங்காம  இரவையாகினாலே பெட்டி படுக்க்கையோட மனிசியிட அண்ணண்ட வீட்ட போய்த்தான்  தூங்குவது ஊருக்கே தெரியும் ,யாரோ ஒரு இயக்கத்து வால் இத சொல்லித்தான் இவனுகள இங்க கூட்டி வந்திருப்பான் . நாசமா போனவன் கைல கிடைக்கட்டும் இருட்டடி எண்டான அடிக்கனும் என அவனை மனசுக்குள் திட்டி கொண்டே
நாளைக்கு காலையில "ஸ்கொட் " வார எஸ் ரி எப் க்கு தான் இந்த "கிளைமோர்" வைக்கானுகள்  போல என தலையில் கையை வைத்து கதிரையில் இருந்து இறங்கி மெதுவாய் மனிசிய மெதுவாய் தட்டினாள்  

பேசாமபடுங்க !! புள்ளை  எழும்பிடும் உங்களுக்கு எந்நேரமும் இந்த நினைப்புத்தான் என மனிசி தூக்க கலக்கதில்  உளறினாள் 

அடியேய் ! இது வேற விசயம்டி ! கொஞ்சம் எழும்பன் ,ஆறு மாசத்துக்கு முன்னே மார்கெட்டுக்கு முன்னுக்கு எஸ் .ரி.எப் ஒருத்தன இயக்ககாரனுகள் சுட்டு போட்டு ஓட ,அந்த சம்பவ இடத்துக்கு பக்கத்திலே நிண்ட குற்றத்துக்காக  எஸ்.ரி. எப் புடிச்சி போய் நாளு நாளைக்கு வைச்சி அடிச்ச அடி கண்ணுக்கு முன்னுக்கு வந்து போனது. எஸ்லோன் குழாய்ல சீமெண்ட் நிரப்பி படுக்க போட்டு முதுகுல அடிச்ச அடியால் இப்பவும் பாரம் ஒண்டும் தூக்க ஏலாம இருப்பதும் ,குத வழியில்  புகுத்திய உருக்கு குழாயினால் உண்டான வேதனை எல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்து மயிர் கூர்ச்செறிந்தது . 

கண்ணை கசக்கிகொண்டே  எழும்பி என்ன சொல்லுங்க என கேட்ட மனிசிக்கு விளக்கதினை சொல்லி முடிக்க முதலே கண்ணில இருந்து தண்ணிய கொட்ட தொடங்கிட்டாள் .எண்ட கண்ணகி அம்மாளே எங்கள காப்பாத்துப்பா!!!!!! அடுத்த நேர்த்திகடன் கூடி போனது .

கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் இப்போதைய நிலமைக்கு அதுதான் துணை ! முருகா முருகா என சொல்லி முளித்து கொண்டே இருந்தார்கள் புருசனும் பொண்டாட்டியும் .

காலையில நேரத்தோட போய் எஸ் ரி எப் ட சொல்லுங்கள் மனிசி  சின்ன ஜோசனை சொன்னாள் ,
சம்பந்தமே இல்லாமல் அண்டைக்கு யாரோ சுட்டதுக்து  தனக்கு அத்தனை அடி அடித்த அந்த எஸ் .ரி.எப்   சாவதில் எந்த வித மனவருத்தமோ அவனுக்கு உண்டாகுவதில் நியாயம் இருப்பாதாய் தெரியவில்லை கூடவே ஒட்டிகொண்டிருக்கும் ஈழ தாயக ஆசையும் சேர்ந்து மனிசியின் ஜோசனை நிராகரிக்க பட்டது . விடியச்சாமமே பெட்டி படுக்கையோட மனிசிட அண்ணண்ட வீட்டுக்கு போயிடுறது எண்டும் அங்கதான் இரவு தங்கின ஐயா! எங்களுக்கு ஒண்டும் தெரியா எண்டு சொல்லி தப்பலாமெனவும் முடிவாகி அதன் படியே எல்லாம் நடந்தது .

சிவப்பு வானம் விடிய தொடங்கியது ,குமாரின் குடும்பத்துக்கு மட்டும் அந்த நாள் ஏன் விடிந்தது என்பதாய் இருந்தது , வழக்கம்போல சாமன் சக்கட்டு எல்லாம் ஏத்திகொண்டு மார்கெட் வியாபாரத்துக்கு போய் விட்டார்கள் குமாரும் மனிசியும் . மார்கெட்டுக்கு பக்கதிலே சின்னதாய் ஒரு சில்லறை கடை அதில்தான் அவர்களில் சீவியம் ஓடிக்கொண்டிருந்தது. கடைக்கு பக்கதிலே வெத்திலை விக்கும் கனகம்மா கிழவி இருவரின் முகத்திலும் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டே பிடித்துவிட்டாள் ,கிழவியின் நச்சரிப்பு தாங்காமல் சொல்ல ஆரம்பித்த போதே குண்டு சத்தத்தில் மார்கெட் அதிர்ந்தது !!!!கூடவே குமாரும் மனிசியும் இன்னமும் கொஞ்சம் சேர்ந்து அதிர்ந்து போனார்கள் .

அரைமணி நேர துப்பாக்கி சூட்டு சத்தம் எல்லாம் தணிந்து அரசல் புரசலாய் ஸ்கொட் போன எஸ்டிஎப் ரெண்டு பேர் செத்துட்டானுகளாம் என கதை மார்கெட் முழுதும் பரவியது கூடவே அன்றைய மார்கெட் நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்து கடை சாமான்களை மூட்டை கட்டி கொண்டிருக்கும் போதே 

அடோ அடோ குமார் கோ!!

என கேட்டு கொண்டே மானை பிடிக்க வரும் சிங்கம்போலெ பாய்ந்து வந்து கொண்டிருந்தான் ஒரு எஸ்.டி.எப் , அது அவந்தான் கொஞ்ச நாளுக்கு முதல் தன்னை தலை கீழாய் தொங்க போட்டு வயிற்றில் துவக்கால் அடித்த அந்த முரடன் தான் வந்து கொண்டிருந்தான் .

அடோ உத்... புத்....  அங்க வீட்டு  பக்கதில கிளைமோர் வச்சிட்டு இங்க பிசினஸ் என அரைகுறை தமிழில் ஏசிக்கொண்டு துவக்கை நீட்டிய படியே வந்தான் அந்த கொலைகார எஸ்.டி.எப் , காலை பிடித்து கொண்டு கதறினாள் குமாரின் மனிசி 
சேர் எங்களுக்கு தெரியா சேர்
நாங்க இரவையில அங்க 
படுக்கிறல்ல சேர் எங்கள விடுங்க சேர்!!

அவளில் வயிற்றிலே பூட்ஸ் காலால் உதைத்ததில் கடை தகரத்தில் போய் மோதிக்கொண்டாள் ,குமாரை சேர்ட் கொலரில்  
இழுத்து பிடித்து கொண்டே போனான் அவன் , குமாருக்கு விளங்கிவிட்டது தன் வாழ்க்கை கடைசி நாள் இன்றுதான் என மகள கவனமாபார்த்குக்கோ என மனிசியிடம்  சொல்லிகொண்டே போனான் குமார் , அவளிடம் கடைசியாய் பேசிய வார்த்தை அதுதான் ஆனால் அதை கேட்கும் நிலையில் அவள் இல்லை . எஸ்.டி.எப் உதைத்த உதையில் மூர்ச்சையற்று போயிருந்தாள்.


