Saturday, November 1, 2014

நிவாரண பணி ::::: ஒர் மாற்றுகருத்து

பத்து வருடங்கள் முன்பு கிழக்கு கரையோரம் மட்டுமல்லாது ஒட்டு மொத்த கரையோரமும் சுனாமியால் அள்ளுண்டு போனது நினைவுக்கு வந்து போகிறது !!இப்போது அந்த களம் கொஞ்சம் மாறியிருக்கிறது.அன்று இங்கு இப்போது மலையகம் . இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம்  நமக்கிருந்த தேவை வேறு மலையகத்தில் பாதிக்கபட்டவர்களின் தேவையோ  வேறு.


பாதிக்க பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் என்பது உண்மையிலே ஒரு மகத்தான சேவை .அதுவும் பாதிக்கபட்டவர்களுக்கு உடனடி உதவிகரம் நீட்டுதல் நல்லதே ஆனாலோ முக்கிய விடயம் அதனை விடவும் உங்கள் உதவிகள்,தற்போதைய நிலைக்கு ஒத்துப்போகின்றதா என்பதும் கவனத்துக்கு கொள்ள வேண்டியதே! 

மொத்தமாய் அவர்கள் ( கொஸ்லந்த எஸ்டேட் மக்கள் ) எல்லோரும் மண்ணுள் அள்ளுண்டு போயிருக்க யாரிடம் போய் நிவாரணம் கொடுப்பது ?  ஒட்டுமொத்தமாய்  300 பேர் அனைவரும் பலி!! இதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்து நிற்கும் ஒரு பாலகனுக்கு நீங்கள் "அங்கர் " பெட்டியும் சீனீயும் கொடுத்துவிட்டு உங்கள் பப்ளிசிட்டிக்காய் ஆயிரம் போட்டோக்களை பிடிக்கும் போது கொஞ்சம் கூடஉங்கள் மனசு கூசாமல் இருக்குமோ?  

உங்களுக்கு இலகுவாய் புரியும் பாணியிலே சொல்லுகிறேன் நீங்களும் கத்தி படம் பார்த்திருக்கலாம் .எனக்கும்   "கத்தி" படம் பார்க்க கிடைத்தது ,அதில் உணரபட்ட கதைக்களமே இங்கும்  இருப்பதாய் கருதுகிறேன் .தங்கள் சமூகத்தின்  வாழ்வு உயர்வுக்காய் கழுத்தை கத்தியால் அறுத்த அதே மூத்த குடிகளின் நிலைதான் இங்கும் அந்த "லயன்குடிமக்களுக்கு"  அதில் அவர்களாக கழுத்தை அறுத்து கொண்டனர் இங்கு இயற்கையே உதவியிருக்கின்றது .அந்த படத்தில் உயிர் இழந்த மூத்தகுடிகளை போலவே இவர்கள் உயிரும் அவர்கள் சார் சமூக  உறவுகளின் வாழ்வை உயர்த்த வேண்டும் என்பது என் எண்ணம் !! 

உங்கள் நிவாரணம் அவர்களுக்கு ஒரு தற்காலிக வாழ்வுரிமை ஏற்பாடாய் இருந்த போதிலும் இன்னமும் நூற்றுக்கணக்கான 10*10 அடி லயன் கூடாரங்களில் உண்ண, உடுக்க , சமைக்க தூங்க என ஒற்றை அறையில் குடும்பம் நடத்தும் இன்னமும் பல மக்களக்கு இப்படியான நிலை மீண்டும் வராது இருக்கும் படியான வேறு வாழ்விடம்,நிலையான கூடவே வலிமையான வாழ்விடம் தேவை  .கூடவே வாழ்வில் உயர்வு தேவை .
இந்த சம்பவத்தின் பின்னேஆவது அரசோ அல்லது தோட்ட அதிகாரிளோ அவர்களுக்கு ஒரு நிரந்தர குடிமனைகளை வசிக்க உகந்த இடத்தில் அமைக்க முன்வரலாம் . 

இதனை விடவும்  நிர்க்கதியாய் நிற்கும் அந்த சிறார்களே முக்கியமானவர்கள் அவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை ,உங்கள் சொசைட்டியோ அல்லது கழகமோ பொறுப்பேற்கலாம் அதாவது அவர்களின் கல்வி, வாழ்வு முதலியவற்றுக்கு ஒர் கோர்ட் பாதராக இருக்க முடியும் ,இதை விடுத்து நிர்கதியான கொஞ்சம் பேருக்கு இந்தளவு நிவாரண தொகை அதிகமே அதை விட அந்த தேவை அவர்களுக்கு இல்லை.

ஆனால் உங்கள் நிவாரணமோ மீண்டும்  கையேந்தி நிற்கும் நிலைக்கு அவர்களை இட்டு செல்லலாம் கூடவே மீண்டும் இலவசத்துக்கு இரங்கும் நிலைக்கு வரலாம் ,உங்களால் முடியுமானால் அதுக்கு (வீட்டு மனை, குழந்தைகள் பாதுகாப்பு )ஆவனை செய்யலாம் .அதை விடுத்து நிவாரணம் எனும் பெயரில் உங்கள் ஒரு சிலரின்  பப்ளிசிட்டிக்காக அவர்களை மீண்டும் அடிமைகள் ஆக்காதீர்கள்! 

மன்னிக்கவும் இது எனது ஒரு மாற்றுக்கருத்தே தவிர யாருக்கும் எதிரான கருத்து அல்ல!!!! 

Thursday, October 30, 2014

மண் கெளவிய உறவுகளே!!

உங்கள் வியர்வையே 
உலகெங்கும் தேனீராய் 
அருந்தப்படுவது தெரியுமா
உங்களுக்கு?

உங்கள் வாழ்விடத்தை
உச்சத்தில் அமைத்தவர்கள்
 உங்கள் வாழ்க்கை மட்டும் பாதாளத்தில்
 உழல வைத்தது  ஏனோ?

நீங்கள் கிள்ளியெடுத்தே பழக்க
பட்டவர்கள் அதேதான் போலும்
 உங்களை கிள்ளுகீரையாய்
 நினைத்து விட்டார்கள்  அரசியல்வாதிகளும்
 கூடவே கடவுளர்களும்

அந்த மண்ணே உங்களை 
சுமந்தது ,இன்று அந்த 
மண்ணே உங்களை சுவர்கம் 
அழைத்தது !
மகிழ்வு கொள்ளுங்கள் 

 மண் கெளவியதாய்
 மனம் கோனாதீர்கள் ,அதே 
மண்தான் சோறு போடும் ! அதே 
மண்தான் வாழ்வும் கொடுக்கும் 

சேறு  படிந்த சட்டையை உதறிவிட்டு
வீறு கொண்டு எழுங்கள் உறவுகளே  !! 


இழந்த உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
Wednesday, September 3, 2014

மழையுடன் காதல்

பொட் பொட் என விழ ஆரம்பித்தது மழை!

முத்தாய் மாறும் ஆசையில் 
வாயை விரித்திருந்த நிலம் 
நீர்த்துளியை உள்ளிளுத்து 
மூடிக்கொண்டது சிப்பியாய்!

பூக்கள் கொஞ்சமாய் நனைந்தே போனது
இலைகள் குடையாய் விரிந்திருந்தாலும்.
காகங்கள் வெள்ளைக்கனவுடன் 
கரைந்தன ;பாவம் அவற்றுக்கு
டி.என்.ஏ பற்றி எல்லாம்  தெரிந்திருக்காது.

காகிதக்கப்பல்களில் ஏறி 
குழந்தைகளின் மனசு
பயணிக்க தொடங்கியிருந்தது!

தேனீர் கோப்பைகைபிடியுடன்
என் விரல்கள் புணர ஆரம்பித்ததும்
பேணாவை வைத்து விட்டு
நானும் மழையை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன் !

