Tuesday, June 24, 2014

சாய்மான கதிரை

எங்கள் வீட்டில் இப்போதைக்கு
வயதானது இதுதான் 
இதன்  பின்னல்களோடு சேர்த்து
எங்களின் பல நூறுகதைகள் பின்னப்பட்டிருக்கும்.

அம்மப்பாவுக்கு அரியாசனமாய்
அம்மம்மாவுக்கு சரியாசனமாய்
அம்மாவுக்கு  சிம்மாசனமாய்
அப்பாவுக்கு பொன்னாசனமாய்
 என பல அவதாரங்களை இது சுமந்திருக்கும்.அதன் பின்னலின் ஓட்டைகளில்
வெளிப்பட்டுபோனது
அதுக்கு வயதாகிய விசயம்.

தன்னை சீண்டுவார் யாருமில்லை எனும்
கோபத்தில் தன் ஒற்றைகையை
 உடைத்துவைத்திருக்கிறது.

ஓய்வுக்காக கொஞ்சம் உட்காந்த போது
அதன் ஓட்டைபின்னலோ என் காற்சட்டை
பொத்தானை இழுத்துபிடித்து இன்னமும்
கொஞ்சம் உட்காந்து போவேனன
கையை நீட்டி கதறுவதாய் தோனியது 

கைகள்,கால்களில்  ஆணியடித்ததால்
மீண்டும் உயிர்தெழுந்து  எங்கள்
 பா(ர)வங்களை சுமப்பதால் அதுவும்  
ஒரு இயேசுகிறிஸ்துதான்

ஓய்வெடுப்போர் வரட்டும் என 
ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது
எங்கள் பரம்பரையை சுமந்த
பல்லக்கான சாய்மானகதிரை  Sunday, June 22, 2014

விளம்பர மொடல் (இது ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வகை ஆராய்சி )

முதலில் இந்த சம்பவத்து கதாநாயகர்களை அடிக்கடி பஸ் வண்டிகள் இன்ன பல இடங்களில் இவர்களது பெருமையை காணலாம்!!!. சுத்தி வளைச்சு பேச விரும்பல, கலாநிதி பட்டம்,பி எஹ் டி பட்டம்  வாங்கும் ஒரு சிறு முயற்சியில் ஜட்டி பட்டி தெரியுறா மாதிரி பப்ளிக்ல ஸ்டைல் (கேட்டா அப்பிடிதான் சொல்லுதுக இந்த கருமத்த )பண்ணும் கேடு கேட்ட "ஹீரோமார்" பத்திய ஒரு கேவலமான ஆராய்சி கட்டுரை இது .

எனக்கு தெரிந்து இந்த முறையானது ஜட்டியை வெளியே போட்டு ஜீன்ஸ் உள்ளே போடும் "சூப்பர்மன் " படம் வந்த காலத்தில் இருந்து தோன்றியிருக்கவேண்டும்  பார்க்க படம் :
இப்படியே ஸ்டைல் காட்டும் பல  பேருடன் உரையாடிய போதும் ,அவதானித்த போதும் பின்வரும் பொதுப்படை அமசங்கள் காணப்படுகின்றது

1)எல்லோரும் தனுஸ் போல ஒல்லியாகவும் ,சிலர் தனுசுக்கு சைக்கிள் பம் ல காத்தடிச்சு  இன்னமும் நாலு கிலோ சேர்த்துகொண்டவர்கள்

2)அந்த கால "பல்லி முட்டாசு" ,மாதிரியான சில பல முத்துகளை கோர்த்து   அல்லது பக்கத்து வீட்டில் நாய்க்கு கட்டியிருந்த இரும்பு சங்கிலி  அவிழ்த்து எடுத்தோ கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள் ,அதிலும் மாலைக்கு பென்டன் போடுகிறோம் எனும் பேரில் கத்தி ,பிளேட் ,அலவாங்கு ,கோடரி,சுத்தியல்  என இன்னும் பல ஆயுதங்களை தொங்கவிடுவார்கள் (இந்த வெயிட்ட எல்லாம் இவன் உடம்பு எப்பிடி தாங்குது எனும் சந்தேகம் நமக்கு வந்துடும் படி எதையாவது  செய்வது இவரிகளின் தொழில் ரகசியம் )