தம்பி ! தம்பி நீ சொன்ன ஊர் வந்துடுச்சு பஸ் கொண்டக்ரர்  இறக்கி விட்டதும்தான் பழைய நினைவிலிருந்து மொத்தமாய் திரும்பினான் குமார்,  ஊர் மொத்தமாய் மாறி போயிருந்தது . மலைப்பாம்பு வீதிகள் மாடமதில்கள் என தன் வீட்டை தன்னாலே அடையாளம் காணாமல் தவித்து கொண்டே ஒரு சாப்பாடு கடைக்குள் புகுந்து கதிரையில் உட்காந்திருக்கும் போது ஓங்கி ஒலித்து கொண்டிருந்த   வானொலி செய்தியில்
"விடுதலை செய்யபட்ட அரசியல் கைதிகள் எல்லாம் புலி பயங்கரவாதிகள் எனவும் அவர்களை விடுதலை செய்தது தவறெனவும் " ஒரு இனவாதி பேட்டி கொடுத்து கொண்டிருந்தான் ! அப்படின்னா நானும் புலியா? ம்ம்ம் புலி பயங்கரவாதியா?? என தன்னை தானே கேட்ட படி  பிலேண்டி ஒன்றை  சுரத்தை  இல்லாமலே குடித்து முடித்து  . தனக்கு "பிணை"  தந்த அந்த புண்ணியவானுக்கும்  நன்றி சொல்லி கொண்டே வீட்டை தேடி  நடக்க தொடங்கினான்


Tuesday, November 17, 2015

சூரன் போர் எதிர் ISIS

மச்சான் கேளு !!!!!
நம்ம உலகத்தில கறுப்பர்கள்(ஆசியர்களையும் சேர்த்து ) வெள்ளையர்கள்என ரெண்டு நிறபிரிவு இருக்கிறா போல ,விண்ணுலகத்திலும் அசுரர்கள் ,தேவர்கள் என ரெண்டு பிரிவு இருக்கு( இருக்காம்)
வெள்ளையர்களுக்கு எப்பிடி அமெரிக்கா , பிரித்தானியா எல்லாம் பெரிய ஆட்களோ அதே போல தேவர்குலத்துக்கும் சிவபெருமான் உமாதேவி என ரெண்டு மூனு பெரியவங்க இருக்காங்க ...இதுல என்ன சிக்கல் எண்டு நீ கேட்கிறது விளங்குது
நமக்கு கீழ இருக்கிறவன் நல்லபடியா பிரச்சனை இல்லாம இருந்தா நம்மள தேடி வருவானா? இல்ல ஆக இவங்க ரெண்டுபேருமே அடுத்தவங்க கூட்டத்த குழப்பி சண்டை பிடிக்க வைச்சு குளிர்காய நினைச்சாங்க
அதாவது அல்கொய்தா, தலிபான், பலஸ்தீன சண்டை, இந்தியா பாக்கிஸ்தான் சண்டை, சூடான் , சோமாலியா சண்டைக்கெல்லாம் உள்ளாலே அமெரிக்கா ஆயுதங்கள் சப்பிளை செய்யுற மாதிரி
சிவபெருமானும் தன்ன நோக்கி தவம் இருக்கிற அசுரர்களுக்கு அந்த அஸ்திரம் இந்த அஸ்திரம் , சாகாவரம் என ஆயுதங்கள குடுத்து அவனுகட அசுரர்குலத்துக்குள்ள சண்டை வரட்டுமே என வேலைய காட்டினார் .
ஆனா ரியாலிட்டி வேற மாதிரி இருந்துச்சு தங்களுக்குள்ளே போரிட்டு அலுத்து போன கீழைத்தேயத்து உதாரணமா ISIS தீவிரவாதி போன்றவங்க தங்கள் கட்டுபாட்டுக்குள்ளே முழு உலகமும் இருக்கனும் எனவும் தங்க ஏரியாவுக்கு வந்த வெள்ளையன் தலைய வெட்டுறது, நிக்கவைச்சு அறுக்கிறது (தலையத்தான்) என வெள்ளையனுக்கும் தங்கட கைவரிசைய காட்டினாங்கதானே இதே போல சூரன் போன்ற அரக்கனும் தேவர்கள புடிச்சி சிறை வைக்கிறது , தேவர்குல பெண்கள பாலியல்பலாத்காரம் செய்யுறது, விண்ணுலத்தை தங்கள் கட்டுபாட்டுக்கு கீழ கொண்டுவாரது என ஒரே தொல்லையா இருந்தான் .
வெள்ளையர்கள் எனும் மேலைதேயத்தவர்கள இப்பிடி கொடுமை படுத்த தாங்க முடியா வெள்ளையர்கள் வெகுண்டெழுந்து அமெரிக்கா கிட்ட போய் முறையிட அமெரிக்கா தான் போகாம தண்ட சொந்தகார "நேட்டோ படையை" அனுப்பி அவங்கள அழிக்க முயற்சி செய்யுது ஆனா முடியல
இதே போலத்தான் அசுரர் தொல்லையில இருந்து தங்களுக்கு விடுதலை இல்லையா என தேவர்குலம் சிவபெருமானிட்ட முறையிட அவரோ தான் போறது முறையில்ல எண்ட மகன் அனுப்பிவிடுறன்னு ஒருத்தர அனுப்பினார் !! வருவாண்டா இந்த கொடுமையெல்லாம் தீர்க்க வேலாயுதம் வருவாண்டா என தேவர்குலம் இருக்க
நேட்டோ படை போல முருகன் வந்து இறங்கி சூரன் எனும் அசுரனை கொன்று வீழ்த்தினார்
சரியா மச்சான் விளங்கிட்டா ?
சூரன் போர் பற்றி விளக்கம் கேட்ட சக மதத்தினை சேர்ந்த நண்பனுக்கு நான் சொன்ன விளக்கம்

Tuesday, October 13, 2015

மொட்டை கத்தரிகோல்

இந்தியா   தோல்வியடைவதை    தாங்கமுடியாத  ரசிகர்கள்  தண்ணீர்  போத்தல்களை  வீசி  போட்டிக்கு இடையுறு  விளைவித்தனர் எனும் கேவலமான விளையாட்டு செய்தி முதல்கொண்டு உலக சந்தையில்  கச்சா  எண்ணெய் விலை பரலுக்கு   இவ்வளவு டொலர் அதிகரிப்பு  வரையான  வணிக செய்திவரைக்கும்  வாசித்தது  போதாதென்று   மரணஅறிவித்தல்கள்  மற்றும் யாழ் இந்து வேளாளர் வயது 40 ,கனடா  குடியுரிமை பெற்ற  மணமகனுக்கு  என வரும்  மணமகன்/மணமகள் தேவை விளம்பரங்களையும் விட்டு வைக்காமல் வாசித்துவிட்டேன் .

