Wednesday, May 28, 2014

தாமதம்


அடிக்கடி கையை திருப்பி  திருப்பி பார்த்ததில் கோபமோ,என்னவோ தெரியவில்லை இன்னமும் கொஞ்சம் வேகமாகவே கடிகாரம் சுற்றிக்கொண்டிருந்தது .கைகாட்டி நிற்க சொல்லியும் ஊர்ந்து வந்த  நான்காவது பஸ்சும் நிறுத்தாமலே போய் விட்டான் , "பொண்டிங்" தாடியை சொறிந்து கொண்டே நேரத்தை சரிபார்க்கையில் மணிக்கூடு  இன்னமும் பத்து நிமிடத்தை தின்று ஏப்பம் விட்டிருந்தது அவசர அவசரமாய் மனைவி செய்து தந்ததில்  ஓரத்தில்கருகி போன ஒற்றை தோசையினை அள்ளி புகுத்தி கொண்டு அரக்க பரக்க பஸ் ஏற ஓடிவந்திருந்தான்."இன்னுமொன்னு சாப்பிட்டுட்டு போங்க ஒன்னே ஒன்னு  "என்ற  மனைவின் சப்தம் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு வயிற்றுக்குள் பசியோடு ஒரு கச்சேரி நடத்திகொண்டிருந்தது .

சீய்!! பாழாய் போன "பைக்" இப்படி துரோகம் செய்துவிட்டதே என கோபம் ஒருபக்கம் ,விரைவாய் போய் சேர்ந்துவிட வேண்டும் எனும் தவிப்பு ஒரு பக்கம் .நேற்று பின்னேரம்  பைக்கில் போன போதுதான் டயரில் அந்த சின்ன ஆனி ஏறியிருக்க வேண்டும் ,இதெல்லாம் வில்லனாய் வந்து சேருமென யார் கண்டார் .

மொத்தமாய் பஸ் ஏற வந்து முப்பது நிமிடத்துக்கு மேலாகி விட்டது இன்னமும் பஸ் ஏறியபாடில்லை . வழமையாகவே அலுவலகத்துக்கு தாமதமாகி வருவோர் பட்டியலில் முதலிடத்தில் குத்துக்கால் போட்டு  இவன் பெயர் உட்காந்திருக்கும் .இன்றும் தாமதத்துக்காய் தீம்தக்கடி தக்கடி என குதிக்க இருக்கும்  அந்த அரைகுறை மஜேனரை எப்படியெல்லாம் சமாளிப்பதென பயந்து முதலிரவு அறைகுள் போக காத்துநிற்கும் புதுப்பொண்டாட்டி போல ஆயிரம் தடவை ஜோசித்துகொண்டான்.

நேற்றே அலுவலகம் முடிந்து போகும் போதே ,நாளைக்கு எல்லோரும் ஒன்பது மணிக்கு  முன்பே ஆஜராகி விடவேணும் எனும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தது   சொல்லிமுடித்த பின்னர் அவனை பார்த்து ஒருவித சிரிப்பும் சிரித்திருந்தார் ,அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததில் தான் இத்துணை அவசரமாய் இன்று எண்ணெயில் போட்ட அப்பளமாய் தத்தளித்து கொண்டிந்தான் .

பைக் பஞ்சர் ,மகளுக்கு காய்ச்சல் ,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என சொல்லிய பொய்  எல்லாவற்றையும் மனேஜரே மனபாடம் செய்திருப்பார் என்ன சொல்லலாம் எப்பிடி பொய் சொல்லலாம் என ஆயிரம் ஒத்திகைகளை மாறி மாறி நிகழ்த்தி கொண்டிருந்தது மனசு ,ஆனால் கண்களோ வரவிருக்கும் பஸ் வண்டியை நோக்கியே இருந்தது .

ஆமையை விட சற்றே வேகமாய் ஊர்ந்து போகும் வாகன நெருசலும் இன்னமும் எரிச்சலையே ஊட்டிக்கொண்டிருந்தது!!அப்போதுதான் கவனித்தான்  வரிசையில் போய் கொண்டிருந்த ஒரு உயர்ரக புத்தம் புது கார் வரிசையை விட்டு விலகி நிற்பதும் அதிலிருந்து  வெள்ளை நிற முழுநீள சேர்ட்டுடனாதும் , ரெண்டுக்கும் அதிகமான மோதிரங்களுடன் மினிங்கிகொண்டிருக்கும் விரல்களும் தன்னையே வா வா வா என அழைப்பது போல் இருக்க,சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்துகொண்டு உறுதி செய்திருந்தான் தன்னை தான் அந்த பணக்காரதனமான கை அழைத்ததென்று .

போகலாமா வேண்டாமா என மனசு ஜோசிக்கும் போதே கால்கள் நடையை கட்டியிருந்தன காரை நோக்கி ,காரின் கறுத்த கண்ணாடியை கீழே இறக்கி "ம்ம்ம்ம் ஏறுங்க"" திடிரென பயந்தே போனான் ,இருக்காதா பின்னே யாருக்கு பயந்து அலுவலகம் போய் என்ன ஏது பேசுவதென ஒத்திகை பார்த்தவர் கண்முன்னே கூடவே அவர் வண்டியில் வேறு ஏறச்சொன்னால்,

இல்ல சேர் நீங்க போங்க நான் பஸ்ல வாரன் 
இல்ல பரவாயில்லை வாங்க டிராப் பண்ணிவிடுறேன் 

பலிகொடுக்கும் ஆடு கத்த வார்த்தை வராமல் தவிக்கும் நிலையில் அவன் இருந்தான் ,வண்டியினுள்ளே
ஏறியதும் வண்டியின் ஏசி குளிரையும் தாண்டி " குப்பென"  வியர்க்க தொடங்கியிருந்தது .இயல்பாகவே இருக்கும் அந்த பயந்த சுபாவம் இன்று முடி போட்டு கொண்டு முன்னே வந்து நின்றே காட்டி  கொடுத்து நிற்கின்றது 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என ஜோசித்து கொண்டிருக்கும் போதே அவராகவே பேச ஆரம்பித்திருந்தார்!! 

"பைக் பஞ்சர் ஆகிட்டுதாமே?? உங்க வைfவ் சொன்னாங்க ,என் ரெண்டாவது மகள் படிக்கிற வகுப்பு கிளாஸ்டீச்சர் உங்க வைfவ் தான் ,ஸ்கூலுக்கு பிள்ளையை கொண்டு விடும் போது சந்திச்ச்சு பேசினப்போதான் அவங்க உங்க வைfவ் ந்னு தெரிஞ்சுச்சு "
பராவாயில்லை ,இனி போகும் போது என் கூடவே வந்துடுங்க !! மனேஜர் பேசிக்கொண்டே போனார்.


காலையில் மனைவி ஊட்டிவிட்ட தோசை தித்திப்பாய் உள்ளிறங்கி போய்கொண்டிருந்தது இப்போதுதான் அவனுக்கு