3)தனது தம்பி ,தங்கைகளிடம் இருக்கும் "அளவு கடந்த"பாசத்தாலோ என்னவோ அவர்களின் டி சேர்ட் களை  போட்டு கொண்டு  வருவார்கள் .
அதிலும் வீதியில் வீதியோர நாய்கள் ,மாடுகள் என எல்லாம் வெருண்டுஓடிடும் படியான வாழைகுருத்துபச்சை கலரில் எல்லாம் அணிந்து நம்மளை பயமுறுத்துவார்கள் .தலைமுடி கொஞ்சம் நீளமாய் வர்த்த ஆண்களை கூட விட்டுவிடாமல்   தங்களின் அழகை??? வெளிக்காடுவார்கள்

4) முக்கியமாய் இவர்களின் தலைமுடி ஸ்டைல் கவனிக்கதக்கது ,நடு  மண்டையில்  பொல்லால் அடித்து ஒப்பரேசன் செய்த தடம் போல பிரித்து விட்டது போல் இருக்கும் ,இரவு நேரத்தில் மாட்டு கொட்டகைக்கு அருகில் போய்  படுப்பதாகவும் தலையில் பூசியிருக்கும் ஜெல்  போன்ற வஸ்துகளில் மனம் தாங்காமல் மாடே பனங்கொட்டை சூப்புவது போல தலையை சூப்பி விடுவதாகவும்  அப்படியே  செண்ட் அடித்து விட்டு குளிகாமலே வீதிக்கு வந்துவிடுவதாகவும் அன்பர் ஒருவர் தொழில் ரகசியம் சொல்லியிருந்தார்

5)இவர்களுக்கு மட்டும் அந்த மணம் எப்படி நல்லதாய்   படுகிறது என வியந்து மூக்கின் மேல விரலை வைக்கும் படியான செண்ட் ((ஓசியில யாரும்   கொடுக்கும் பொது   பார்க்க முடியாதாம் ) அடித்து இருப்பார்கள்


சரி இனி இவர்களின் தொல்லை பற்றி ஒரு அறிஜர் பென்பிடியானந்தா !! அவர்களின் கருத்து

பஸ்ல ஏறினா தம்பி: சீட் இருந்தாலும் இருந்தாலும் இவனுக இருக்க மாட்டானுகள் !!அப்படியே வீர பரம்பரையிலே இருந்து வந்தவன் போல கம்பிய பிடிச்சிட்டே வாரானுக !!ஜட்டி கொம்பனி க்கும் இவனுக்கும் ஏதும் அக்ரிமெண்ட் இருக்கும் போல தம்பி ,விளம்பர மொடலா ஜட்டி கொம்பனிக்கு  இருப்பன் போல  .ஆனாலும் தம்பி ஜட்டிக்கு விளம்பரம் பண்ணுறவன் அதிகமா பொண்ணுக  இருக்கிற பஸ் பார்த்து எதுக்கு ஏறுவாங்கன்னு தெரியல

நல்ல பிரண்ட் ஜட்டி போட்டிருந்தாலும் பரவால தம்பி ;கொழும்பு பெற்றாவுல  நூறுவாக்கு மூனு  ரக பெர்மனெண்ட் ல விக்கிற ஜட்டியெல்லாம் போட்டுட்டு ஸ்டைல் எனும் பேர்ல கன்றாவியா இருக்கு தம்பி .முந்தியொரு நாள் தம்பி இதே பஸ்ல ஏறின ஒருத்தன் இலாஸ்டிக் வைச்ச ஜட்டியெல்லாம் போட்டுட்டு வந்து கைய உயர்த்திடு பஸ்ல நிக்கிறான் தம்பி .இன்னுமொருநாள் ஒருத்தன் "பிங்க் " கலர்ல ஜட்டி போட்டிருந்தான் தம்பி ,அவசரத்தில பக்கத்து வீட்டு உடுப்பு கொடியில காய்ஞ்ச ஆண்டிகளோட  உள்ளாடைய எடுத்து போட்டுட்டு வந்திருப்பன் போல பரதேசி .