செய்திகள் முழுவதையும் தின்று விட்டு பெரிய ஏப்பம்  விட்டு நிமிர்ந்து சலூன்காரரை பார்த்தேன் . சலூன் கடைகாரர் என் வயதை ஒத்த ஒருவனுக்கு முகத்திலே இன்னமும் கோலம் போட்டு கொண்டிருக்கிறார்  .
எனக்கு முன்பே கடைக்கு வந்து முடிவெட்ட காத்துகொண்டிருக்கும் இன்னும் மூன்று பேருக்கும் முடியும் வரை  இங்கேயே காத்திருப்பதானால் அந்த மணமகள்தேவை விளம்பர    யாழ் இந்து வேளாளர் வயது 40 கார மணமகனுக்கு பெண் கிடைத்துவிடும் என்றே தோன்றியது  . சுற்றி  சுற்றி அந்த  சலூன் கடையை பார்க்கிறேன் வழக்கமாக எல்லா கடைகளிலும் தொங்கும் அனுஸ்கா, நயந்தாரா படங்களோடான கலண்டர்களை கானவில்லை . நூற்றாண்டு பழமையான கட்டிங் ஸ்டைல் முறைகள் அடங்கிய போட்டோக்கள் கூடவே ,"தேவனிடத்தில் விஸ்வாசமாய் இருங்கள் " என  இருக்கும் ஸ்டிக்கர் வகைகள் தான் சுவர்களில் பல்லி போல் ஒட்டிஇருகின்றன.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 90 காலப்பகுதியிலெல்லாம் ஊரில் முடிவெட்ட சலூன்கடை  என்பதே இருக்கவில்லை . அந்த அவர்  ஒருவர் மட்டுமே  எல்லோரரின்  வீட்டுக்கு  வந்து முடி வெட்டிவிட்டு போவார்.அதனால்தான் என்னவோ   உங்கட ஊரே எண்ட  சொல்லுக்கு கட்டுபட்டு தலை ஆட்டுவாங்கடா என்று எங்களிடம் சொல்லிசிரிப்பார்   ." அம்பட்டன் கணேசன்" அப்படித்தான் அவர் பெயர் எனக்கு அறிமுகமானது .மழை பெய்து குளத்துக்குள் தண்ணீர் சேர வந்து சேரும் பறவை போல சரியாய் எங்கள் தலையில் முடி சேர்ந்த நேரத்துக்கு அவர் வீடுகளுக்கு வந்து சேருவார் .நீல நிற ஹீரோ சைக்கிள் அவருக்கு வாய்த்த பிஎம்டவிள்யூ கார்  .அந்த சைக்கிளுக்கு  கடைசியா எப்போது பிரேக் வேலை செய்ததென அவருக்கே  நினைவில் இருக்காது .செருப்பை  கிறவல் ரோட்டில் தேய்த்து பிரேக் அடிக்கும்  சத்தம் கேட்டாலே அவர் வருகிறார் என மதித்து விடலாம் .எங்கள் வீட்டுக்கு முன்னால் செருப்பை ரோட்டில் தேய்க்க தொடங்கினால் பக்கத்து கோவில் மூலையிலே போய் நிற்கும் அவரின் சைக்கிள் .அப்படி இருந்தாலும்  அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் , அப்பாவிடம்  கள்ளு , சீல் சாராயம்  குடிக்கவென காசு வாங்கி போவார் சிலவேளை ரெண்டு பேரும் சேர்ந்தே குடிக்க போவார்கள் . அதே சைக்கிளில் அப்பாவை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் பழக்கமும் வைத்திருந்தார் .
சனி ஞாயிறு தினங்கள் அவரின் வேலைபழு மிகுநாட்களானாலும் காலையிலே எட்டு மணிபோல தொழில் செய்ய இருக்கும் வீடுகளுக்கு நேரத்துக்கேவந்து விடுவார். "பன்" நாரினால் பின்னபட்ட கைபிடி வைத்த ஒரு பையினுள்ளே அவரின் தொழில் ஆயுதங்கள் எல்லாம் சுற்றி சைக்கிள்  கரியரில்   இறப்பர் பட்டியினால் இறுக்க கட்டியபடி  இணைத்திருக்கும்.  அவர் எங்களுக்கு முடிவெட்ட வருவது பற்றி அப்பா முதல்நாளே எங்களுக்கு சொல்லிவிடுவார்  

"நாளைக்கு கணேசன் வருவான் தலைமயிர் வெட்ட , விளையாட கிளையாட போயிடாம வீட்ட நில்லுங்க"

உரிமட்டையில் இருந்து தும்பை கிளித்து எடுப்பது அப்போதைய என் வயதுக்கு ஐம்பது கிலோ சீமேந்து மூடையை தனியே தூக்குவது போல. முடிவெட்ட எதிர்பார்த்திருக்கும் அண்ணாமார் தும்பை பிய்த்து எடுத்து வீட்டு விறாந்தையில்  லங்காரானி பவுடர், உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி சகிதம் அவரை எதிர்பார்த்து இருப்பார்கள் . நானோ உரிமட்டையிலிருந்து தும்பெடுக்க முயன்று அமுதம்  கடைந்த தேவ,அசுர சேனைகள் போல வியர்த்து கொட்டி நிற்பேன். பரிதாபபட்ட ஒரு அண்ணா வந்து  பிய்த்து கொடுத்துவிட்டு போவான் .அந்த நேரத்தில் அவனில் இடத்தை இன்னுமொரு அண்ணா பிடித்து கொள்வான் , யார் முதலில் முடிவெட்டி விட்டு விளையாட ஓடுவது என்பதே அவர்களில் தலையாய  பிரச்சனை 


சம்மர்கட், பொண்டிங் தாடி, பெக்கம் கட் என அவருக்கு எதுவும் தெரியாது.அத்தோடு அப்போதெல்லாம் சேவிங் மெசின் , றீம்மர் என எதுவும் அவரிடம் இருக்கவில்லை மாறாக ஒரு கையில் கத்தரிகோல், மறுகையில் சீப்பு இதெல்லாம் போக வாயிலே பீடி வேறு ஒட்டிகொண்டிருக்கும் .சில பொழுதுகளில் அவருக்கு பிடித்த பாடல்களை பாடிகொண்டே முடிவெட்டுவதில் அலாதி இன்பம் அவருக்கு   .அநேகமாய்    அவர்  "சொந்தமும் இல்லே பந்தமும்  இல்லே  சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்  " பாட்டை  கரகர  இருமல்  குரலோடு பாடி கொண்டே  எங்களுக்கு முடிவெட்ட ஆரம்பிப்பார்   .அவர் மூலமாகதான்  அப்படி ஒரு பாட்டே  இருப்பதாய் எனக்கு தெரியவந்தது  வேறுகதை.

சேர்ட் , டீ சேர்ட் கழட்டி விட்டு தனியே கால்சட்டையோடு  ஒரு மரகுத்தி ஒன்றில் குந்தியபடி இருப்போம்  .தலையில் நீர் தெளித்து அபிசேகத்துடன்ஆரம்பித்த பூஜையானது   கத்தரிகோல் சீப்பு முதலியவற்றை கொண்டு  எங்கள் தலையில் பரதநாட்டியம் ,குச்சுபுடி, கதகளி எல்லாம் ஆடி கடைசியாய் சவரகத்தியால் ஓரங்களில் ரத்தபலி எடுக்கபட்டு  இனிதே வெறும் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் முடிந்திருக்கும் . ரத்தம் வடிவதை தடுக்க லங்காராணி பவுடர், உடம்பில் ஒட்டிய முடிகளை தட்டிவிட அந்த உரிமட்டை தும்பு என ஏற்பாடுகளையும் சேர்த்து பதினைந்து இருபது நிமிடங்களில் மூன்று நாலு பேருக்கு வெட்டி முடிந்து புறப்பட ஆயத்தமாயிருப்பார்; அதற்கான காசு , பணமெல்லாம் ஏலவே கொடுக்கபட்டு குடிக்கபட்டிருக்கலாம் அல்லது இனித்தான் கொடுக்கப்பட குடிக்கபட காத்திருக்கலாம் .தம்பி !! தம்பி உங்களத்தான்  நீங்க வாங்க ;அவங்க பிறகு வெட்டிகொள்ளுவாங்க என கடைக்காரர் அழைத்தது நினைவிலிருந்த என்னை நனவுக்கு கொண்டுவந்தது  

 எப்பிடி தம்பி சேவ் எடுக்கவோ?