வீதி

அந்த வீதி எப்போதும் சுறுசுறுப்பானது


எறும்புகளின் தொடர் ஊர்வலமாய் 
வாகன அணிவகுப்புகள்

அம்புறாத்துணியில்
அடுக்கிய அம்புகளாய் 
அரசுப்பேருந்தில் ஆட்கள்

கவர்ச்சி கரகாட்டம்
ஆடும் கார்கள்,
பக்கவாத்தியமாய் 
பவனி வரும் வான்கள் 

சிறுத்தையென சீறும்
சின்ன சின்ன மோட்டர்வண்டிகள்
வெள்ளுடை தேவதைகளில் 
பள்ளிக்கூடவாகனம்
சைக்கிள்  எனஎல்லாம் கடந்து போயிற்று

அப்பா!!எதுப்பா மாட்டுவண்டி ? என கேட்டு 
நிற்கும் மகளுக்கு என் சொல்வேன்!
தலைமுறை இடைவெளி பற்றி!Sunday, July 27, 2014

முசுறு!!! (வரிசை கவிகள் )

எறும்புக்கும் கட்ட்டெறும்புக்கும்
நடந்த கலப்புதிருமணத்தில் 
பிறந்த கோவேறு கழுதை நீ 

திருட்டுமாங்காய் எடுக்கும் சமயத்தில்
கண்ட இடத்தில் கடித்து
செஞ்சோற்று கடன் தீர்த்ததில்
கர்ணன் பரம்ப்ரையின் கடைவாரிசு நீ

வரிசை எனும் சொல்லுக்கு
வரலாற்று உதாரணமாகி போன 
இனம் உன்னது

தென்னையோலையிலும்
குடியிருக்க முடியுமென
உன் குடிக்கு எடுத்துரைத்த
விஞ்ஞானி 

முற்கோபக்காரனுக்கு
உன் பெயர் சூட்டி 
மகிழ்ந்து  போனது
மானிடம் 

ஒர் பொழுது "பனையான் மீன்" என்
கரமேறி சொன்னது முசுற்று முட்டையை
இரையாய் போட்டுபிடித்தால் 
இனிதாய் செத்திருப்பேன் என


Saturday, July 5, 2014

வெண் பிரம்பு

 மச்சான் !!இன்னமும் பத்து நிமிசத்தில் நீ இருக்கும் இடத்துக்கு வந்துடுவேன் ,என சொல்லிக்கொண்டே  தொடர்பை துண்டித்திருந்தான்  அலுவலக நண்பன் .அப்படியே "கன்டி கிராஸ்" க்கு போய் அவன் வரும் பத்து நிமிடத்துக்குள் அந்த 176 வது லெவலை முடித்திடலாம் என கணக்கு பண்ணியது மனசு.

பைக்கை ஸ்டாண்டில் போட்டவாறே நிமிர்ந்த போதுதான் அவனை அவதானித்திருந்தேன் ! அநேகமாய் மார்கெட்,பஜார் என பிச்சை எடுத்துகொண்டு வயிற்றை நிரப்பும் அதே அவன்தான் ! கையில் இருக்கும் வெண்பிரம்பு அவன் பார்வையில்லாதவன் என சாட்சிக்கு வந்து சொல்லிபோனது  ,கோவில் மதில், வெறும்வளவு என எல்லா கதவுகளையும் தடவி தடவி தேடி "அம்மா அம்மா "என அழைத்ததில் அவன் கண்ணின் வறுமை உண்மையாய் புரிந்துபோனது .கொஞ்சம் கிட்டத்தே போய் அவனிடத்தில் பேசியதில் பஸ் வண்டிக்காரர் இங்கே இறக்கிவிட்டுதாக சொல்லி சந்தை பக்கம் போகனும் என சொல்லால் விழித்திருந்தான்! மஞ்சள் கடவையூடாக வீதியை குறுக்கறுதிருந்தாலும் அதெல்லாம் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை .பாதைக்கு அந்த பக்கம் அழைத்து வந்து  இப்படியே  போனால் சந்தை பக்கம் போயிடலாம் என சொல்லி அனுப்பிவைத்தேன் .

வெறும் காலில் நடப்பது அவனை பொறுத்தவரை  செளகரியமான விடயமாய் இருக்கவேண்டும் ,பாதை எது? பாதையோரம் எது ? என்பதெல்லாம் அந்த வெறும் காலே காட்டிகொடுத்துகொண்டிருந்தது .வீதியோரம் போகும் வாகனங்கள்  அவனை உரசிகொண்டு போவதை பார்க்கும் போதெல்லாம்  எனக்கு   திக்கென்று ஆகியது ,ஆனாலும் அவன் அதையெல்லாம் சமாளித்து இப்போதும் வீட்டு மதில்சுவர்களில் அம்மா அம்மா என கூப்பிட்டே போய்கொண்டிருந்தான்.  

அவன் கண்ணை விட்டு போனதும் திரும்பவும் மொபைலுக்குள்ளே மூள்கிபோனது என் பார்வைப்புலம் .திடிரென கிரீரீரீரீச்ச்ச்ச்ச்ச்!!!!!!!!!!!!!!!!! சத்தம் கூடவே பெரிதாய் படார்!!!!!!! என ஒர் சத்தம் கொஞ்சம் தூரத்தில் கேட்டது  அதுவும் அவன் நடந்து போய் கொண்டிருந்த பக்கமாக கேட்டது. அவனாகதான் இருக்க வேண்டும் எங்கேயும் வீதியை குறுக்கறுக்க முயலும் போது அடிபட்டிருக்கலாம் . அவனை கொண்டு சந்தை பகுதியில் சேர்த்துவிடவில்லையே எனும்  குற்ற உணர்ச்சியில் மனசு மட்டுமல்ல உடம்பு குறுகிபோனது 

பைக்கை எடுத்துகொண்டு பறந்தேன் அதற்குள் அங்கே ஆட்கள் கூடியிருந்தார்கள்  .ஒரு உயர்ரக டொல்பின் வகை "வான்" வீதிக்கு குறுக்காகி நின்றுகொண்டிருந்தது .வானின் டயருக்குள் சிக்கிவிட்டிருப்பானோ ? இல்லை வெறும் சில காயங்களுடன் தப்பித்திருப்பானோ ? உயிர் இருக்குமோ ?என என்னை நானே கேள்விகேட்டுகொண்டே பைக் கை ஸ்டாண்டில் போட்டு விட்டு இறங்கி  உள்ளே போனேன் !

அப்பாடா !!!!!கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது !அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை !அதை விட அடிபட்டது அவனே இல்லை ,ஒரு பசும் கண்ணுகுட்டியொன்று வீதிக்கு குறுக்காய் பாய்ந்து வானின் டயருக்குள் சிக்கியிருக்கிறது! நிம்மதியாய்வெளியே வந்து அவனை தேடினேன் தொலைவில் ஒரு வீட்டுகதவடியில் வெண்பிரம்பால் தட்டிகொண்டு "அம்மா அம்மா" என கூப்பிடுவது விளங்காமல் விளங்கியது !! 

Tuesday, June 24, 2014

சாய்மான கதிரை

எங்கள் வீட்டில் இப்போதைக்கு
வயதானது இதுதான் 
இதன்  பின்னல்களோடு சேர்த்து
எங்களின் பல நூறுகதைகள் பின்னப்பட்டிருக்கும்.

அம்மப்பாவுக்கு அரியாசனமாய்
அம்மம்மாவுக்கு சரியாசனமாய்
அம்மாவுக்கு  சிம்மாசனமாய்
அப்பாவுக்கு பொன்னாசனமாய்
 என பல அவதாரங்களை இது சுமந்திருக்கும்.அதன் பின்னலின் ஓட்டைகளில்
வெளிப்பட்டுபோனது
அதுக்கு வயதாகிய விசயம்.

தன்னை சீண்டுவார் யாருமில்லை எனும்
கோபத்தில் தன் ஒற்றைகையை
 உடைத்துவைத்திருக்கிறது.

ஓய்வுக்காக கொஞ்சம் உட்காந்த போது
அதன் ஓட்டைபின்னலோ என் காற்சட்டை
பொத்தானை இழுத்துபிடித்து இன்னமும்
கொஞ்சம் உட்காந்து போவேனன
கையை நீட்டி கதறுவதாய் தோனியது 

கைகள்,கால்களில்  ஆணியடித்ததால்
மீண்டும் உயிர்தெழுந்து  எங்கள்
 பா(ர)வங்களை சுமப்பதால் அதுவும்  
ஒரு இயேசுகிறிஸ்துதான்

ஓய்வெடுப்போர் வரட்டும் என 
ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது
எங்கள் பரம்பரையை சுமந்த
பல்லக்கான சாய்மானகதிரை  Sunday, June 22, 2014

விளம்பர மொடல் (இது ஒரு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வகை ஆராய்சி )

முதலில் இந்த சம்பவத்து கதாநாயகர்களை அடிக்கடி பஸ் வண்டிகள் இன்ன பல இடங்களில் இவர்களது பெருமையை காணலாம்!!!. சுத்தி வளைச்சு பேச விரும்பல, கலாநிதி பட்டம்,பி எஹ் டி பட்டம்  வாங்கும் ஒரு சிறு முயற்சியில் ஜட்டி பட்டி தெரியுறா மாதிரி பப்ளிக்ல ஸ்டைல் (கேட்டா அப்பிடிதான் சொல்லுதுக இந்த கருமத்த )பண்ணும் கேடு கேட்ட "ஹீரோமார்" பத்திய ஒரு கேவலமான ஆராய்சி கட்டுரை இது .