காலில் போடுற "சூ" வுக்கு கீழே  ஜீன்ஸ் போடுங்க அப்பிடின்னு சொன்னால் தம்பி   சூ### (சென்சார் ல கட்  பண்ணியாச்சு )க்கு கிழே போடுறானுக தம்பி ,அன்னிக்கு ஒருத்தன் வேட்டி  கட்டி இப்படி பட்டி  தெரிய போட்டிருக்கிறான்.

இவர்களுக்கு கொடுக்க கூடிய ஆலோசனைகள் பற்றி

ஜட்டியே  போடாமல் வெறுமென ஜீன்ஸ் மட்டும் போடலாம் (அமெரிக்க காரன் ஜீன்ஸ் போட்டால் ஜட்டி போடா மாட்டானாம் )ஆனால்  ஜட்டி  போடாமல்  ஜிப் போடும் பொது  கவனமா இருக்கோணும் .என் நண்பன் ஒருத்தனுக்கு ஜிப் போடும் பொது ஏற்பட்ட "அந்த துன்பியல் சம்பவம் "    காரணமாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
வெட்ட வேண்டி ஏற்பட்டது  (ஜிப் பை )

நல்ல சனல் ,பெரிய நைலான் கயிறு ,ஏன்  அடம்பன் கொடி கூட நல்ல பொருள் இவற்றில் ஒன்றை இடுப்பை சுற்றி கட்டி கொண்டு வர வைக்கலாம்


ரொம்ப லென்த் ஆக போவதால் அடுத்த பதிவில் ஆராய்ச்சி தொடரும்Friday, June 20, 2014

ஆல மரமும் ஆயிரம் பேயும்

சூனியக்கார பென்னொருத்தி  தலைமுடியை விரித்துகொண்டிருப்பது போலவே தனது ஆயிர கணக்கான விழுதுகளையும் கீழே தள்ளி விட்டுகொண்டு எந்த பயமும் இல்லாமல் தன்னம் தனியாளாய் நின்றுகொண்டிருந்தது  அந்த ஆலமரம்!  தனது அப்பப்பா காலத்திலிருந்து
அந்த ஆலமரம்  இருப்பதாய்  சொல்லிய எனது தாத்தா,அந்த மரம் பற்றிய பல சுவாரசிய கதைகளையும் சேர்த்து சொல்லியிருந்தார். அதில் எப்போதுமே பேய் கதைகள் உள்ளடங்கியிருக்கும் அதிலும் அப்படியான கதைகளையே நானும் விடுத்து விடுத்து கேட்பேன் !
பள்ளிக்கூட காலத்தில் பூதம் எந்தளவு பெரியது?  எப்படி இருக்கும் என நான் கேட்ட குதர்க்கமான கேள்விக்கு சோடாப்புட்டி கண்னாடியனிந்த  தமிழ் வாத்தியார் , இந்த ஆலமரத்து அளவு இருக்கும் என சொன்னதிலிருந்து அந்த மரத்தின் மர்மங்களை துலாவி அறிய அவா உண்டாகியது எனலாம் . மற்றைய ஆலமரத்து விழுதுகளில் எல்லாம் இளசுகள் ஊஞ்சல் ஆடுவதும் அதன் அடியிலே பெருசுகள் கூடி அரட்டைஅடிப்பதுமாய் இருக்கும் அந்த நடைமுறை இந்தமரத்தடியில் இல்லாது போனதும் ஏதோ மர்மம் அங்கு குடியேறி இருப்பதை இலகுவாய் உணர்த்தியிருந்தது . இந்த மரத்தடியிலிருந்து நான்கு நடை நேராக நடந்தாலே சவக்காலை வந்துவிடும். அதனாலோ என்னவோ பேய் பிசாசு என அந்த மரத்தை சுத்தி  "காஞ்சனா "பாணியிலான  ஆயிரக்கணக்கான சினிமா எடுக்க கூடியவளவு கதைகள் உலாவந்தன!