ஓம் ஓம் கொஞ்சம் றீம் பண்ணிவிடுங்க போதும் ,அவர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது 

உங்களுக்கு கணேசன்னன தெரியுமோ? சின்ன வயசுல முதலெல்லாம் எங்க வீட்டுக்கு எல்லாம் வந்து முடி வெட்டிவுடுறவர் இப்போ ஆள் எங்க எண்டே தெரியலடாப்பா   இருக்காரா இல்ல செத்துட்டாரோ  தெரியல  என சலூன்காரரிடம்  கேட்க நினைத்தேன் !! 

தள்ளி இருந்த  ரேடியோவில் இருந்து     "சொந்தமும் இல்லை பந்தமும் இல்ல சொன்ன இடத்தில்  அமர்ந்து கொள்கிறார் நாங்க  மந்திரி இல்ல மன்னர்கள் இல்ல"""    என  பாடல்  ஒலிக்க தொடங்கியது  .ஆமாம் அந்த கணேசன்  அண்ணன்  எங்கேயோ  உயிரோடுதான்  இருப்பார்  என  நம்பிக்கை  பிறந்தது  .
Wednesday, October 7, 2015

உதவி !

அய்யலா ;அம்மால என ஆரம்பித்திருதான் ஒருத்தன், இன்னுமொருத்தன் சிங்களத்தில் அச்சடிக்கபட்ட காகித துண்டை பேருந்திலிருந்தவர்களுக்கு  விநியோகிக்க தொடங்கியிருந்தான். பேச்சுவாக்கில் யாரோ ஒரு சிறுமிக்கு கிட்னி பெயிலியர் என்றும் அதற்கு வைத்தியம் செய்யவெனவே உங்களிடம் காசு கேட்கிறோம்,  என அவர்கள் சொல்வது கொஞ்சம் புரிந்தாலும்  அவர்களின் நடை உடை பாவனை எல்லாமே சுத்த ஏமாத்துபேர்வழிகள்  போலவே இருப்பது நன்றாகவே தெரிந்தது.

அன்றாடம் கொழும்புக்கு வரும் போகும் பேருந்துகளில்  நடக்கும் சூட்சுமான ஏமாத்து நடவடிக்கை இதுவும் ஒன்று என்பதால் எல்லோரும் தத்தம் வேலையில் முழ்கி இருக்க , எனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அறுபதுவயசை ஒத்த ஒருவரோ  கையில் இரண்டு நூறுரூபா தாளை எடுத்து வைத்திருந்தார். கட்டாயம் அவர்களுக்கு கொடுத்து விடுவார் என்றே தோன்றியது. 
உள்ளே போயிருந்த கன்னம், சேர்வ் செய்யபடாத வெள்ளை தாடி முகம், நன்றாய் களைப்படைந்த பொலிவற்ற தேகம் ,உடைகள் என எல்லாமே அவரின் வாழ்க்கை வறுமைகோட்டுகீழேதான் என்பதை உணர்த்தியே நின்றது.சீ பாவம் கஸ்டபட்டு உழைச்ச காச இப்பிடி குடுத்து ஏமாற போகிறார் எப்படியாவது தடுக்கவேனும் என நான் நினைத்த போதே தம்பி!!!!!  என அவர்களை அழைத்து  பணத்தை கொடுத்து ஒரு பெருமூச்சை விட்டுகொண்டார் அந்த வயசானவர் .


எனக்கு இருப்புகொள்ளவில்லை ; ஏன் கொடுத்தீர்கள் ? உங்களுக்கு இவர்கள் ஏமாத்துபேர்வழி என தெரியவில்லையா என கேட்க நினைத்தாலும் அவர் தமிழ்பேசுவாரா சிங்களம் பேசுவார என கணிக்க முடியாததால் உள்ளுக்குள் புழுங்கியது மனசு.

கொழும்பிலிருந்து மட்டகளப்பு போகும் அரச பேருந்து பஸ் என்பதால் தமிழ் பேசுபராய் இருக்கவே வாய்ப்பதிகம் என தோனியது .

ஐயா எவ்வடம் ? எங்க போறேள் ? மட்டகளப்புக்கா?

ஒம்தம்பி 

நானும் மட்டகளப்புக்குதான் போறன். ஏண்ட்டாப்பா அவனுகளுக்கு போய் அநியாயமா காச குடுத்தேள் ? பச்ச கள்ளனுகள் அவனுகள் உங்கட காசில கஞ்சாதான் அடிப்பானுகள் கள்ளனுகள்

தெரியும் தம்பி . பார்க்க அப்பிடித்தான் கிடக்கு  எண்டாலும்  சின்ன புள்ளைக்கு வருத்தம் எண்டு சொல்லிகாசு கேட்கானுகள் அதான் 

இப்ப எங்க இருந்து வாரியள்? 

கொழும்பு பெரியாஸ்பத்திரில இருந்து தம்பி, புள்ளையிட மகளுக்கு  சுமமில்ல வோர்ட்ல வைச்சி  ஒரு மாசமாகுது . ஒரு கிழமை இப்ப ஒப்பர்ரெசன் பண்ணி   . இப்ப மருமகன் காரனை துணைக்கு உட்டுட்டு  நான் ஊருக்கு போயிட்டு வர போறன் . பிச்சை காசு எடுக்க போகனும் ஏஜீஏ ஒப்பீஸ்ல.

என்ன பேத்திக்கு பெரிய வருத்தம் ஏதுமா ஐயா?

இதயத்தில ஒரு ஓட்டையாம் தம்பி 
கனகாலமா இந்த ஒப்பரேசன் செய்ய சொன்ன டாகுத்தர் . காசு இல்லாம கிடந்து மறுகா இப்பதான் ஒருமாதிரி காசு சேர்ந்து செய்திருக்கு 

எண்ட பேத்திக்கும் இவனுக சொல்லுற இதேமாதிரித்தான்   தம்பி!!! 
பேப்பர்ல எல்லாம் புள்ளையிட படத்த போட்டு சுகமில்ல ஒப்பிரேசனுக்கு காசு வேனுமெண்டு  சொல்லி  விளம்பரம் குடுத்துத்தான் காசு சேர்த்த , காசு தந்தவங்க எல்லாரும் இப்பிடி ஏமாத்துற எண்டு ஜோசிச்சிருந்தா இந்நேரம் எண்ட பேத்தி செத்துபோயிருப்பா.உண்மையோ பொய்யோ அதான் தம்பி அவனுகளுக்கும் காசு குடுத்தன்; அவனுகளுக்கு இந்த காச குடுத்த பொறவுதான் எனக்கு தெம்பா இருக்கு தெரியுமா 

அவரின் கண்ணீல் இருந்து வரும் நீரை துடைக்க  ஒர்மை இல்லாதவனாய் மாறிப்போயிருந்தேன் நான் .


