Friday, June 20, 2014

ஆல மரமும் ஆயிரம் பேயும்

சூனியக்கார பென்னொருத்தி  தலைமுடியை விரித்துகொண்டிருப்பது போலவே தனது ஆயிர கணக்கான விழுதுகளையும் கீழே தள்ளி விட்டுகொண்டு எந்த பயமும் இல்லாமல் தன்னம் தனியாளாய் நின்றுகொண்டிருந்தது  அந்த ஆலமரம்!  தனது அப்பப்பா காலத்திலிருந்து
அந்த ஆலமரம்  இருப்பதாய்  சொல்லிய எனது தாத்தா,அந்த மரம் பற்றிய பல சுவாரசிய கதைகளையும் சேர்த்து சொல்லியிருந்தார். அதில் எப்போதுமே பேய் கதைகள் உள்ளடங்கியிருக்கும் அதிலும் அப்படியான கதைகளையே நானும் விடுத்து விடுத்து கேட்பேன் !
பள்ளிக்கூட காலத்தில் பூதம் எந்தளவு பெரியது?  எப்படி இருக்கும் என நான் கேட்ட குதர்க்கமான கேள்விக்கு சோடாப்புட்டி கண்னாடியனிந்த  தமிழ் வாத்தியார் , இந்த ஆலமரத்து அளவு இருக்கும் என சொன்னதிலிருந்து அந்த மரத்தின் மர்மங்களை துலாவி அறிய அவா உண்டாகியது எனலாம் . மற்றைய ஆலமரத்து விழுதுகளில் எல்லாம் இளசுகள் ஊஞ்சல் ஆடுவதும் அதன் அடியிலே பெருசுகள் கூடி அரட்டைஅடிப்பதுமாய் இருக்கும் அந்த நடைமுறை இந்தமரத்தடியில் இல்லாது போனதும் ஏதோ மர்மம் அங்கு குடியேறி இருப்பதை இலகுவாய் உணர்த்தியிருந்தது . இந்த மரத்தடியிலிருந்து நான்கு நடை நேராக நடந்தாலே சவக்காலை வந்துவிடும். அதனாலோ என்னவோ பேய் பிசாசு என அந்த மரத்தை சுத்தி  "காஞ்சனா "பாணியிலான  ஆயிரக்கணக்கான சினிமா எடுக்க கூடியவளவு கதைகள் உலாவந்தன!

சாயங்கால நேரத்தில் அந்த மரத்து பக்கமாய் சைக்கிளில் தனியே போய் திரும்பி வருவதென்பது"பெர்முடா" முக்கோண பகுதியில் விமானம் பறந்து
திரும்பி வந்த அளவுக்கு சாத்தியமில்லாத ஒரு செய்கையாய் இருந்தது.சைக்கிளில் போகும் போது வெள்ளுடை அணிந்த பெண் நிறுத்தியதாகவும் தான் நிறுத்தாமல் கந்தசஸ்டி கவசத்தை உரக்க படித்து கொண்டே ஓடிவந்து விட்டதாய் ஒருவன் திடிரென புரளி சொல்லுவான் ,இன்னுமொருத்தன் சைக்கிளில் பின்னே யாரோ உட்காந்து கொண்டுவருவது போல தோனியதாகவும் கதை பேசுவான் .யாருக்கு அப்பிடி நடந்ததாய் கேள்வியுற்றால் அவர் வீட்டுக்கு போய் குத்துகால் இட்டு கதைபேசிவிட்டு வருவேன் .

ஒருநாள் அந்த மரத்தில் அப்படியென்ன இருக்கிறதென அறிந்துவிடும் அவாவில் தாத்தாவை நச்சரித்து ஒருவழியாய் சாயங்கால வேளையில் அப்பாவுக்கு தெரியாமல் அதிலும் குறிப்பாக அம்மாவுக்கு அறவே தெரியாமல் அழைத்து போவதாய் வாக்குறுதி தந்திருந்தார் !
அந்தநாளும் வந்தது ,தாத்தாவோ மந்திரம் மாந்திரீகம் என கொஞ்சம் தெரிந்து வைத்திருந்ததும் எனக்கு வசதியாய்பட்டது .வீட்டருகில் இருந்த கோவிலுக்கு முதலில் கூட்டிச்சென்று என் உடம்பெங்கிலும் விபூதி பூசி ஏதோ மந்திரமெல்லாம் முனுமுனுத்தார் .சரி வா !நான் சொல்லுவது போல கேட்கவேனும் அங்கே போய் அதை தட்டுவது இதை தொடுவதெல்லாம் கூடாதென ஆயிரத்தெட்டு கட்டளைகளுடன்பயணம்ஆரம்பித்தது.தாத்தாவோடு சேர்த்து துணைக்கு பயம் வேறு ஒட்டிகொண்டது என்னுடன் ! அப்படியென்ன இருந்துவிடபோகிறது எனும் அசட்டு தைரியம் வேறு ,இருந்தாலும் மரத்தை நெருக்கி கொண்டிருக்கும் போது காலையில் டிவியில் பார்த்த சந்திரமுகி படத்திலே ரஜனியோடு போய் சிக்கிகொண்ட வடிவேல் ஜோக் எல்லாம் நினைவுக்கு வந்தது !

