Friday, May 30, 2014

மைனா கூட்டமும் வீடும்

இரண்டு மூன்று நாட்களாய் மீண்டும்  அந்த மைனா கூட்டத்தினை எங்கள் வீட்டு வாசலில்அவதானிக்க முடிந்தது,அதில் நேற்றுகூட ஒன்று என் மோட்டர்வண்டியில் ஏறி இருந்து தன் ஜோடியோடு ஏதோ காதல் கதை பேசிக்கொண்டிருந்தது ..

சுமாராக ஒராண்டுக்கு முதலில் எங்கள் வீட்டின் வாசலிலே ஒவ்வொரு நாளும் கூடி கும்மாளடித்திருந்த மைனா கூட்டமாகத்தான் அது இருக்க  வேண்டும்.மொத்தமாய் நான்கிலிருந்து ஏழு எனும் அளவில் மைனாக்கள் எப்படியும் ஒவ்வொரு நாளும் வீட்டுவாசலுக்கு வந்துவிடும்.

அந்த மொத்த மைனா கூட்டமும் அவசரகாலத்தில் வேற்றுநாட்டு விமானதளத்தில் இறங்கும் விமானங்கள் போல ஒன்றன்பின் ஒன்றாக எங்கள் வீட்டு வாசலில் இறங்கும் .எங்கிருந்து எப்படி வருகின்றன என தெரிந்திருக்காது .ஆனால் அவை இறங்கும் அந்த நேரம் எப்படி அம்மாவுக்கு தெரியும் என எனக்கு தெரியாது .சரியாய் தனது அப்பாவும் அம்மாவும் அலுவலகத்து  போனதும் தனித்து போகும் பேத்தியை  தூக்கி மடியில் வைத்து கொஞ்சும் நேரத்தில் அப்படி அந்த மைனாக்கள் வந்து இறங்க தொடங்கும் .ஒவ்வொருநாளும் ஏதாச்சும் ஒரு பரிசுப்பொருள் அவைகளுக்காய்  காத்திருக்கும் பருப்பு,நேற்று மீந்து போன பயற்றங்காய் என ஒவ்வொருநாளும் அவற்றுக்காய் வேறுபட்ட மெனு வைத்திருப்பாள் அம்மா!

சமையலுக்காய் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது கையில் வைத்திருக்கும் மரக்கறி கழிவுகளை  கொட்டிவிட்டு அவைகள் உண்பதை பேத்திக்கு காட்டி கொஞ்சிக்கொண்டிருப்பாள்! மைனாக்கள் என்  அம்மாவை பார்க்க ஒவ்வொருநாளும் வந்து போகின்றதோ இல்லை அவைகளை பார்க்கதான் அம்மாவும் பேத்தியும் உட்காந்திருக்கிறார்களோ?? எனும் சந்தேகம் எனக்கு பலதடவை வந்திருகிறது 

மைனாக்களுடன் அம்மா பேசும்விதமும் அவற்றோடு ஒட்டிஉறவாடும்  விதமும் பார்ப்பதற்கே அலாதியானவை.மைனாக்களுடன் இன்னுமொருவகை குருவிகளும் (அதற்கு பெயர் கூட பீக்கழுவான் என அம்மாதான் சொல்லிதந்திருந்தாள் )வந்தாலும் அவை தள்ளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும். மைனாக்கள் பேசும் மொழியை எப்படி அம்மா அறிந்திருப்பாள் எனும் வியப்பு இப்போதும் தொக்கி நிற்கின்றது மனதில் ,சூசூசூ ,கூக்கூ என சப்தங்களுடன் அவைகளுடன் பேசிக்கொண்டிருப்பாள் அம்மா.அவள் உட்காந்து கொண்டிருக்கும் அந்த சாய்மான கதிரையின் கீழே பயமில்லாமல் வந்து போக பழகியிருந்தன அவை . மைனாக்கள்  வர மறந்த நேரங்களில் அல்லது பிந்திபோன நேரங்களில் "மைனா இங்கே வா வா" என ஒரு பாடல்  பேத்தியுடன் கோரஸாக ஒலிக்கும் .அந்த பாடல் கேட்டு சற்றே நேரத்தில் விர்விர் என்று வாசலில் இறங்கி சிரிக்கும் மைனாக்கள் !  எங்கிருந்து இவை வருகின்றன என தேடியே கொஞ்சம்  சளைத்திருப்பேன் ,அம்மாதான் சொல்லியிருந்தாள் அந்த விஸ்ணு கோவில் கோபுரத்தில் இருந்து தான் இவைகள் வந்திருக்கவேண்டும் என்று. ரெண்டு தரப்பும் பேசிகொள்ளும் போது சொல்லி கொடுத்திருக்கும் போல.

எனக்கு தெரிந்து சின்னதாய் மிகவும் காரமான "பீஸ்வன் கொச்சிக்காய்" அல்லது சீரக மிளகாய் கன்று என சொல்லப்படும் ஒன்றை ,யாழ்பாணம் போன யாரிடமோ சொல்லி வாங்கி பழைய வாகன டயரில் மண்ணை நிரப்பி( அதை நிரப்ப சொல்லி என்னை ஆயிரம் தடவை கேட்டதும் நானோ அப்புறமா செய்யலாம் என சொல்வதும் ஒருநாள் அவாவ மண்ணை அள்ளி கொட்டி )அந்த மிளகாய் கன்றை நட்டு சுற்றி கம்பி வலையால் சின்னதான ஒரு சுற்றுவேலி அமைத்திருந்தாள் .அது பூத்து காய்க்கதொடங்கிய போதெல்லாம் அதை அருகில் நின்று எண்ணுவதும் ரசிப்பதும் என சுவாரசியமான ஒரு பந்தத்தினை அதனோடு உண்டாக்கியிருந்தாள்.ஒரு நாள் எல்லா பூ,பிஞ்சு காய்களை அந்த மைனா கூட்டம் துவம்சம் செய்திருந்தது .அடுத்த நாள் வந்திறங்கிய அவற்றை துரத்தவும் முடியாமல் ஆசையாய் நாட்டி வளர்த்த மிளகாய் செடியை அவற்றுக்கே தாரைவார்த்து கொடுத்திருந்தாள்!!அப்படியாய் அவற்றோடு ஒரு பாசம் வைத்திருந்த ஒரு சீமாட்டி


ஆசையாய் வளர்த்த மிளகாய் செடியின் பூ பிஞ்சுகள் என பாராது துவம்சம் செய்த குற்ற உணர்ச்சியினாலோ என்னமோ, வராமலே போன அந்த மைனா கூட்டம்  இப்போது வந்திருக்கிறது .பாவம்  அவைகள் உண்டு மகிழ அந்த மிளகாய் செடியும் இல்லை ,அதை விட    அவற்றுடன் கதை பேச அம்மாவும் இப்போது இல்லை   அவற்றுடன் பேச , அதன் மொழி தெரியாத நான் எப்படி சொல்லுவது அம்மா திடிரென இறந்துபோன கதையை !!