Thursday, October 1, 2015

சிறுவர்கள் தினமாம்

இன்றும் உலகின் ஒவ்வொரு மூலையிலும்

ஒரு நேரத்து  உணவுக்காய் தெருவோரத்தில்
யாரிடமோ கையேந்தி
ஒரு சிறுவன் நிற்கலாம்

இன்னுமாடா  வேலைய முடிக்கல??என
ஒரு முதலாளி ஒரு சிறுவனை
ஏசவோ அடிக்கவோ செய்யலாம்

ஆசை வார்த்தை காட்டிய காமுகன்
யாரோ ஒரு சிறுமியை
துஸ்பிரயோகம் செய்யலாம்

அந்த சிறுவர்களுக்கு  தெரிந்திருக்க வாய்ப்பில்லை
இன்று தங்களை  கொண்டாடும்
சிறுவர் தினமென !
Monday, September 28, 2015

ஒரு டவுசர் கிழிந்த கதை

அப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க  போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ  பள்ளிகூடத்து யூனிபோர்மான  நீல கால்சட்டைதான் ரவுசர், டெனிம் எல்லாமே! எப்படா நாமளும் இப்பிடி ரவுசர் ஒன்ன வாங்கி போடுறன்னு நினைச்சு நினைச்சு "இதயம் பட முரளி " மாதிரி உருகி உருகி "டவுசரே என் டவுசரேன்னு" பாட்டு பாடியே திரிஞ்சுகிட்டு இருந்தேன் . அப்போதைய என் குடும்ப நிலமைக்கு  நொக்கியா 1100 மொடல் மொபைலே பெரிசு  எதுக்கு ஐபோனுக்கு எல்லாம்  ஆசைப்பட என்கிற   மாதிரித்தான் என் ஜீன்ஸ் ஆசையும் இருந்துச்சு ,அதால என் டவுசர் ஆசைய கிணத்து தண்ணியில கழுவிட்டு பள்ளிக்கால்சட்டையிலே துடைச்சிகிட்டன்.  

 .மொபைல் போன்ல "போல்டர் லொக்"  போட்டு பிட்டு படத்த பூட்டி வைக்கிற மாதிரி நானும் என் டவுசர் ஆசைய மனசுக்குள்ள பூட்டு போட்டே வச்சிருப்பன் .தைப்பொங்கல் சித்திரைவருசம் வர போகுது எண்டாலே  திரும்பவும் என் மனசுக்குள்ள ஓரமா டவுசர் போடுற  ஆசை நைலோன் கயிற்றுல ஊஞ்சல் கட்டி  ஆடும் . எப்படியாச்சும் இந்த முறை அப்பா கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த டவுசர வாங்கி ரெண்டு காலையும் அதுக்குள்ள பூத்திட்டு நிண்டு ஒரு போட்டோ எடுக்கோனும் அதுதான் என் வாழ்க்கை உயர்ந்த லெட்சியமாவே அப்போ இருந்துச்சு. உடல் ரவுசருக்கு உயிரும் ரவுசருக்கே !!  அப்பிடின்னு வாய் மட்டுமில்ல உடம்பில இருக்கிற மூனுலட்சத்து மூப்பத்து மூனு கோடி செல் களும் ஒன்னு சேர்ந்து கோசம் போட்ட காலம்.  ஆனாலோ ஒவ்வொரு சித்திரைக்கும் , தைப்பொங்கலுக்கும்  டீ சேர்டோ அல்லது கால்சட்டையோதான் அம்மா கையால கிடைக்கும் . அப்பிடியே மனசுக்குள்ள ஓரத்தில ஊஞ்சல் ஆடிகிடந்த ரவுசர் ஆசை சூத்தடிபட கீழே உளுந்து கிடக்கும் . 

வரிசையா இருந்த அண்ணன்மாரின் ரவுசரை போட ஆசை இருந்தாலும் என் தன்மானம் ரெண்டு பேர் இருக்கவேண்டிய பஸ் சீட்ல உட்காந்திருக்கிற மெகாசைஸ் குண்டன் மாதிரி என ஆசைய கொஞ்சம் ஓரத்திலே உட்கார வச்சிருந்துச்சு . போனது போகட்டும் வருவது வரட்டும் என அண்ணாட ரவுசர எடுத்து போட நினைச்சப்பதான்  , முட்டுகட்டையா ஒரு விசயமே வந்துச்சு. ஜட்டி எனும் வஸ்துவை போட்டாத்தான் டவுசர் போடனுமாம் . அடச்சீ இந்த சுகந்திர இலங்கை திருநாட்டில் ஒரு மனிசன் ரவுசர் போட இவ்வளவோ பிரச்சனைய சமாளிக்கவேண்டி இருக்குதேன்னு நினைச்ச போதுதான் ஜட்டி மேட்டர்ல அவமானபட்ட  இன்னுமொரு மிகப்பெரிய சம்பவம் நினைவுக்கு வந்துச்சு.


என் கிளாஸ்ரூம்ல கொஞ்சம் உயரமா இருக்கிறதாலயோ என்னவோ  , ரவுண்டப் பண்ணி வந்த ஆர்மிகாரன் ரெயினிங் எடுத்த இயக்க காரனை விட்டு போட்டு  சும்மா இருக்கிற அப்பாவிய எட்டி புடிக்கிற மாதிரி எங்க P.T மாஸ்டர் என்னைய கபடி ரீமுக்கு செலட் செய்ய ,வருங்காலத்துல நாமளும் ஒரு சச்சினோ சங்ககாரவாகவோ ஆகிடலாமுன்னு மூளைய சுத்தி கலர் கலரா பட்டாம்பூச்சி வட்டமிட்டு ஆசைய தூண்ட  நானும் சரியின்னு  தலைய ஆட்டும் போது ஒரு நாள் இந்த கபடியால அவமானபடுவேன்னு என் மனசுக்குள்ள உட்காந்துருந்த நஸ்டராம்ஸ் சொல்லல.
ட் ரெயினிங் சீசன்  எல்லாம் நல்லபடியா போய்முடிச்சிட்டன் , விஜய்காந் மாதிரி பின்காலால எட்டி உதைக்கிறது, குருவி விஜய் மாதிரி அந்திரத்தில பறக்குறது அப்பிடியெல்லாம்  இல்லாம சும்மா ஹீரோ கையால அடிவாங்கன்னு வந்த வில்லனின் அடியாட்கள்ல நானும் ஒருத்தன் மாதிரிதான் அந்த கபடி மெட்சுக்கு செலக்ட் ஆகி போனேன். மெட்ச்க்கு டீம் செலக்ட் செய்யும் போதே என் முகத்த உத்து பார்த்தே , அந்த P.T வாத்தி நீ இங்கயே உட்காந்து தண்ணி கிண்னீ கேட்டா எடுத்து குடுன்னு சொல்லி என் சச்சின் டெண்டுல்கர் ஆசையிலே  5 லிட்டர்  மினரல் வோட்டர  ஊத்திட்டு போயிட்டான்.

உலகத்திலே இருக்கிற ஒட்டுமொத்த தெய்வத்தையும் கூப்பிட்டு ஓப்பாரி வைச்சு அழுதுச்சு என் மனசு, அப்பதான் என் மனசுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த கருப்பு ஆடு  முழிச்சி டீம்ல விளையாடுற யாருக்காச்சும் அடிபட்டு காயப்பட்டா நீதாண்டா விளையாடோனும் அப்பிடின்னு "கோலிங் பெல்" அடிச்சுவிட்டுச்சு.அக்கணமே என் வேண்டுதலோ யாருக்காச்சும் அடிபட்டுடனும் அவன் காயப்படோனும்
என டைவேர்ட் ஆனது, அம்மன் கோவிலுக்கு காவடி எடுப்பேன்னு கூட வேண்டிகிட்ட போது கூட அப்பிடி ஒரு அவமானம் நிகழுமென நினைச்சு கூட பார்கல.