எனக்கு தெரிந்து இந்த முறையானது ஜட்டியை வெளியே போட்டு ஜீன்ஸ் உள்ளே போடும் "சூப்பர்மன் " படம் வந்த காலத்தில் இருந்து தோன்றியிருக்கவேண்டும்  பார்க்க படம் :
இப்படியே ஸ்டைல் காட்டும் பல  பேருடன் உரையாடிய போதும் ,அவதானித்த போதும் பின்வரும் பொதுப்படை அமசங்கள் காணப்படுகின்றது

1)எல்லோரும் தனுஸ் போல ஒல்லியாகவும் ,சிலர் தனுசுக்கு சைக்கிள் பம் ல காத்தடிச்சு  இன்னமும் நாலு கிலோ சேர்த்துகொண்டவர்கள்

2)அந்த கால "பல்லி முட்டாசு" ,மாதிரியான சில பல முத்துகளை கோர்த்து   அல்லது பக்கத்து வீட்டில் நாய்க்கு கட்டியிருந்த இரும்பு சங்கிலி  அவிழ்த்து எடுத்தோ கழுத்தில் தொங்க விட்டிருப்பார்கள் ,அதிலும் மாலைக்கு பென்டன் போடுகிறோம் எனும் பேரில் கத்தி ,பிளேட் ,அலவாங்கு ,கோடரி,சுத்தியல்  என இன்னும் பல ஆயுதங்களை தொங்கவிடுவார்கள் (இந்த வெயிட்ட எல்லாம் இவன் உடம்பு எப்பிடி தாங்குது எனும் சந்தேகம் நமக்கு வந்துடும் படி எதையாவது  செய்வது இவரிகளின் தொழில் ரகசியம் )

3)தனது தம்பி ,தங்கைகளிடம் இருக்கும் "அளவு கடந்த"பாசத்தாலோ என்னவோ அவர்களின் டி சேர்ட் களை  போட்டு கொண்டு  வருவார்கள் .
அதிலும் வீதியில் வீதியோர நாய்கள் ,மாடுகள் என எல்லாம் வெருண்டுஓடிடும் படியான வாழைகுருத்துபச்சை கலரில் எல்லாம் அணிந்து நம்மளை பயமுறுத்துவார்கள் .தலைமுடி கொஞ்சம் நீளமாய் வர்த்த ஆண்களை கூட விட்டுவிடாமல்   தங்களின் அழகை??? வெளிக்காடுவார்கள்

4) முக்கியமாய் இவர்களின் தலைமுடி ஸ்டைல் கவனிக்கதக்கது ,நடு  மண்டையில்  பொல்லால் அடித்து ஒப்பரேசன் செய்த தடம் போல பிரித்து விட்டது போல் இருக்கும் ,இரவு நேரத்தில் மாட்டு கொட்டகைக்கு அருகில் போய்  படுப்பதாகவும் தலையில் பூசியிருக்கும் ஜெல்  போன்ற வஸ்துகளில் மனம் தாங்காமல் மாடே பனங்கொட்டை சூப்புவது போல தலையை சூப்பி விடுவதாகவும்  அப்படியே  செண்ட் அடித்து விட்டு குளிகாமலே வீதிக்கு வந்துவிடுவதாகவும் அன்பர் ஒருவர் தொழில் ரகசியம் சொல்லியிருந்தார்

5)இவர்களுக்கு மட்டும் அந்த மணம் எப்படி நல்லதாய்   படுகிறது என வியந்து மூக்கின் மேல விரலை வைக்கும் படியான செண்ட் ((ஓசியில யாரும்   கொடுக்கும் பொது   பார்க்க முடியாதாம் ) அடித்து இருப்பார்கள்


சரி இனி இவர்களின் தொல்லை பற்றி ஒரு அறிஜர் பென்பிடியானந்தா !! அவர்களின் கருத்து

பஸ்ல ஏறினா தம்பி: சீட் இருந்தாலும் இருந்தாலும் இவனுக இருக்க மாட்டானுகள் !!அப்படியே வீர பரம்பரையிலே இருந்து வந்தவன் போல கம்பிய பிடிச்சிட்டே வாரானுக !!ஜட்டி கொம்பனி க்கும் இவனுக்கும் ஏதும் அக்ரிமெண்ட் இருக்கும் போல தம்பி ,விளம்பர மொடலா ஜட்டி கொம்பனிக்கு  இருப்பன் போல  .ஆனாலும் தம்பி ஜட்டிக்கு விளம்பரம் பண்ணுறவன் அதிகமா பொண்ணுக  இருக்கிற பஸ் பார்த்து எதுக்கு ஏறுவாங்கன்னு தெரியல

நல்ல பிரண்ட் ஜட்டி போட்டிருந்தாலும் பரவால தம்பி ;கொழும்பு பெற்றாவுல  நூறுவாக்கு மூனு  ரக பெர்மனெண்ட் ல விக்கிற ஜட்டியெல்லாம் போட்டுட்டு ஸ்டைல் எனும் பேர்ல கன்றாவியா இருக்கு தம்பி .முந்தியொரு நாள் தம்பி இதே பஸ்ல ஏறின ஒருத்தன் இலாஸ்டிக் வைச்ச ஜட்டியெல்லாம் போட்டுட்டு வந்து கைய உயர்த்திடு பஸ்ல நிக்கிறான் தம்பி .இன்னுமொருநாள் ஒருத்தன் "பிங்க் " கலர்ல ஜட்டி போட்டிருந்தான் தம்பி ,அவசரத்தில பக்கத்து வீட்டு உடுப்பு கொடியில காய்ஞ்ச ஆண்டிகளோட  உள்ளாடைய எடுத்து போட்டுட்டு வந்திருப்பன் போல பரதேசி .

காலில் போடுற "சூ" வுக்கு கீழே  ஜீன்ஸ் போடுங்க அப்பிடின்னு சொன்னால் தம்பி   சூ### (சென்சார் ல கட்  பண்ணியாச்சு )க்கு கிழே போடுறானுக தம்பி ,அன்னிக்கு ஒருத்தன் வேட்டி  கட்டி இப்படி பட்டி  தெரிய போட்டிருக்கிறான்.

இவர்களுக்கு கொடுக்க கூடிய ஆலோசனைகள் பற்றி

ஜட்டியே  போடாமல் வெறுமென ஜீன்ஸ் மட்டும் போடலாம் (அமெரிக்க காரன் ஜீன்ஸ் போட்டால் ஜட்டி போடா மாட்டானாம் )ஆனால்  ஜட்டி  போடாமல்  ஜிப் போடும் பொது  கவனமா இருக்கோணும் .என் நண்பன் ஒருத்தனுக்கு ஜிப் போடும் பொது ஏற்பட்ட "அந்த துன்பியல் சம்பவம் "    காரணமாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
வெட்ட வேண்டி ஏற்பட்டது  (ஜிப் பை )

நல்ல சனல் ,பெரிய நைலான் கயிறு ,ஏன்  அடம்பன் கொடி கூட நல்ல பொருள் இவற்றில் ஒன்றை இடுப்பை சுற்றி கட்டி கொண்டு வர வைக்கலாம்