சாயங்கால நேரத்தில் அந்த மரத்து பக்கமாய் சைக்கிளில் தனியே போய் திரும்பி வருவதென்பது"பெர்முடா" முக்கோண பகுதியில் விமானம் பறந்து
திரும்பி வந்த அளவுக்கு சாத்தியமில்லாத ஒரு செய்கையாய் இருந்தது.சைக்கிளில் போகும் போது வெள்ளுடை அணிந்த பெண் நிறுத்தியதாகவும் தான் நிறுத்தாமல் கந்தசஸ்டி கவசத்தை உரக்க படித்து கொண்டே ஓடிவந்து விட்டதாய் ஒருவன் திடிரென புரளி சொல்லுவான் ,இன்னுமொருத்தன் சைக்கிளில் பின்னே யாரோ உட்காந்து கொண்டுவருவது போல தோனியதாகவும் கதை பேசுவான் .யாருக்கு அப்பிடி நடந்ததாய் கேள்வியுற்றால் அவர் வீட்டுக்கு போய் குத்துகால் இட்டு கதைபேசிவிட்டு வருவேன் .

ஒருநாள் அந்த மரத்தில் அப்படியென்ன இருக்கிறதென அறிந்துவிடும் அவாவில் தாத்தாவை நச்சரித்து ஒருவழியாய் சாயங்கால வேளையில் அப்பாவுக்கு தெரியாமல் அதிலும் குறிப்பாக அம்மாவுக்கு அறவே தெரியாமல் அழைத்து போவதாய் வாக்குறுதி தந்திருந்தார் !
அந்தநாளும் வந்தது ,தாத்தாவோ மந்திரம் மாந்திரீகம் என கொஞ்சம் தெரிந்து வைத்திருந்ததும் எனக்கு வசதியாய்பட்டது .வீட்டருகில் இருந்த கோவிலுக்கு முதலில் கூட்டிச்சென்று என் உடம்பெங்கிலும் விபூதி பூசி ஏதோ மந்திரமெல்லாம் முனுமுனுத்தார் .சரி வா !நான் சொல்லுவது போல கேட்கவேனும் அங்கே போய் அதை தட்டுவது இதை தொடுவதெல்லாம் கூடாதென ஆயிரத்தெட்டு கட்டளைகளுடன்பயணம்ஆரம்பித்தது.தாத்தாவோடு சேர்த்து துணைக்கு பயம் வேறு ஒட்டிகொண்டது என்னுடன் ! அப்படியென்ன இருந்துவிடபோகிறது எனும் அசட்டு தைரியம் வேறு ,இருந்தாலும் மரத்தை நெருக்கி கொண்டிருக்கும் போது காலையில் டிவியில் பார்த்த சந்திரமுகி படத்திலே ரஜனியோடு போய் சிக்கிகொண்ட வடிவேல் ஜோக் எல்லாம் நினைவுக்கு வந்தது !

தேய்பிறைக்காலமாம் அது! இதையும் தாத்தாதான் சொல்லியிருந்தார்! இருளை வானம் கொஞ்சம் கொஞ்சமாய் குத்தகைக்கு எடுத்துகொண்டிருந்தது !மரத்தை நெருங்கிவிட்ட அறிகுறி வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த வெளவால் உள்ளிட்ட இராப்பறைவகள் மூலமாய் தெரிந்தது ! 
தாத்தா கொஞ்சம் நில் !!என கையில் போத்தல் ஒன்றில் வைத்திருந்த தண்ணீரை கொஞ்சமாய் கையில் எடுத்து ஏதோ முணுமுனுத்தபடி எனக்கு வீசியடித்தார் கூடவே அவரும் தலையில் தெளித்துகொண்டு  ஒரு சுற்று சுற்றி நான்கு திசையிலும் எச்சில் துப்பினார்! ஏன் தாத்தா இப்பிடி என கேட்க ,இதெல்லாம் காவல் முறைமை உனக்கு புரியாது பேசாமல் வா என கடிந்து கொண்டார் .