நான் வச்ச வேண்டுதல் தெய்வங்களுக்கு கேட்டுச்சோ இல்லையோ எதிரணியில விளையாடுன ஒருத்தனுக்கு கேட்டிருக்கோனும் ! எங்க அணியில "ரைடு " போயிட்டு கோட்ட தொடப்போனவனை படக்கூடாத இடத்துல புடிச்சி இழுத்து அவனை அவுட் ஆக்க , ஆளும் அவுட் ஆகி அவனின் அந்தரங்க உறுப்பும் அவுட் ஆகிற நிலமைக்கு வந்துட்டான் .டீம்ல எல்லோரும் அப்செட் ஆகி போனாங்க , அவுட் ஆகின அவந்தான் கொஞ்சம் நல்லா விளையாட கூடியவன் .அவங்க எல்லோரும் சோகமா இருந்தாலும் நானோ உள்ளுக்குள்ள ஒரே பாட்டுல பணக்காரர் ஆன படையப்பா ரஜனி போல ஆகிட்டேன். என்னதான் இருந்தாலும் சோகமா மூஞ்ச வச்சிகிட்டு P.T வாத்தி கிட்ட போய் சேர்!! நான் இருக்கன் சேர் என் உயிரே போனாலும் சரி இந்த மெட்ச் வின் பண்ணுறம் சேர் என சொல்ல அவர் முகத்திலே பெரிய மிரட்சி ,அம்பி மாதிரி குந்திட்டு இருந்தவன் இப்போ அந்நியன் மாதிரி பேசுனா எப்பிடி? மிரளதானே செய்வார் . சரி சரி நீ விளையாடு என ஒரு வித தயக்கதோடே அனுப்பி வைச்சார் 

சுறா படத்துல விஜய் இன்ரோ சீன்ல தண்ணியே பிச்சிட்டு மேல பாய்ஞ்ச மாதிரியே கபடி கிரெண்டுக்குள்ள நான் பாய்ஞ்சி ஒரு வழியா பின்னாடி ஒளிஞ்சு ஒளிஞ்சு நின்னு எதிராளி ஒருத்தன கோழி அமுக்கிற மாதிரி அமுக்க உதவி செய்ய பார்த்துட்டு இருந்த P.T மாஸ்டர் மெல்ல மெல்ல சந்திரமுகியா மாறிக்கிட்டு வரும் உங்க மனைவி கங்காவ பாருங்கன்னு பக்கதிலே நிக்கிறவர் கிட்ட என்னை பத்தி சொல்வது போலவே பட்டுச்சு ! மொத்ததுல என்னைய ரொம்ம நல்லவன்னு நம்பிட்டாங்கன்னு நினைச்ச போதே  நானும் "ரைட் " போக வேண்டிய துர்ப்பார்கிய சூழ்நிலை உண்டாது . 

என் மைண்ட்ல கில்லி விஜய் ரொம்ம ஆழமா  போய் உட்காந்து கிட்டு போ போ போய் அவனதொடுன்னு ஓடர் போட்டுகிட்டு இருந்தாத்  மனசு பூரா வெறி இத விட்டா நீ சச்சின் மாதிரி ஆக வேற சான்ஸ் இல்ல விட்டுடாத சங்கர்னு சுத்திநிக்கிற மூனு லெச்சத்து மூப்பத்து முக்கோடி தேவர்களும்  சேர்ந்து கரகோஷம் போட்டாங்க  

கபடி கபடி கபடி சொல்லிக்கொண்டே என்  வலதுகால வைச்சே( முதல் முதலா வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்கிற செண்டிமெண்ட்) உள்ள போயிட்டன் .அங்க எதிர்பக்கதிலே இருந்த நாலு பேரு நாலாயிரம் பேர தெரிஞ்சானுக எல்லாம் பயம் செய்யுற வேலை . கையும் ஓடல காலும் ஓடல எனும் மூத்தோர் வாக்கை முழுசா அனுபவிச்ச நேரம் அது . அப்போதான் விளங்கிச்சு எனக்கும் "பில்டிங் ஸ்ரோங்கு பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குன்னு" . மூச்ச புடிச்சிகிட்ட வலப்பக்கம் இடப்பக்கமுன்னு மாறி மாறி ஓடி ஒரு கட்டதுல ஏதாச்சும் உருப்படியா செய்வமேன்னு சூசைட் பண்ண முடிவெடுத்துது மனசு உள்கோட்டுல நிக்கிறவன் கால முன்னுக்கு வைச்சி டாண்ஸ் ஆடிட்டு இருப்பத ஒத்த கண்னாலே கண்டு மீனு சிக்கிடும் தூண்டில எட்டி போட்டுபார்க்கலாமேன்னு .அவன் காலை  என் காலாலே  நசிச்சி விடுவோமுன்னு கொஞ்சம் எட்டி அகட்டி கால வச்சன் பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு சத்தம் என் மானம் மரியாதை எல்லாமே கீழால கிழிஞ்சு போன கால்சட்டை வழியா எதிரணி கோட்டுக்குள்ள கீழ வந்து கிடந்துச்சு 

உலகத்திலே இருக்கிற் ஒட்டு மொத்த ஜீவராசியும் ஒன்னா சேர்ந்து "கொல்" என சிரிச்ச மாதிரி இருந்துச்சு எதிரணி முதல் கொண்டு என் அணி ஆட்கள் வரை சிரிச்சு என் மானம் ரோசம் எல்லாம் இப்பிடி கவுட்டுக்குள்ளால வெளிய வந்து கிடந்துச்சு . என் P.T வாத்தி கிட்ட வந்து டேய் தம்பி ஜட்டி எல்லாம் போட மாட்டியான்னு கேட்டார் 

மார்பிலே பாய்ந்த அம்பை புடிச்சிட்டு தேர்சில்லு அடியிலே சரிஞ்சு கிடக்கிற கர்ணன் போல என் கால்சட்டை ஓட்டைய பொத்திபுடிச்சிட்டு  கபடி கோர்ட்டுக்கு வெளியில இருந்தேன் .துரியோததன் சபையிலே துகில் உரியப்பட்ட திரெளபதையா நான் பரிதவிச்சு நின்றப்ப ;ஆபத்தாண்டவனா என் P.T வாத்தியாரே இன்னுமொரு சோர்ட்ஸ் மாதிரி கொண்டு வந்து தந்து இத போட்டு விளையாடுன்னு 
சொல்லும் போதே மனசு  "நன்றிசொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு" ன்னு பாட்டு பாடியது .

மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியா அவமானம் அது !!!!!  அடுத்த தீபாவளியே சொந்தமா ரவுசர் போட்டாலும் அந்த கபடி விளையாட்ட டீ வியிலே பார்க்கும் போதெல்லாம் இப்போவும் ரவுசர் போட நான் பட்ட பாடு நினைவுக்கு வரும் ஆனாலும்  ! நாளாக நாளாக  "இதுவும் கடந்துபோம்"  எனும் போர்மியுலாவில் அந்த சம்பவம் கடந்து போய்விட்டது அதையெல்லாம்   தாண்டி இப்போ  டெனிம் ,அது இதுன்னு ஜீன்ஸ்  போட்டாலும்  இப்போ கூட புதுசா ஜீன்ஸ்  வாங்கும் போது அந்த கபடி முதல் ரவுசர் வரை நினையாமல் இருந்ததில்லை .ஆயிரம் சுகம் தரும் ஒரு அனுபவ  புதையல் அது !!!