ரொம்ப லென்த் ஆக போவதால் அடுத்த பதிவில் ஆராய்ச்சி தொடரும்Friday, June 20, 2014

ஆல மரமும் ஆயிரம் பேயும்

சூனியக்கார பென்னொருத்தி  தலைமுடியை விரித்துகொண்டிருப்பது போலவே தனது ஆயிர கணக்கான விழுதுகளையும் கீழே தள்ளி விட்டுகொண்டு எந்த பயமும் இல்லாமல் தன்னம் தனியாளாய் நின்றுகொண்டிருந்தது  அந்த ஆலமரம்!  தனது அப்பப்பா காலத்திலிருந்து
அந்த ஆலமரம்  இருப்பதாய்  சொல்லிய எனது தாத்தா,அந்த மரம் பற்றிய பல சுவாரசிய கதைகளையும் சேர்த்து சொல்லியிருந்தார். அதில் எப்போதுமே பேய் கதைகள் உள்ளடங்கியிருக்கும் அதிலும் அப்படியான கதைகளையே நானும் விடுத்து விடுத்து கேட்பேன் !
பள்ளிக்கூட காலத்தில் பூதம் எந்தளவு பெரியது?  எப்படி இருக்கும் என நான் கேட்ட குதர்க்கமான கேள்விக்கு சோடாப்புட்டி கண்னாடியனிந்த  தமிழ் வாத்தியார் , இந்த ஆலமரத்து அளவு இருக்கும் என சொன்னதிலிருந்து அந்த மரத்தின் மர்மங்களை துலாவி அறிய அவா உண்டாகியது எனலாம் . மற்றைய ஆலமரத்து விழுதுகளில் எல்லாம் இளசுகள் ஊஞ்சல் ஆடுவதும் அதன் அடியிலே பெருசுகள் கூடி அரட்டைஅடிப்பதுமாய் இருக்கும் அந்த நடைமுறை இந்தமரத்தடியில் இல்லாது போனதும் ஏதோ மர்மம் அங்கு குடியேறி இருப்பதை இலகுவாய் உணர்த்தியிருந்தது . இந்த மரத்தடியிலிருந்து நான்கு நடை நேராக நடந்தாலே சவக்காலை வந்துவிடும். அதனாலோ என்னவோ பேய் பிசாசு என அந்த மரத்தை சுத்தி  "காஞ்சனா "பாணியிலான  ஆயிரக்கணக்கான சினிமா எடுக்க கூடியவளவு கதைகள் உலாவந்தன!

சாயங்கால நேரத்தில் அந்த மரத்து பக்கமாய் சைக்கிளில் தனியே போய் திரும்பி வருவதென்பது"பெர்முடா" முக்கோண பகுதியில் விமானம் பறந்து
திரும்பி வந்த அளவுக்கு சாத்தியமில்லாத ஒரு செய்கையாய் இருந்தது.சைக்கிளில் போகும் போது வெள்ளுடை அணிந்த பெண் நிறுத்தியதாகவும் தான் நிறுத்தாமல் கந்தசஸ்டி கவசத்தை உரக்க படித்து கொண்டே ஓடிவந்து விட்டதாய் ஒருவன் திடிரென புரளி சொல்லுவான் ,இன்னுமொருத்தன் சைக்கிளில் பின்னே யாரோ உட்காந்து கொண்டுவருவது போல தோனியதாகவும் கதை பேசுவான் .யாருக்கு அப்பிடி நடந்ததாய் கேள்வியுற்றால் அவர் வீட்டுக்கு போய் குத்துகால் இட்டு கதைபேசிவிட்டு வருவேன் .

ஒருநாள் அந்த மரத்தில் அப்படியென்ன இருக்கிறதென அறிந்துவிடும் அவாவில் தாத்தாவை நச்சரித்து ஒருவழியாய் சாயங்கால வேளையில் அப்பாவுக்கு தெரியாமல் அதிலும் குறிப்பாக அம்மாவுக்கு அறவே தெரியாமல் அழைத்து போவதாய் வாக்குறுதி தந்திருந்தார் !
அந்தநாளும் வந்தது ,தாத்தாவோ மந்திரம் மாந்திரீகம் என கொஞ்சம் தெரிந்து வைத்திருந்ததும் எனக்கு வசதியாய்பட்டது .வீட்டருகில் இருந்த கோவிலுக்கு முதலில் கூட்டிச்சென்று என் உடம்பெங்கிலும் விபூதி பூசி ஏதோ மந்திரமெல்லாம் முனுமுனுத்தார் .சரி வா !நான் சொல்லுவது போல கேட்கவேனும் அங்கே போய் அதை தட்டுவது இதை தொடுவதெல்லாம் கூடாதென ஆயிரத்தெட்டு கட்டளைகளுடன்பயணம்ஆரம்பித்தது.தாத்தாவோடு சேர்த்து துணைக்கு பயம் வேறு ஒட்டிகொண்டது என்னுடன் ! அப்படியென்ன இருந்துவிடபோகிறது எனும் அசட்டு தைரியம் வேறு ,இருந்தாலும் மரத்தை நெருக்கி கொண்டிருக்கும் போது காலையில் டிவியில் பார்த்த சந்திரமுகி படத்திலே ரஜனியோடு போய் சிக்கிகொண்ட வடிவேல் ஜோக் எல்லாம் நினைவுக்கு வந்தது !

தேய்பிறைக்காலமாம் அது! இதையும் தாத்தாதான் சொல்லியிருந்தார்! இருளை வானம் கொஞ்சம் கொஞ்சமாய் குத்தகைக்கு எடுத்துகொண்டிருந்தது !மரத்தை நெருங்கிவிட்ட அறிகுறி வானத்தில் வட்டமடித்து கொண்டிருந்த வெளவால் உள்ளிட்ட இராப்பறைவகள் மூலமாய் தெரிந்தது ! 
தாத்தா கொஞ்சம் நில் !!என கையில் போத்தல் ஒன்றில் வைத்திருந்த தண்ணீரை கொஞ்சமாய் கையில் எடுத்து ஏதோ முணுமுனுத்தபடி எனக்கு வீசியடித்தார் கூடவே அவரும் தலையில் தெளித்துகொண்டு  ஒரு சுற்று சுற்றி நான்கு திசையிலும் எச்சில் துப்பினார்! ஏன் தாத்தா இப்பிடி என கேட்க ,இதெல்லாம் காவல் முறைமை உனக்கு புரியாது பேசாமல் வா என கடிந்து கொண்டார் .

அந்த ஆலமரத்து விழுதை பற்றி ஊஞ்சல் ஆட வேண்டும் !அப்படி ஆடியதாய் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் எல்லோரிடமும் பெரியசத்தமிட்டு கத்தி சொல்லவேண்டும் இதுதான் இப்போதைக்கு  என் உட்சபட்ச ஆசையாய் இருந்தது.

மரத்துக்கு அருகிலே போய் சேர்ந்தாயிற்று!,தாத்தாவின் கையிலே இருந்த "டோர்ச்" லைட்டை பிடுங்கி மரம் முழுதும் அடித்து பார்த்தேன் ,நல்ல பெரிய விருந்து உண்ட அரக்கன் ஒருத்தன் தலையே விரித்து அமைதியாய் தூங்குவதுபோலே இருந்தது! அந்தமரத்தில் காய்த்து கிடக்கும் சிவப்புநிற ஆலம்பழங்கள்   அந்த தலைமுடியில் ஒழிந்துகிடக்கும் பேன் போலவும் இருக்க அதை கொத்திதின்னும் ஆசையில் வெவ்வால்கள் தலைகீழாய் தொங்கிகொண்டிருந்தன.

அப்போதுதான் தம்பி தம்பி !! என கொஞ்சம் கரகரப்பான குரல் ,நிட்சயமாய் அது எனது தாத்தாவின் குரலே இல்லை டப்பென்று  வியர்த்துபோனது !டோர்ச்லைட்டை எடுத்து முகத்துக்கு  அடிக்க நினைத்த போது ,
தம்பி தம்பி என்ன என்ன பிரச்சனை ?? என எனது உதவியாளராய் இருக்கும் அந்த பெரியவர் எனது தோளை உலுக்கி எழுப்பிய போதுதான் புரிந்தது இவ்வளவு நேரமும் நினைவுகளோடேநீச்சலிடித்திருந்தேன்.அந்த ஆலமரத்தின் சில்லெனும் குளிர்காற்றிலேதான் நான் தூங்கிபோயிருந்தேன் என உங்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும்.

சேர் அப்பிடின்னா வேலையை ஆரம்பிக்கவோ?என சிங்களத்தில் வினவியிருந்தான் அவன் கொஞ்சம் பொறு என சொல்லி மேலிடத்துக்கு ஒரு மின்னஞ்சலை டைப் அடித்து கொண்டிருந்தேன் !!

