Tuesday, June 3, 2014

வேகம்

கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர்க்கும் அதிகமான தூரம் அந்த வண்டியின் பின்னாலே வந்துகொண்டிருக்கிறேன்!எப்படியாச்சும் அதனை முந்திவிட வேண்டும்,அந்த வண்டிசாரதிக்கு நன்றாக பச்சை பச்சையாய் மிக கொடுமையாய் திட்டவேண்டும் அதுதான் இப்போதைக்கு இலட்சியம் நோக்கம் எல்லாமே.வீட்டுக்கு அவசரமாய் போவது,வெளிநாடு போகபோகும் நண்பனை வழியனுப்புதல் எல்லாம் இரண்டாம் பட்சமாகி போனது

கண்டிப்பாய் அந்த காரை  உற்பத்தி செய்த கொம்பனி எல்லாம் இழுத்து மூடிவிட்டிருப்பார்கள். அவ்வளவு பழைய காலத்து வண்டி ,வெள்ளை கலர்தான் அதன் உற்பத்திக்கலர் என்பதை கொஞ்சம் கவனமாக பார்த்தால் மாத்திரமே கண்டறியலாம் மற்றபடி நன்றாய் வெற்றிலை,பாக்கு போட்டு குதப்பிய கிழவிகளின் கறைபடிந்த பல்லு போல நிறம் மாறி போயிருந்தது 

ஒரு காலத்தில் இந்த கார் நல்ல அம்சமான பெண் போலே இருந்திருக்க வேண்டும் ,காமுகர்கள் எல்லாம் கண்டபடி இடித்துவிட்டுபோன தடங்கள் ஆங்காங்கே பளிச்சென தென்பட்டது .வண்டியின் இலக்கம் அது எத்தனை சகாப்தம் பழையது என்பதை பரிசம் போட்டுகாட்டி நின்றது. 14ஶ்ரீ 23*** என இலக்கதகடு ஆங்காங்கே உடைந்து வயதான கிழவன்  போல் பொக்கைபல் காட்டி   சிரித்து கொண்டிருந்தது .

வழக்கமாய் இவ்வாறன வாகனங்களை  எல்லாம் இலகுவாய் முந்தி கொண்டு போய்விடுவேன் .மணிக்கு சாதரணமாய் 60முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனக்கு ஆனால் இந்த காரின் பின்னே 40 கிலோமீடர் வேகத்தில் போவது என்பதை  ஏற்கமுடியாதிருந்தது  .போதாததுக்கு இன்று வெள்ளைக்கிழமை வேறு அலுவலம் முடிந்து தத்தம் சொந்த ஊருக்கு போய்கொண்டிருப்பர்கள் ,ஏனையவர்கள் என  மிகவும் மோசமான வாகன  நெரிசல் முந்த முடியாமல் இருப்பது பெரியதாய் தோன்றவில்லை  ,அந்த பழைய டப்பா காரின் கருப்புபுகைதான் எப்படியாச்சும் அதனை முந்திவிட என் மனதை தூண்டிவிட்ட முதல் காரணி.

ஒருதடவை முந்தமுற்பட்டு எதிரே வந்த பஸ்வண்டிகாரன் ஹெட்லைட்டை பலமுறை விட்டுவிட்டு அடித்து காட்டி அபாயசங்கு ஊதியதில் பயந்து அந்த முயற்சியினை கைவிட்டிருந்தேன்!

தொடர்ச்சியாய் வந்தவளைவுகள் ,வாகனங்கள் காரணமாய்  முந்தி போக முடியாது மிகவும்  அல்லோலகல்லோக பட்டுபோயிருந்தேன் இடையிடையே அந்த வண்டிக்காரனோ  வானத்துக்கு கருப்பு வண்ணம் பூசுவதற்கு குறைந்த விலையில் விலைமனுகோரிய   ஒப்பந்தகாரன்   போல புகையினை கக்கிகொண்டிருந்தான் 

இனியும் பொறுமை  இல்லை எப்படியாவது முந்திவிடுவது எனும் அந்த முட்டாள் தனமான முடிவை எடுத்திருந்த தருணம் அது  ,கொஞ்சம் வாகன நெரிசல் இல்லாத நேரான வீதி(அல்லது அது எனக்கு நேரான வீதியாய் தோன்றி இருக்க வேண்டும் ) பல தடவை அநேக விபத்துகளை நேரே கண்டிருந்தாலும் அது எல்லாம் மனசுக்கு முன்னால் வரவே இல்லை ,அந்த வண்டியை முந்துவது அது  மட்டும்தான் முக்கியமாய் பட்டது .

ஒரு சிறு வளைவு  எதிரில் எந்த ஒரு வாகனமும் வருவதாய் தெரியவில்லை ,இதுதான் சர்ந்தர்ப்பம் என எண்ணி \வண்டியின் அக்க்சிலேட்டரை முறுக்கி  காரின் முக்கால் பாகத்துக்கு மேல முந்தி அந்த சாரதியை    ஒரு கேவலபார்வை பார்க்க திரும்பிய கணத்தில் தான் அந்த சம்பவம் நிகழ்தது ,திடிரென குறுக்கே எமனாகி பாய்ந்தது  அந்த கருப்பு நாய் . அடுத்த பக்கம் வண்டியை திருப்ப முயன்றபோது காற்றை  கிழித்தபடி பறந்து ஒரு கார் வந்துகொண்டிருந்தது ,நன்றாக கண்ணுக்கு தெரிந்து போனது இல்லாவிடின் இப்படி கதையாய் இதை எழுதிஇருக்க கூட  முடியாது ,"பிரேக்" பிடிப்பது  என்பது எனக்குநானே சாவு மணி அடிப்பதாய் போய்விடும் என மூளை விரைவாய் கணித்திருந்தது .   அடுத்ததாய் என்ன செய்வது என ஜோசிக்கும் தருவாயிலே என் வண்டியின் முன்சில்லு அந்த கருப்பு நாயின் கழுத்துக்கு கிழே  ஏறிகொண்டிருந்தது ,உடனே நாய் எழுதுவிட்டால் என் கதை சரி என நினைக்கும் போதே ,எது நடக்ககூடாதென இருந்தேனோ அது நடந்துவிட்டிருந்தது நாய்   மீண்டும் எழுந்ததும் பின் சில்லு அதன் மேல ஏறாது  சறுகிபோக வண்டி ஆட்டம் கண்டது அங்கும்   இங்குமாய்  ஆடி கொண்டிருக்கும் போதே அந்த கார்சாரதி வண்டியை நிறுத்தியிருந்தான் .

ஒரு மயிரிடைவெளியில் அந்த அனர்தம்  தவிர்க்கபட்டு ஒருவழியாய் வீதி ஓரத்தில் எனது வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன் ,அந்த வண்டியில் "அந்திமகால சேவை , அமரர் ஊர்தி " என பெயர்பலகை முன்னே இடப்ட்டிருந்தது .