Saturday, September 19, 2015

கல்யாண நாள்

என் கை ,கால் ,மூளை என எதுவுமே ஓடவில்லை ஆனால் சுவரில் தொங்கிகொண்டிருக்கும் அந்த ஆங்கிலேயர் காலத்து  கடிகாரம் ""டிக்" "டிக்" சத்ததுடன் மிக வேகமாக எனது எல்லாத்துக்கும்  சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தது .கருப்பு கோர்ட் அணிந்த தெய்வங்கள் அங்காங்கே நடமாடி கொண்டிருந்தன  .

மணி 9:45 , இன்னமும் என் பெயரை கூப்பிடவில்லை அது போக இன்னமும் போக்குவரத்து பிரிவு சம்பந்தமான எந்த ஒரு கேசையும் எடுக்க ஆரம்பிக்கவில்லை. எனக்கு வியர்க்க ஆரம்பித்து ஆறாய் ஓடிக்கொண்டிருக்கிறது  ! கொஞ்ச நாள் முந்தி கோயில் அலுவல் ஒன்றுக்காய் சென்று கொண்டிருந்தபோது தொலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்துக்காய் கோட்ஸ் க்கு எழுதிவிட்டான் அந்த நேர்மையான காவல் அதிகாரி .நானோ அந்த சம்பவத்தை அடியோடு மறந்தே போயிருந்தாலும்  வீட்டில் ஒரு விசேசத்துக்காய் வந்த போலிஸ்கார உறவினர்(அவரிடம் ஏற்கனவே எப்படி கோட்ஸ் நடைமுறை என தொலைபேசியிருந்தேன்  )  ஒருவரே நாளைக்கு உனக்கு கோட்ஸ்ல  கேஸ் இருக்குதே என்ன செய்ய போற என கேட்டதும் தான் அலற ஆரம்பித்தேன்!

சீ வெட்கம் விடிஞ்சா கல்யாணம் இருக்கு ; கோட்,  பொலிஸ் ந்னு போன விளங்குமா? வீட்டிலே அம்மா ஒருபக்கம் திட்ட ஆரம்பித்திருந்தாள். 

காலையிலே எழுப்பி கல்யாணத்துக்கான சகல சம்பிரதாயங்களை எல்லாம் செய்து முடித்து விட்டு  , பக்கத்தில் இருக்கும்  கல்யாணம் நடக்க இருக்கிற கோவிலையும் எட்டி பார்த்தால் அங்கு எல்லா ஏற்பாடுகளையும் சரியாக செய்தே வைத்திருக்கிறார்கள் கோவில் வேலையாட்கள்.எனக்கு மனசு கல்யானத்தில் இருந்தாலும் கோட்ஸ் , பைன்காசு ,லைசென்ஸ்  என தலை அங்கேயே சுற்றி சுற்றி போனது .  .

வருவது வரட்டும் என்றென்னி எப்போதும் எனக்கு துணைக்கு வரும் அண்ணாவின் மகனை அழைத்து ஒரு திட்டம் போட்டேன் . மூகூர்த்தம் 12:20 க்கு தான் தொடங்குது , நான் எப்பிடியும் 11 மணிக்கு முதல்ல வந்துடுவன் .எப்பிடியாச்சும் என்னத்தையாவது சொல்லி சமாளி ! எனசொல்லி  கோட்ஸ் க்கு போகபோவதாய் சொல்ல திகைத்து போனான். 

மனசு கணக்கு போட்டது 10 :15 க்கு கேஸ் முடிய கார எடுத்தா 11 மணிக்கு வீட்ட போகலாம் உடனே வெளிகிட்டா கல்யாணத்து ரெடி   . பொண்ணு வீட்டு காரங்களுக்கு ஏதாச்சும் இதுல தெரிஞ்சுது என் பாடு அதோ கதி.கோட்ஸ்சில் உள்ள தெரிந்தவரை வைத்து எனது கேசை முதல் கேசாக மாற்றி வைத்து கொண்டாலும் இன்னமும் டென்சன் குறைந்த பாடில்லை ; ஆடாமல் அசையாமல் என் பெயரை எப்போ கூப்பிடுவார்கள் என்றே காதை விளித்து வைத்து கேட்டு கொண்டிருந்தேன்.

கேசவ மூர்த்தி  பெயரை கேட்டதும் தான் தாமதம்;  ஜட்ஜ் ஐயா கேட்டதுக்கெல்லாம் தலையாட்டி விட்டு தெரிந்த பொலிஸ் காரர் உதவியுடன் பைன் ,அது இது என எல்லாம் நடைமுறையையும் முடித்து ,பார்க்கிங்கில் கிடக்கும் காருக்குள் ஏறி மொபைலை எடுத்தேன் .8  மிஸ்ட் கோல் 5 மெசேஞ்  என பல்லை இளித்தது ,அது சரி நான் தொலைஞ்சேன் எல்லாம் சொதப்பி விட்டது என நினைந்து கொண்டே அக்சிலேட்டரை மிதிக்க ஆரம்பித்தாயிறு.

 கடிகாரத்தை  திருப்பி பார்த்தேன்  10.45 .  ஒருவழியாய்  வந்து  சேர்ந்து வீதியிலே  காரை நிறுத்தி விட்டு உள்ளே போனேன் .வீட்டில் முன் விறாந்தையில் சாய்மான கதிரையில்  அம்மா  உட்காந்து கொண்டிருந்தாள்,  ,பூனை போல போல பதுங்கி உள்ளே  போயி    குளித்து  முழுகி   எலவே எடுத்து வைத்திருந்த வேட்டி ,அது  இது என எல்லா   வஸ்திரங்களையும்  அணிந்து  கொண்டு காரிலேயே  கோவிலுக்கு  போனேன்  .எல்லோரும்  என்னையே  ஒரு  விதமாய்  உற்று  உற்று பார்க்க  ஒருமாதிரியாய்  நெளிந்து கொண்டே உள்ளே போய்விட்டேன்  .நான்  பட்ட பாடு  இவங்களுக்கு எங்க புரியபோது   ஓசி சோறு தின்ன வந்த கூட்டம்  .என மனசுக்குள் எல்லோருக்கும்  திட்டிகொண்டே;  கால் கழுவும் இடத்துக்கு போக   தாயை கண்ட  கண்டுகுட்டி துள்ளி ஓடிவருவது போல  ஓடி வந்தான் அண்ணாவின் மகன் .

பொம்பிளையிட ஆட்கள்   வந்துட்டங்களா?

இன்னும் இல்ல

ஒரு பிரச்சனையும் இல்லையே,?யாரும் என்ன  எங்க எண்டு கேக்கலியா ?

எல்லாம்  சரி !! கேட்டாங்க தான்    ஆனா  ஒரு மாதிரி  சொல்லி  சமாளிச்சுட்டேன்...
ஆசன பலகையில்  உட்கார குனிந்த போது  பின்னாலே  இருந்து  ஒரு குரல் கேட்டது

என்ன  ஐயா  ? கோட்ஸ் கேஸாமே? என்ட கலியாணநாள் அன்டுதான இந்த கேசும்  வந்து சேரனும் .அப்பா உங்களுக்கு  கோல்  எடுத்தவர்  ஏசவாம் எண்டு நல்ல காலமா ;போன எடுக்கல  நீங்க    ..