அந்த ஆலமரத்து விழுதை பற்றி ஊஞ்சல் ஆட வேண்டும் !அப்படி ஆடியதாய் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் எல்லோரிடமும் பெரியசத்தமிட்டு கத்தி சொல்லவேண்டும் இதுதான் இப்போதைக்கு  என் உட்சபட்ச ஆசையாய் இருந்தது.

மரத்துக்கு அருகிலே போய் சேர்ந்தாயிற்று!,தாத்தாவின் கையிலே இருந்த "டோர்ச்" லைட்டை பிடுங்கி மரம் முழுதும் அடித்து பார்த்தேன் ,நல்ல பெரிய விருந்து உண்ட அரக்கன் ஒருத்தன் தலையே விரித்து அமைதியாய் தூங்குவதுபோலே இருந்தது! அந்தமரத்தில் காய்த்து கிடக்கும் சிவப்புநிற ஆலம்பழங்கள்   அந்த தலைமுடியில் ஒழிந்துகிடக்கும் பேன் போலவும் இருக்க அதை கொத்திதின்னும் ஆசையில் வெவ்வால்கள் தலைகீழாய் தொங்கிகொண்டிருந்தன.

அப்போதுதான் தம்பி தம்பி !! என கொஞ்சம் கரகரப்பான குரல் ,நிட்சயமாய் அது எனது தாத்தாவின் குரலே இல்லை டப்பென்று  வியர்த்துபோனது !டோர்ச்லைட்டை எடுத்து முகத்துக்கு  அடிக்க நினைத்த போது ,
தம்பி தம்பி என்ன என்ன பிரச்சனை ?? என எனது உதவியாளராய் இருக்கும் அந்த பெரியவர் எனது தோளை உலுக்கி எழுப்பிய போதுதான் புரிந்தது இவ்வளவு நேரமும் நினைவுகளோடேநீச்சலிடித்திருந்தேன்.அந்த ஆலமரத்தின் சில்லெனும் குளிர்காற்றிலேதான் நான் தூங்கிபோயிருந்தேன் என உங்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும்.

சேர் அப்பிடின்னா வேலையை ஆரம்பிக்கவோ?என சிங்களத்தில் வினவியிருந்தான் அவன் கொஞ்சம் பொறு என சொல்லி மேலிடத்துக்கு ஒரு மின்னஞ்சலை டைப் அடித்து கொண்டிருந்தேன் !!

 "மிகவும் பழமையான மரமொன்று வீதியின் இடதுபக்கம் இருப்பதனால் அதனை பாதுகாக்கும் நோக்குடன் வலதுபக்கமாய் கொஞ்சம் சேர்த்து வீதியினை விஸ்தரித்து 
வேலையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் அதற்கேற்ற நடவடிக்கைககளை எடுக்கவும் "என்பதே அந்த மின்ஞஞ்சலின் சுருக்கமாய் இருந்தது.
புதிதாய் மாற்றம் பெற்று சொந்த ஊருக்கு வேலை செய்ய வந்து ஒரு நல்ல வேலையை செய்த திருப்தியோடு வண்டியை விட்டு கீழிறங்கினேன்! இப்போதெல்லாம் இந்தமரத்தில் பேய்களும் இல்லை பிசாசுகளும் இல்லை அப்பிடி இருந்து அவை தங்களை காட்டிகொள்வதுமில்லை போலும்.