தேய்பிறைக்காலமாம் அது! இதையும் தாத்தாதான் சொல்லியிருந்தார்! இருளை வானம் கொஞ்சம் கொஞ்சமாய் குத்தகைக்கு எடுத்துகொண்டிருந்தது !மரத்தை நெருங்கிவிட்ட அறிகுறி வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த வெளவால் உள்ளிட்ட இராப்பறைவகள் மூலமாய் தெரிந்தது ! 
தாத்தா கொஞ்சம் நில் !!என கையில் போத்தல் ஒன்றில் வைத்திருந்த தண்ணீரை கொஞ்சமாய் கையில் எடுத்து ஏதோ முணுமுனுத்தபடி எனக்கு வீசியடித்தார் கூடவே அவரும் தலையில் தெளித்துகொண்டு  ஒரு சுற்று சுற்றி நான்கு திசையிலும் எச்சில் துப்பினார்! ஏன் தாத்தா இப்பிடி என கேட்க ,இதெல்லாம் காவல் முறைமை உனக்கு புரியாது பேசாமல் வா என கடிந்து கொண்டார் .

அந்த ஆலமரத்து விழுதை பற்றி ஊஞ்சல் ஆட வேண்டும் !அப்படி ஆடியதாய் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் எல்லோரிடமும் பெரியசத்தமிட்டு கத்தி சொல்லவேண்டும் இதுதான் இப்போதைக்கு  என் உட்சபட்ச ஆசையாய் இருந்தது.

மரத்துக்கு அருகிலே போய் சேர்ந்தாயிற்று!,தாத்தாவின் கையிலே இருந்த "டோர்ச்" லைட்டை பிடுங்கி மரம் முழுதும் அடித்து பார்த்தேன் ,நல்ல பெரிய விருந்து உண்ட அரக்கன் ஒருத்தன் தலையே விரித்து அமைதியாய் தூங்குவதுபோலே இருந்தது! அந்தமரத்தில் காய்த்து கிடக்கும் சிவப்புநிற ஆலம்பழங்கள்   அந்த தலைமுடியில் ஒழிந்துகிடக்கும் பேன் போலவும் இருக்க அதை கொத்திதின்னும் ஆசையில் வெவ்வால்கள் தலைகீழாய் தொங்கிகொண்டிருந்தன.

அப்போதுதான் தம்பி தம்பி !! என கொஞ்சம் கரகரப்பான குரல் ,நிட்சயமாய் அது எனது தாத்தாவின் குரலே இல்லை டப்பென்று  வியர்த்துபோனது !டோர்ச்லைட்டை எடுத்து முகத்துக்கு  அடிக்க நினைத்த போது ,
தம்பி தம்பி என்ன என்ன பிரச்சனை ?? என எனது உதவியாளராய் இருக்கும் அந்த பெரியவர் எனது தோளை உலுக்கி எழுப்பிய போதுதான் புரிந்தது இவ்வளவு நேரமும் நினைவுகளோடேநீச்சலிடித்திருந்தேன்.அந்த ஆலமரத்தின் சில்லெனும் குளிர்காற்றிலேதான் நான் தூங்கிபோயிருந்தேன் என உங்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும்.

சேர் அப்பிடின்னா வேலையை ஆரம்பிக்கவோ?என சிங்களத்தில் வினவியிருந்தான் அவன் கொஞ்சம் பொறு என சொல்லி மேலிடத்துக்கு ஒரு மின்னஞ்சலை டைப் அடித்து கொண்டிருந்தேன் !!

 "மிகவும் பழமையான மரமொன்று வீதியின் இடதுபக்கம் இருப்பதனால் அதனை பாதுகாக்கும் நோக்குடன் வலதுபக்கமாய் கொஞ்சம் சேர்த்து வீதியினை விஸ்தரித்து 
வேலையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் அதற்கேற்ற நடவடிக்கைககளை எடுக்கவும் "என்பதே அந்த மின்ஞஞ்சலின் சுருக்கமாய் இருந்தது.
புதிதாய் மாற்றம் பெற்று சொந்த ஊருக்கு வேலை செய்ய வந்து ஒரு நல்ல வேலையை செய்த திருப்தியோடு வண்டியை விட்டு கீழிறங்கினேன்! இப்போதெல்லாம் இந்தமரத்தில் பேய்களும் இல்லை பிசாசுகளும் இல்லை அப்பிடி இருந்து அவை தங்களை காட்டிகொள்வதுமில்லை போலும்.