அந்த கொடுமைய ஏன்டாம்பி கேட்பான்  ! முருகா  பிள்ளையாரே  சொல்லி  கொண்டே   கணபதி  கோமம்  செய்ய தொடங்க  ஆரம்பித்தேன்  நான் .


Wednesday, September 16, 2015

சமூகம்

சிறுகதை ((முயற்சி ))
சமூகம்
தம்பி !! ரெண்டு பக்கமும் நல்லா பாத்துட்டு வாகனம் வராத நேரமா பார்த்து ரோட்டை கடப்போம் என பதினெட்டாவது முறையாக சொல்லியிருப்பார் என் மாமா .
ஆறு மாசம் நடந்த விபத்தில் காலை இழந்து இப்போ என் முன்மே மூன்று சக்கர சைக்கிள் வண்டியில் உட்காந்திருக்கும் ஒரு ஒய்வு பெற்ற அரச ஊழியர் அவர் .
தன்னால் எதுவும் தனியே செய்ய முடியுமென கூறி இந்த கையால் சுற்றி ஒட்டும் வண்டியிலே எல்லா இடத்துக்கும் போய் தன் வேலைகளை முடிக்கும் ஒரு தன்னம்பிக்கையாளனும் கூட. நேற்றைய மழையில் நனைஞ்சு கொஞ்சம் காய்ச்சல் அடிப்பதால்தான் என்னை உதவிக்கு கூப்பிட்டிருந்தார் . பென்சன் காசிலே எனக்கும் நூறு இருநூறு என அவர் தருவதால் அவசரமாய் கொடியில் கிடந்த சாரனை எடுத்து கட்டி கொண்டே அவருக்கு உதவியாய் வண்டியை பின்னாலே தள்ளிகொண்டு வந்துவிட்டேன் .
"இலங்கை வங்கி" என பெரிய எழுத்து போர்ட் வீதிக்கு அடுத்த பக்கம் வியாபித்து இருந்தது . அந்த வங்கிக்குள் இருந்தே வெளியேறி வந்து கொண்டிருந்தான் அவன், எங்கள் பக்கம் நோக்கி வர தொடங்கிய போதே புரிந்துகொண்டேன் ,எங்கள் அருகில் சிங்கம் போன்று நிற்கும் அந்த விலையுயர்ந்த கார் அவனுடையதாக தான் இருக்கவேண்டும் ;அவனின் தோற்றமும் உடையும் அப்படியே பறைசாற்றியது . அவசர அவசரமாய் வாகனங்களுக்கு இடையே புகுந்து கொண்டு வீதியை அவனோ குறுக்கறுக்க ; மாமா பதறி கொண்டே ;தம்பி கவனம் கவனம் என சொன்னது அவனுக்கு விளங்கியிராது என்றே நினைக்கிறேன் .
கார் கதைவை அவசரமாய் திறக்கமுயன்றவன் ஏதோ நினைவுக்கு வந்தவனாய் திடீரென தனது மணிபேர்ஸ்சை திறந்து கொண்டே எங்களை நோக்கி வந்து நூறு ரூபா பணத்தை மாமாவின் மடியில் அநாகாசயமாய் தூக்கி எறிந்து விட்டு கண்மூடி இமைப்பதுக்குள் காருக்குள் ஏறி புறப்பட்டு விட்டான்.
நான் அவனின் செய்கையால் திகைத்து போனேன் ! எப்படி எங்களை இப்படி இரந்துண்பவர்கள் என நினைத்தான் , எங்கள் உடைகளா? அல்லது அவன் கார் அருகிலே கட்டை வண்டியுடன் நிற்பதால் காசு கேட்கவே நிற்கிறோம் என நினைத்திருப்பானா பலவாறாய் ஜோசிக்கும் போதே மாமா என்னை பார்த்து சிரித்து கொண்டே சொன்னார்,
உலகம் இதுதாண்டா மகனே , இப்பிடி மூணு சக்கர வண்டியில காலோ கையோ முடியாமா திரிஞ்சாலே பிச்சையெடுக்கிறவன் ,அநாதைன்னு முடிவு பண்ணிடுவாங்க, எதுக்கும் காசை எடுத்து வச்சுக்க உனக்கு போனுக்கு ரீலோட் பண்ணவாச்சும் உதவும் என சிரித்து சொல்லி சிரித்து கொண்டிருந்தார் .
அந்த சிரிப்பில் ஒரு ஆழமான வலி புதைந்திருந்ததை நான் அவதானிக்க தவற வில்லை.

Tuesday, September 1, 2015

கொலைக்கு ஒரு கொலை

கொலைக்கு  ஒரு கொலை 

அலகை கொஞ்சம்  உள்ளே  விட்டு    குடலை வெளியில்  எடுத்து  இழுத்து   உருசி பார்த்து கொண்டிருகிறது காக்கைகள்  ,சாம்பலும் கருப்பும் கலந்த சாத்தன்  வகை பூனை  வீதி  வழி  வழிந்தோடும்  என் "பி பொசிட்டீவ்" வகை குருதியை நாக்கை சுழட்டி சுழட்டி  குடித்தும்  உருசித்தும் கொண்டு இருக்கிறது , உற்று  பார்க்கிறேன்  அதே  பூனைதான்  ;முழுவதுமாய்  உறுதி செய்து விடுகிறேன் அந்த  பூனைதான்  இது .

அவரசமான  பயணமொன்றில்  சகுனம் பாராது   குறுக்கே  பாய்த்து  சக்கரத்தின்  அடியில் மாட்டி உயிரை  
 விட முயன்ற  அந்த பூனைதான்  .திரும்பி  பார்க்க தைரியமில்லா  மனசினால்;  அப்படியே ஓடி வந்த  என்னை தான்  கனவில்  கொலை செய்து  குருதி குடித்து கொண்டிருகிறது   அந்த  பூனை!!

Tuesday, May 12, 2015

எழுத வேண்டும் ! ஏதாவது

எழுதவேண்டும்
எதை 
எப்படி 
எவ்வாறு என்பதெல்லாம் பொருட்டே இல்லை!

தூசு படிந்த மேஜை
மை காய்ந்த பேனா
மடித்து கசங்கிய காகிதங்கள் 
இவற்றையெல்லாம் தாண்டி எழுதவேண்டும்.

நேரமின்மை
சோம்பல் ,அசதி
துக்கம் ,தூக்கம் இவற்றையெலாம் 
தாண்டி ஏதாவது எழுதவேண்டும் .

ஒரு நீண்ட வீதி வழி பயணிக்கும் 
என் எண்ணங்களை நிறுத்தி வைக்கவும் , உயரம் தாண்டி போய்கொண்டிருக்கும் உணர்ச்சிகளை ஒடுக்கி வைக்கவும் 
ஏதாவது   எழுத வேண்டும் .

உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் என்
உணர்வுகளுக்கு வடிகால் இடவும்
எப்போதும் முகாரி ராகமே இசைக்கும் வாழ்க்கை வயலீனைமீட்டெடுக்கவும்
ஏதாவது எழுத வேண்டும்  .

என்னோடு மோசமாய் குடும்பம் 
நடத்தும் "தனிமை " மனைவியை
தொலைக்க வல்ல சக்களத்தி அதுதான் ,
அதுக்காகவேனும் ஏதாவது எழுத வேண்டும் !!!        


Wednesday, February 18, 2015