Thursday, June 19, 2014

விடலை பருவம்

வெட்கமறியா விடலை பருவத்தில்
வெயிலை அள்ளி பருகியிருந்தோம் 
வெந்தனலாய்  வீதிதகிக்கும்  வேளைகளிலே
வெற்றுகாலில்  நடைபயின்றிருப்போம்

மழையாகி வானமழும்
மாலைநேரங்களில்  
மகிழ்வோடு நனைத்ததில்
மறந்தே போனது கவலைகள்


பனங்காய் சில்லுவண்டி,அந்த கால 
பணக்காரதனமான கார் எங்களுக்கு,
கிட்டிபுள்ளுக்கு குழி தோண்டியதில் 
கினற்றுமடுவாகியது வீதியெல்லாம்

நாவல்பழம் உண்டு மருதானியிட்டு
நாக்குகளை அழகுபடுத்துவோம்,
நாக்குநுனியால் எட்டிஎட்டி 
எச்சில் ஊற்றி மீசை வளர்த்திருந்தோம்

காலம் மாறியது, காகிதபணத்தின்
காலடியில் அடிபணிந்தோம்,
கவலைகளோடு  கைகோர்த்தோம்
கண்ணீரில் மூழ்குகின்றோம் !!
Tuesday, June 3, 2014

வேகம்

கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர்க்கும் அதிகமான தூரம் அந்த வண்டியின் பின்னாலே வந்துகொண்டிருக்கிறேன்!எப்படியாச்சும் அதனை முந்திவிட வேண்டும்,அந்த வண்டிசாரதிக்கு நன்றாக பச்சை பச்சையாய் மிக கொடுமையாய் திட்டவேண்டும் அதுதான் இப்போதைக்கு இலட்சியம் நோக்கம் எல்லாமே.வீட்டுக்கு அவசரமாய் போவது,வெளிநாடு போகபோகும் நண்பனை வழியனுப்புதல் எல்லாம் இரண்டாம் பட்சமாகி போனது

கண்டிப்பாய் அந்த காரை  உற்பத்தி செய்த கொம்பனி எல்லாம் இழுத்து மூடிவிட்டிருப்பார்கள். அவ்வளவு பழைய காலத்து வண்டி ,வெள்ளை கலர்தான் அதன் உற்பத்திக்கலர் என்பதை கொஞ்சம் கவனமாக பார்த்தால் மாத்திரமே கண்டறியலாம் மற்றபடி நன்றாய் வெற்றிலை,பாக்கு போட்டு குதப்பிய கிழவிகளின் கறைபடிந்த பல்லு போல நிறம் மாறி போயிருந்தது 

ஒரு காலத்தில் இந்த கார் நல்ல அம்சமான பெண் போலே இருந்திருக்க வேண்டும் ,காமுகர்கள் எல்லாம் கண்டபடி இடித்துவிட்டுபோன தடங்கள் ஆங்காங்கே பளிச்சென தென்பட்டது .வண்டியின் இலக்கம் அது எத்தனை சகாப்தம் பழையது என்பதை பரிசம் போட்டுகாட்டி நின்றது. 14ஶ்ரீ 23*** என இலக்கதகடு ஆங்காங்கே உடைந்து வயதான கிழவன்  போல் பொக்கைபல் காட்டி   சிரித்து கொண்டிருந்தது .

வழக்கமாய் இவ்வாறன வாகனங்களை  எல்லாம் இலகுவாய் முந்தி கொண்டு போய்விடுவேன் .மணிக்கு சாதரணமாய் 60முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனக்கு ஆனால் இந்த காரின் பின்னே 40 கிலோமீடர் வேகத்தில் போவது என்பதை  ஏற்கமுடியாதிருந்தது  .போதாததுக்கு இன்று வெள்ளைக்கிழமை வேறு அலுவலம் முடிந்து தத்தம் சொந்த ஊருக்கு போய்கொண்டிருப்பர்கள் ,ஏனையவர்கள் என  மிகவும் மோசமான வாகன  நெரிசல் முந்த முடியாமல் இருப்பது பெரியதாய் தோன்றவில்லை  ,அந்த பழைய டப்பா காரின் கருப்புபுகைதான் எப்படியாச்சும் அதனை முந்திவிட என் மனதை தூண்டிவிட்ட முதல் காரணி.