 "மிகவும் பழமையான மரமொன்று வீதியின் இடதுபக்கம் இருப்பதனால் அதனை பாதுகாக்கும் நோக்குடன் வலதுபக்கமாய் கொஞ்சம் சேர்த்து வீதியினை விஸ்தரித்து 
வேலையினை மேற்கொள்ளவேண்டும் எனவும் அதற்கேற்ற நடவடிக்கைககளை எடுக்கவும் "என்பதே அந்த மின்ஞஞ்சலின் சுருக்கமாய் இருந்தது.
புதிதாய் மாற்றம் பெற்று சொந்த ஊருக்கு வேலை செய்ய வந்து ஒரு நல்ல வேலையை செய்த திருப்தியோடு வண்டியை விட்டு கீழிறங்கினேன்! இப்போதெல்லாம் இந்தமரத்தில் பேய்களும் இல்லை பிசாசுகளும் இல்லை அப்பிடி இருந்து அவை தங்களை காட்டிகொள்வதுமில்லை போலும்.

Thursday, June 19, 2014

விடலை பருவம்

வெட்கமறியா விடலை பருவத்தில்
வெயிலை அள்ளி பருகியிருந்தோம் 
வெந்தனலாய்  வீதிதகிக்கும்  வேளைகளிலே
வெற்றுகாலில்  நடைபயின்றிருப்போம்

மழையாகி வானமழும்
மாலைநேரங்களில்  
மகிழ்வோடு நனைத்ததில்
மறந்தே போனது கவலைகள்


பனங்காய் சில்லுவண்டி,அந்த கால 
பணக்காரதனமான கார் எங்களுக்கு,
கிட்டிபுள்ளுக்கு குழி தோண்டியதில் 
கினற்றுமடுவாகியது வீதியெல்லாம்

நாவல்பழம் உண்டு மருதானியிட்டு
நாக்குகளை அழகுபடுத்துவோம்,
நாக்குநுனியால் எட்டிஎட்டி 
எச்சில் ஊற்றி மீசை வளர்த்திருந்தோம்

காலம் மாறியது, காகிதபணத்தின்
காலடியில் அடிபணிந்தோம்,
கவலைகளோடு  கைகோர்த்தோம்
கண்ணீரில் மூழ்குகின்றோம் !!
Tuesday, June 3, 2014

வேகம்

கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர்க்கும் அதிகமான தூரம் அந்த வண்டியின் பின்னாலே வந்துகொண்டிருக்கிறேன்!எப்படியாச்சும் அதனை முந்திவிட வேண்டும்,அந்த வண்டிசாரதிக்கு நன்றாக பச்சை பச்சையாய் மிக கொடுமையாய் திட்டவேண்டும் அதுதான் இப்போதைக்கு இலட்சியம் நோக்கம் எல்லாமே.வீட்டுக்கு அவசரமாய் போவது,வெளிநாடு போகபோகும் நண்பனை வழியனுப்புதல் எல்லாம் இரண்டாம் பட்சமாகி போனது

கண்டிப்பாய் அந்த காரை  உற்பத்தி செய்த கொம்பனி எல்லாம் இழுத்து மூடிவிட்டிருப்பார்கள். அவ்வளவு பழைய காலத்து வண்டி ,வெள்ளை கலர்தான் அதன் உற்பத்திக்கலர் என்பதை கொஞ்சம் கவனமாக பார்த்தால் மாத்திரமே கண்டறியலாம் மற்றபடி நன்றாய் வெற்றிலை,பாக்கு போட்டு குதப்பிய கிழவிகளின் கறைபடிந்த பல்லு போல நிறம் மாறி போயிருந்தது 

ஒரு காலத்தில் இந்த கார் நல்ல அம்சமான பெண் போலே இருந்திருக்க வேண்டும் ,காமுகர்கள் எல்லாம் கண்டபடி இடித்துவிட்டுபோன தடங்கள் ஆங்காங்கே பளிச்சென தென்பட்டது .வண்டியின் இலக்கம் அது எத்தனை சகாப்தம் பழையது என்பதை பரிசம் போட்டுகாட்டி நின்றது. 14ஶ்ரீ 23*** என இலக்கதகடு ஆங்காங்கே உடைந்து வயதான கிழவன்  போல் பொக்கைபல் காட்டி   சிரித்து கொண்டிருந்தது .

வழக்கமாய் இவ்வாறன வாகனங்களை  எல்லாம் இலகுவாய் முந்தி கொண்டு போய்விடுவேன் .மணிக்கு சாதரணமாய் 60முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனக்கு ஆனால் இந்த காரின் பின்னே 40 கிலோமீடர் வேகத்தில் போவது என்பதை  ஏற்கமுடியாதிருந்தது  .போதாததுக்கு இன்று வெள்ளைக்கிழமை வேறு அலுவலம் முடிந்து தத்தம் சொந்த ஊருக்கு போய்கொண்டிருப்பர்கள் ,ஏனையவர்கள் என  மிகவும் மோசமான வாகன  நெரிசல் முந்த முடியாமல் இருப்பது பெரியதாய் தோன்றவில்லை  ,அந்த பழைய டப்பா காரின் கருப்புபுகைதான் எப்படியாச்சும் அதனை முந்திவிட என் மனதை தூண்டிவிட்ட முதல் காரணி.

ஒருதடவை முந்தமுற்பட்டு எதிரே வந்த பஸ்வண்டிகாரன் ஹெட்லைட்டை பலமுறை விட்டுவிட்டு அடித்து காட்டி அபாயசங்கு ஊதியதில் பயந்து அந்த முயற்சியினை கைவிட்டிருந்தேன்!

தொடர்ச்சியாய் வந்தவளைவுகள் ,வாகனங்கள் காரணமாய்  முந்தி போக முடியாது மிகவும்  அல்லோலகல்லோக பட்டுபோயிருந்தேன் இடையிடையே அந்த வண்டிக்காரனோ  வானத்துக்கு கருப்பு வண்ணம் பூசுவதற்கு குறைந்த விலையில் விலைமனுகோரிய   ஒப்பந்தகாரன்   போல புகையினை கக்கிகொண்டிருந்தான் 

இனியும் பொறுமை  இல்லை எப்படியாவது முந்திவிடுவது எனும் அந்த முட்டாள் தனமான முடிவை எடுத்திருந்த தருணம் அது  ,கொஞ்சம் வாகன நெரிசல் இல்லாத நேரான வீதி(அல்லது அது எனக்கு நேரான வீதியாய் தோன்றி இருக்க வேண்டும் ) பல தடவை அநேக விபத்துகளை நேரே கண்டிருந்தாலும் அது எல்லாம் மனசுக்கு முன்னால் வரவே இல்லை ,அந்த வண்டியை முந்துவது அது  மட்டும்தான் முக்கியமாய் பட்டது .

ஒரு சிறு வளைவு  எதிரில் எந்த ஒரு வாகனமும் வருவதாய் தெரியவில்லை ,இதுதான் சர்ந்தர்ப்பம் என எண்ணி \வண்டியின் அக்க்சிலேட்டரை முறுக்கி  காரின் முக்கால் பாகத்துக்கு மேல முந்தி அந்த சாரதியை    ஒரு கேவலபார்வை பார்க்க திரும்பிய கணத்தில் தான் அந்த சம்பவம் நிகழ்தது ,திடிரென குறுக்கே எமனாகி பாய்ந்தது  அந்த கருப்பு நாய் . அடுத்த பக்கம் வண்டியை திருப்ப முயன்றபோது காற்றை  கிழித்தபடி பறந்து ஒரு கார் வந்துகொண்டிருந்தது ,நன்றாக கண்ணுக்கு தெரிந்து போனது இல்லாவிடின் இப்படி கதையாய் இதை எழுதிஇருக்க கூட  முடியாது ,"பிரேக்" பிடிப்பது  என்பது எனக்குநானே சாவு மணி அடிப்பதாய் போய்விடும் என மூளை விரைவாய் கணித்திருந்தது .   அடுத்ததாய் என்ன செய்வது என ஜோசிக்கும் தருவாயிலே என் வண்டியின் முன்சில்லு அந்த கருப்பு நாயின் கழுத்துக்கு கிழே  ஏறிகொண்டிருந்தது ,உடனே நாய் எழுதுவிட்டால் என் கதை சரி என நினைக்கும் போதே ,எது நடக்ககூடாதென இருந்தேனோ அது நடந்துவிட்டிருந்தது நாய்   மீண்டும் எழுந்ததும் பின் சில்லு அதன் மேல ஏறாது  சறுகிபோக வண்டி ஆட்டம் கண்டது அங்கும்   இங்குமாய்  ஆடி கொண்டிருக்கும் போதே அந்த கார்சாரதி வண்டியை நிறுத்தியிருந்தான் .

