பாவம் இன்றும்
பசியை போர்த்திக் கொண்டே
தூங்க போயிருப்பாள்.
வயசு பதினாறிலே
வாழ்க்கைப்பட்டவள்
வறுமையின் கழுத்தில்
தாலியை தொங்கவிட்டிருக்கிறாள்
போர்த்திருவிழாவில் தொலைந்திருந்தாள்
பொன்னான கணவணை
பின்னாலே போன தலைச்சன் பிள்ளையும்
மண்னோடே போயிருந்தான் !
ஒற்றை கைக்குழந்தை
பசிக்கான விடை தேடி அவளின்
வற்றிய முலைக்காம்பு நாடும்
பத்துபாத்திரம் தேய்த்து
பிழைக்க வழி இருக்குமெனின்
கந்தல் உடை வழியே காமத்தை
உள் நுழைப்பான் எஜமானன்.
அப்பம் சுட்டு வறுமையை
எரிக்க முயன்றால்
அப்பத்துக்கு விலை இல்லை
அவளின் இளமைக்கே விலை
தாசியாய் இருந்திருந்தால்
தாராள வாழ்வுண்டு
தன்மானம் உள்ள
தமிழ் பெண்ணாகி போனதனால்
இன்னும் பசியை போர்த்தியே
உறங்குகிறாள்!!