ஒருதடவை முந்தமுற்பட்டு எதிரே வந்த பஸ்வண்டிகாரன் ஹெட்லைட்டை பலமுறை விட்டுவிட்டு அடித்து காட்டி அபாயசங்கு ஊதியதில் பயந்து அந்த முயற்சியினை கைவிட்டிருந்தேன்!

தொடர்ச்சியாய் வந்தவளைவுகள் ,வாகனங்கள் காரணமாய்  முந்தி போக முடியாது மிகவும்  அல்லோலகல்லோக பட்டுபோயிருந்தேன் இடையிடையே அந்த வண்டிக்காரனோ  வானத்துக்கு கருப்பு வண்ணம் பூசுவதற்கு குறைந்த விலையில் விலைமனுகோரிய   ஒப்பந்தகாரன்   போல புகையினை கக்கிகொண்டிருந்தான் 

இனியும் பொறுமை  இல்லை எப்படியாவது முந்திவிடுவது எனும் அந்த முட்டாள் தனமான முடிவை எடுத்திருந்த தருணம் அது  ,கொஞ்சம் வாகன நெரிசல் இல்லாத நேரான வீதி(அல்லது அது எனக்கு நேரான வீதியாய் தோன்றி இருக்க வேண்டும் ) பல தடவை அநேக விபத்துகளை நேரே கண்டிருந்தாலும் அது எல்லாம் மனசுக்கு முன்னால் வரவே இல்லை ,அந்த வண்டியை முந்துவது அது  மட்டும்தான் முக்கியமாய் பட்டது .

ஒரு சிறு வளைவு  எதிரில் எந்த ஒரு வாகனமும் வருவதாய் தெரியவில்லை ,இதுதான் சர்ந்தர்ப்பம் என எண்ணி \வண்டியின் அக்க்சிலேட்டரை முறுக்கி  காரின் முக்கால் பாகத்துக்கு மேல முந்தி அந்த சாரதியை    ஒரு கேவலபார்வை பார்க்க திரும்பிய கணத்தில் தான் அந்த சம்பவம் நிகழ்தது ,திடிரென குறுக்கே எமனாகி பாய்ந்தது  அந்த கருப்பு நாய் . அடுத்த பக்கம் வண்டியை திருப்ப முயன்றபோது காற்றை  கிழித்தபடி பறந்து ஒரு கார் வந்துகொண்டிருந்தது ,நன்றாக கண்ணுக்கு தெரிந்து போனது இல்லாவிடின் இப்படி கதையாய் இதை எழுதிஇருக்க கூட  முடியாது ,"பிரேக்" பிடிப்பது  என்பது எனக்குநானே சாவு மணி அடிப்பதாய் போய்விடும் என மூளை விரைவாய் கணித்திருந்தது .   அடுத்ததாய் என்ன செய்வது என ஜோசிக்கும் தருவாயிலே என் வண்டியின் முன்சில்லு அந்த கருப்பு நாயின் கழுத்துக்கு கிழே  ஏறிகொண்டிருந்தது ,உடனே நாய் எழுதுவிட்டால் என் கதை சரி என நினைக்கும் போதே ,எது நடக்ககூடாதென இருந்தேனோ அது நடந்துவிட்டிருந்தது நாய்   மீண்டும் எழுந்ததும் பின் சில்லு அதன் மேல ஏறாது  சறுகிபோக வண்டி ஆட்டம் கண்டது அங்கும்   இங்குமாய்  ஆடி கொண்டிருக்கும் போதே அந்த கார்சாரதி வண்டியை நிறுத்தியிருந்தான் .

ஒரு மயிரிடைவெளியில் அந்த அனர்தம்  தவிர்க்கபட்டு ஒருவழியாய் வீதி ஓரத்தில் எனது வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன் ,அந்த வண்டியில் "அந்திமகால சேவை , அமரர் ஊர்தி " என பெயர்பலகை முன்னே இடப்ட்டிருந்தது .