ஒரு மயிரிடைவெளியில் அந்த அனர்தம்  தவிர்க்கபட்டு ஒருவழியாய் வீதி ஓரத்தில் எனது வண்டியை நிறுத்திவிட்டு பார்த்தேன் ,அந்த வண்டியில் "அந்திமகால சேவை , அமரர் ஊர்தி " என பெயர்பலகை முன்னே இடப்ட்டிருந்தது .

Friday, May 30, 2014

மைனா கூட்டமும் வீடும்

இரண்டு மூன்று நாட்களாய் மீண்டும்  அந்த மைனா கூட்டத்தினை எங்கள் வீட்டு வாசலில்அவதானிக்க முடிந்தது,அதில் நேற்றுகூட ஒன்று என் மோட்டர்வண்டியில் ஏறி இருந்து தன் ஜோடியோடு ஏதோ காதல் கதை பேசிக்கொண்டிருந்தது ..

சுமாராக ஒராண்டுக்கு முதலில் எங்கள் வீட்டின் வாசலிலே ஒவ்வொரு நாளும் கூடி கும்மாளடித்திருந்த மைனா கூட்டமாகத்தான் அது இருக்க  வேண்டும்.மொத்தமாய் நான்கிலிருந்து ஏழு எனும் அளவில் மைனாக்கள் எப்படியும் ஒவ்வொரு நாளும் வீட்டுவாசலுக்கு வந்துவிடும்.

அந்த மொத்த மைனா கூட்டமும் அவசரகாலத்தில் வேற்றுநாட்டு விமானதளத்தில் இறங்கும் விமானங்கள் போல ஒன்றன்பின் ஒன்றாக எங்கள் வீட்டு வாசலில் இறங்கும் .எங்கிருந்து எப்படி வருகின்றன என தெரிந்திருக்காது .ஆனால் அவை இறங்கும் அந்த நேரம் எப்படி அம்மாவுக்கு தெரியும் என எனக்கு தெரியாது .சரியாய் தனது அப்பாவும் அம்மாவும் அலுவலகத்து  போனதும் தனித்து போகும் பேத்தியை  தூக்கி மடியில் வைத்து கொஞ்சும் நேரத்தில் அப்படி அந்த மைனாக்கள் வந்து இறங்க தொடங்கும் .ஒவ்வொருநாளும் ஏதாச்சும் ஒரு பரிசுப்பொருள் அவைகளுக்காய்  காத்திருக்கும் பருப்பு,நேற்று மீந்து போன பயற்றங்காய் என ஒவ்வொருநாளும் அவற்றுக்காய் வேறுபட்ட மெனு வைத்திருப்பாள் அம்மா!

சமையலுக்காய் ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது கையில் வைத்திருக்கும் மரக்கறி கழிவுகளை  கொட்டிவிட்டு அவைகள் உண்பதை பேத்திக்கு காட்டி கொஞ்சிக்கொண்டிருப்பாள்! மைனாக்கள் என்  அம்மாவை பார்க்க ஒவ்வொருநாளும் வந்து போகின்றதோ இல்லை அவைகளை பார்க்கதான் அம்மாவும் பேத்தியும் உட்காந்திருக்கிறார்களோ?? எனும் சந்தேகம் எனக்கு பலதடவை வந்திருகிறது 

மைனாக்களுடன் அம்மா பேசும்விதமும் அவற்றோடு ஒட்டிஉறவாடும்  விதமும் பார்ப்பதற்கே அலாதியானவை.மைனாக்களுடன் இன்னுமொருவகை குருவிகளும் (அதற்கு பெயர் கூட பீக்கழுவான் என அம்மாதான் சொல்லிதந்திருந்தாள் )வந்தாலும் அவை தள்ளியே இருந்து வேடிக்கை மட்டும் பார்க்கும். மைனாக்கள் பேசும் மொழியை எப்படி அம்மா அறிந்திருப்பாள் எனும் வியப்பு இப்போதும் தொக்கி நிற்கின்றது மனதில் ,சூசூசூ ,கூக்கூ என சப்தங்களுடன் அவைகளுடன் பேசிக்கொண்டிருப்பாள் அம்மா.அவள் உட்காந்து கொண்டிருக்கும் அந்த சாய்மான கதிரையின் கீழே பயமில்லாமல் வந்து போக பழகியிருந்தன அவை . மைனாக்கள்  வர மறந்த நேரங்களில் அல்லது பிந்திபோன நேரங்களில் "மைனா இங்கே வா வா" என ஒரு பாடல்  பேத்தியுடன் கோரஸாக ஒலிக்கும் .அந்த பாடல் கேட்டு சற்றே நேரத்தில் விர்விர் என்று வாசலில் இறங்கி சிரிக்கும் மைனாக்கள் !  எங்கிருந்து இவை வருகின்றன என தேடியே கொஞ்சம்  சளைத்திருப்பேன் ,அம்மாதான் சொல்லியிருந்தாள் அந்த விஸ்ணு கோவில் கோபுரத்தில் இருந்து தான் இவைகள் வந்திருக்கவேண்டும் என்று. ரெண்டு தரப்பும் பேசிகொள்ளும் போது சொல்லி கொடுத்திருக்கும் போல.

எனக்கு தெரிந்து சின்னதாய் மிகவும் காரமான "பீஸ்வன் கொச்சிக்காய்" அல்லது சீரக மிளகாய் கன்று என சொல்லப்படும் ஒன்றை ,யாழ்பாணம் போன யாரிடமோ சொல்லி வாங்கி பழைய வாகன டயரில் மண்ணை நிரப்பி( அதை நிரப்ப சொல்லி என்னை ஆயிரம் தடவை கேட்டதும் நானோ அப்புறமா செய்யலாம் என சொல்வதும் ஒருநாள் அவாவ மண்ணை அள்ளி கொட்டி )அந்த மிளகாய் கன்றை நட்டு சுற்றி கம்பி வலையால் சின்னதான ஒரு சுற்றுவேலி அமைத்திருந்தாள் .அது பூத்து காய்க்கதொடங்கிய போதெல்லாம் அதை அருகில் நின்று எண்ணுவதும் ரசிப்பதும் என சுவாரசியமான ஒரு பந்தத்தினை அதனோடு உண்டாக்கியிருந்தாள்.ஒரு நாள் எல்லா பூ,பிஞ்சு காய்களை அந்த மைனா கூட்டம் துவம்சம் செய்திருந்தது .அடுத்த நாள் வந்திறங்கிய அவற்றை துரத்தவும் முடியாமல் ஆசையாய் நாட்டி வளர்த்த மிளகாய் செடியை அவற்றுக்கே தாரைவார்த்து கொடுத்திருந்தாள்!!அப்படியாய் அவற்றோடு ஒரு பாசம் வைத்திருந்த ஒரு சீமாட்டி


ஆசையாய் வளர்த்த மிளகாய் செடியின் பூ பிஞ்சுகள் என பாராது துவம்சம் செய்த குற்ற உணர்ச்சியினாலோ என்னமோ, வராமலே போன அந்த மைனா கூட்டம்  இப்போது வந்திருக்கிறது .பாவம்  அவைகள் உண்டு மகிழ அந்த மிளகாய் செடியும் இல்லை ,அதை விட    அவற்றுடன் கதை பேச அம்மாவும் இப்போது இல்லை   அவற்றுடன் பேச , அதன் மொழி தெரியாத நான் எப்படி சொல்லுவது அம்மா திடிரென இறந்துபோன கதையை !! 

Wednesday, May 28, 2014

ஐ லவ் யு டி பாகம் 1

ஆயிரம் கோடி ஐ லவ் யு க்களுடன் உனக்கான என் முதல் காதல் கடிதம் இது


எப்போது உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் என்று   உனக்கும் ஏன்  எனக்கும் தெரியா ஒரு காதல் நம்மதுடி !!

அன்னைக்கொரு நாள்  நீ அலுவலகம் போகும் அந்த  பேருந்துக்காக காத்துநிற்கும் போது  , "பைக்"கில்  நான் உன்னையே பார்த்து கொண்டு போனதும் நீயோ வேற்று கிரகவாசியை பார்க்கும் கிராமத்து சிறுமி போல் வெறித்து பார்த்து விட்டு அலட்சியமாய் திரும்பியிருந்தாய் அன்னிக்கே முடிவெடுத்திருந்தேன்  என் "ரேபேன் " கிளாஸ முதல்ல கழட்டி வீசனுமுன்னு
ஆனாலும் உனக்கே  தெரியாத ஒன்னு அன்னைக்கு "பைக் க திருப்பி திரும்பவும்  உங்கிட்ட வந்து பேசிட்டு போயிருந்தேன் .அப்போதே உங்களை போலவே ஒரு பையன் போயிருந்தான்ன்னு அந்த கண்ணாடி போட்டதால  மதிக்கல நான் ன்னு சொல்லி நீ எனக்கு கொடுத்த அந்த "பல்ப் " கே ஆயிரம் ஐ லவ் யு டி .


உங்க அப்பா காதலுக்கு சம்மதிக்காட்டி ஓடிப்போவோமாடி??? என நக்கலாய் நான் கேட்ட கேள்விக்கு ,இல்லப்பா  என் கால்ல ஆபரேசன் பண்ணி இருக்கு என்னை  ஓடக்கூடாது ன்னு டொக்டர் சொல்லியிருகாருன்னு சீரியசாவே பதில் சொன்ன அப்பாவி  பொண்ணுடி  நீ ,அதுக்காகவே ஆயிரம் ஐ லவ் யு டி


பேச்சு வாக்கில் உனக்கு நீலகலர் பிடிக்கும் என தெரிந்து கொண்ட நான் ,நீ ஒரு நாள் என்கிட்ட உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என கேட்டதும் நீலந்தான் என எதேட்சையாய் சொன்னதும் உன் முகத்தில் புரித்து போன அந்த சந்தோசத்துக்காகவே அன்றிலிருந்து உன்னோடு சேர்த்து உன் நீல கலரையும் லவ் பண்ண ஆரம்பிச்சிருந்தேனடி !அதுக்காகவும் ஆயிரம் ஐ லவ் யு டி


நீ வரைந்த ஓவியங்களை எனக்கு தொலைபேசியில் எனக்கு மொழிபெயர்க்கும் தருணங்களில் "ஹலோ என்ன தூங்கிட்டிங்களா " என இடை இடையிலே கேட்டு ஓவியம் சார்ந்த என் அறிவை புரிந்து வைத்திருந்ததுக்கே இன்னும் ஆயிரம் ஐ லவ் யு டி

என்னை ஒரு நாள் பாடசொல்லி நீ  நச்சரித்ததும்,நானும்  ரெண்டு வரி பாடி முடிக்காமலே போதும்பா போதும் உங்க பாட்டு அப்படியே புல்லரிக்க வச்சுட்டது ன்னு நாசுக்காய் நாகரிகமாய் நக்கல் பண்ணியதுக்குமே இன்னமும் ஆயிரம் ஐ லவ் யு  டி சொல்லலாமடி

கலியாணம் கட்டியதும் என்னடி பண்ணுவாங்க என நான் கேட்டதும் ,எனகென்ன தெரியும் அறைக்குள்ள [போன அப்புறமா "லைட் " ஒfப் பண்ணிடுவாங்களே ன்னு மிகவும் சீரியசாவே பதில் சொன்ன அப்புராணி பொண்ணுடி நீ .. நான் நினைச்சு நினைச்சு சிரிக்கும் அந்த "வேலைக்காரியும் கழுதையும்"  ஏ ஜோக்கை எப்படி புரிய வைப்பதுடி ன்னு குழம்ப வைத்துக்கே
இன்னமும் ஆயிரம் ஐ லவ் யு டி


பேசும் தருணங்களில் எல்லாம் என்னை எந்த அழவுக்கு லவ் பண்ணுறிங்க ன்னு கேட்பதும் ஆயிரம் மொக்கையான பதிலை சொல்லியும் இன்னமும் இன்னமும் அடங்காமல்  கேட்கும் உன் காதலுக்கே மொத்தமாவே  ஐ லவ் யு டிஅடுத்த கடிதத்தில் சந்திப்போம் !!

(சொக்லேட் பேஜ்  சைந்தவி எபெட்  கடிதம் இது )


தாமதம்


அடிக்கடி கையை திருப்பி  திருப்பி பார்த்ததில் கோபமோ,என்னவோ தெரியவில்லை இன்னமும் கொஞ்சம் வேகமாகவே கடிகாரம் சுற்றிக்கொண்டிருந்தது .கைகாட்டி நிற்க சொல்லியும் ஊர்ந்து வந்த  நான்காவது பஸ்சும் நிறுத்தாமலே போய் விட்டான் , "பொண்டிங்" தாடியை சொறிந்து கொண்டே நேரத்தை சரிபார்க்கையில் மணிக்கூடு  இன்னமும் பத்து நிமிடத்தை தின்று ஏப்பம் விட்டிருந்தது அவசர அவசரமாய் மனைவி செய்து தந்ததில்  ஓரத்தில்கருகி போன ஒற்றை தோசையினை அள்ளி புகுத்தி கொண்டு அரக்க பரக்க பஸ் ஏற ஓடிவந்திருந்தான்."இன்னுமொன்னு சாப்பிட்டுட்டு போங்க ஒன்னே ஒன்னு  "என்ற  மனைவின் சப்தம் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டு வயிற்றுக்குள் பசியோடு ஒரு கச்சேரி நடத்திகொண்டிருந்தது .

சீய்!! பாழாய் போன "பைக்" இப்படி துரோகம் செய்துவிட்டதே என கோபம் ஒருபக்கம் ,விரைவாய் போய் சேர்ந்துவிட வேண்டும் எனும் தவிப்பு ஒரு பக்கம் .நேற்று பின்னேரம்  பைக்கில் போன போதுதான் டயரில் அந்த சின்ன ஆனி ஏறியிருக்க வேண்டும் ,இதெல்லாம் வில்லனாய் வந்து சேருமென யார் கண்டார் .

மொத்தமாய் பஸ் ஏற வந்து முப்பது நிமிடத்துக்கு மேலாகி விட்டது இன்னமும் பஸ் ஏறியபாடில்லை . வழமையாகவே அலுவலகத்துக்கு தாமதமாகி வருவோர் பட்டியலில் முதலிடத்தில் குத்துக்கால் போட்டு  இவன் பெயர் உட்காந்திருக்கும் .இன்றும் தாமதத்துக்காய் தீம்தக்கடி தக்கடி என குதிக்க இருக்கும்  அந்த அரைகுறை மஜேனரை எப்படியெல்லாம் சமாளிப்பதென பயந்து முதலிரவு அறைகுள் போக காத்துநிற்கும் புதுப்பொண்டாட்டி போல ஆயிரம் தடவை ஜோசித்துகொண்டான்.

நேற்றே அலுவலகம் முடிந்து போகும் போதே ,நாளைக்கு எல்லோரும் ஒன்பது மணிக்கு  முன்பே ஆஜராகி விடவேணும் எனும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்தது   சொல்லிமுடித்த பின்னர் அவனை பார்த்து ஒருவித சிரிப்பும் சிரித்திருந்தார் ,அந்த சிரிப்பின் அர்த்தம் புரிந்ததில் தான் இத்துணை அவசரமாய் இன்று எண்ணெயில் போட்ட அப்பளமாய் தத்தளித்து கொண்டிந்தான் .

பைக் பஞ்சர் ,மகளுக்கு காய்ச்சல் ,அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என சொல்லிய பொய்  எல்லாவற்றையும் மனேஜரே மனபாடம் செய்திருப்பார் என்ன சொல்லலாம் எப்பிடி பொய் சொல்லலாம் என ஆயிரம் ஒத்திகைகளை மாறி மாறி நிகழ்த்தி கொண்டிருந்தது மனசு ,ஆனால் கண்களோ வரவிருக்கும் பஸ் வண்டியை நோக்கியே இருந்தது .

ஆமையை விட சற்றே வேகமாய் ஊர்ந்து போகும் வாகன நெருசலும் இன்னமும் எரிச்சலையே ஊட்டிக்கொண்டிருந்தது!!அப்போதுதான் கவனித்தான்  வரிசையில் போய் கொண்டிருந்த ஒரு உயர்ரக புத்தம் புது கார் வரிசையை விட்டு விலகி நிற்பதும் அதிலிருந்து  வெள்ளை நிற முழுநீள சேர்ட்டுடனாதும் , ரெண்டுக்கும் அதிகமான மோதிரங்களுடன் மினிங்கிகொண்டிருக்கும் விரல்களும் தன்னையே வா வா வா என அழைப்பது போல் இருக்க,சுற்றும் முற்றும் திரும்பி திரும்பி பார்த்துகொண்டு உறுதி செய்திருந்தான் தன்னை தான் அந்த பணக்காரதனமான கை அழைத்ததென்று .

போகலாமா வேண்டாமா என மனசு ஜோசிக்கும் போதே கால்கள் நடையை கட்டியிருந்தன காரை நோக்கி ,காரின் கறுத்த கண்ணாடியை கீழே இறக்கி "ம்ம்ம்ம் ஏறுங்க"" திடிரென பயந்தே போனான் ,இருக்காதா பின்னே யாருக்கு பயந்து அலுவலகம் போய் என்ன ஏது பேசுவதென ஒத்திகை பார்த்தவர் கண்முன்னே கூடவே அவர் வண்டியில் வேறு ஏறச்சொன்னால்,

இல்ல சேர் நீங்க போங்க நான் பஸ்ல வாரன் 
இல்ல பரவாயில்லை வாங்க டிராப் பண்ணிவிடுறேன் 

பலிகொடுக்கும் ஆடு கத்த வார்த்தை வராமல் தவிக்கும் நிலையில் அவன் இருந்தான் ,வண்டியினுள்ளே
ஏறியதும் வண்டியின் ஏசி குளிரையும் தாண்டி " குப்பென"  வியர்க்க தொடங்கியிருந்தது .இயல்பாகவே இருக்கும் அந்த பயந்த சுபாவம் இன்று முடி போட்டு கொண்டு முன்னே வந்து நின்றே காட்டி  கொடுத்து நிற்கின்றது 

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என ஜோசித்து கொண்டிருக்கும் போதே அவராகவே பேச ஆரம்பித்திருந்தார்!! 

"பைக் பஞ்சர் ஆகிட்டுதாமே?? உங்க வைfவ் சொன்னாங்க ,என் ரெண்டாவது மகள் படிக்கிற வகுப்பு கிளாஸ்டீச்சர் உங்க வைfவ் தான் ,ஸ்கூலுக்கு பிள்ளையை கொண்டு விடும் போது சந்திச்ச்சு பேசினப்போதான் அவங்க உங்க வைfவ் ந்னு தெரிஞ்சுச்சு "
பராவாயில்லை ,இனி போகும் போது என் கூடவே வந்துடுங்க !! மனேஜர் பேசிக்கொண்டே போனார்.


காலையில் மனைவி ஊட்டிவிட்ட தோசை தித்திப்பாய் உள்ளிறங்கி போய்கொண்டிருந்தது இப்போதுதான் அவனுக்கு Monday, May 26, 2014

தமிழச்சி !!!!


பாவம் இன்றும்
பசியை போர்த்திக் கொண்டே 
தூங்க போயிருப்பாள்.

வயசு பதினாறிலே 
வாழ்க்கைப்பட்டவள்
வறுமையின் கழுத்தில் 
தாலியை தொங்கவிட்டிருக்கிறாள்

போர்த்திருவிழாவில் தொலைந்திருந்தாள்
பொன்னான கணவணை 
பின்னாலே போன தலைச்சன் பிள்ளையும்
மண்னோடே போயிருந்தான் !

ஒற்றை கைக்குழந்தை 
பசிக்கான விடை தேடி அவளின்
வற்றிய முலைக்காம்பு நாடும்

பத்துபாத்திரம் தேய்த்து
பிழைக்க வழி இருக்குமெனின்
கந்தல் உடை வழியே காமத்தை
உள் நுழைப்பான் எஜமானன்.

அப்பம் சுட்டு வறுமையை 
எரிக்க முயன்றால்
அப்பத்துக்கு விலை இல்லை
அவளின் இளமைக்கே விலை 

தாசியாய் இருந்திருந்தால்
தாராள வாழ்வுண்டு
தன்மானம் உள்ள 
தமிழ் பெண்ணாகி போனதனால்
இன்னும் பசியை போர்த்தியே
உறங்குகிறாள்!!Sunday, May 25, 2014

அந்த குட்டி நாய்
கிரீச்ச்ச்ச்ச்ச் சத்தத்துடன் சேர்ந்தே கேட்டது "வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வவ்வ்வ்வ்வ்வ்வ்"எனும் சப்தமும் , அதுதான் அதே வாலில் கறுத்த புள்ளியுடன் விலாசம் மறந்துபோன விருந்தாளியாய் வீதியின் குறுக்கும் நெடுக்குமாய் ஓடி தனியே வாகனங்களுடன் கபடி ஆடிக்கொண்டிருந்த அதே அந்த "பிரவுன் கலர்"   அநாதையான நாய்க்குட்டியின் சப்தம் தான்

மின்னலை விட கொடிதாய் ஓடிக்கொண்டே இருக்கிறது அந்த சிவப்பு கலர் உயர்ரக கார்,குட்டிநாயை அடித்து விட்ட இறுமாப்புடன் கொஞ்சம் அதிகமாய் மீசையை முறுக்குவது போலே முறுக்கிகொண்டே பறந்து கொண்டிருந்தது அது.

நேற்று கூட காலைஉணவை இதே கடையில் உண்டு கொண்டிருக்கும் போது போட்ட ஒரு வடைத்துண்டுக்காய் அதன் அந்த கறுத்த புள்ளி வாலை இடம் வலமுமாய் குறுக்கு நெடுக்குமாய் ஆட்டி அதன் விசுவாசத்தை காட்டியதெல்லாம் நினைவுக்கு வந்து போகின்றது .

இதே போலே ஒரு வாலில் கறுத்த புள்ளியுடனான நாய் ஒன்றை போனவருடத்துக்கும் முதல் வருடமளவில் அம்மா ஆசையுடன் வளர்த்து  அம்மாவின் திடீர்மறைவுடன் அந்த நாயும் காணாமலே போயிருந்தது ,அடுத்த ஊர் கோவில் வளவில் இறந்து கிடந்ததாய் கூட யாரோ சொல்லியிருந்தார்கள் அந்த நாயின் உருவ அமைப்பில் ஒத்திருந்ததால் கூட  இந்த குட்டிநாயை எனக்கு பிடித்திருந்தது .ஒரு நாய்க்கூடு அடித்து விட்டு இதை கொண்டு போய் விடுவோம் என எண்ணியிருந்தேன் .

கொஞ்சம் வேகத்தை  கூட்டியே நடந்திருந்தாலும் நான் போய் சேரும் முன்பே நான்கைந்து பேர் கூடியிருந்தனர்
கொஞ்சம் விலக்கி தலையை உள்ளேவிடும்போதே  அதற்கு உயிர் கொஞ்சமாச்சும் மீதி இருக்கும் பட்சத்தில் வீட்டுக்கு கொண்டு போகலாம்  எண்ணியே எட்டி பார்த்தேன் 

 உள்ளே "சுச்ச்சு சுச்ச்சு சுச்சு " என கையில் அதை பிடித்து கொண்டே அதன் உடைந்(த்)து போன காலை வருடிகொண்டிருந்தான் அவன் ! திடீரென யார் இவன்? என அடையாளம் கான்பது கடினமாய் போயிருந்தாலும் சில வினாடிகளில் இலகுவாய் அவனை அடையாளம் கண்டுகொண்டிருந்தேன் .
பக்கத்து கோவில் சுவரோரத்திலே யார்?எங்கிருந்து வந்தான்? எப்படி சாப்பபிடுவான்?எப்படி எங்கே குளிப்பான் என யாருக்குமே விடை தெரியாத அநாதை பிச்சைகார கிழவனே அந்த குட்டி நாயை தூக்கி வருடிகொண்டிருந்தான்!

அவ்வளவு பெரிய அடியாய் தெரியவில்லை ,சின்னதாய் அதன் மெல்லிய பிஞ்சு காலின் ஓரத்தில் சிறு கீறு  ,அதுக்க்குத்தான்    இப்படி ஒப்பாரி வைத்து ஊரை கூட்டிகொண்டிருந்தது  .  குட்டிநாய் ஒப்பாரி வைத்ததாலும் அவன் கண்ணிலே நீர் கோர்த்து இருந்தது .அடிக்கடி அவனை பார்த்திருந்தாலும் ஒருநாளும் அவனின் தனிமை ,வறுமை எண்ணி அவன் அழுததோ ஆர்பாட்டம் செய்ததோ நினைவில்லை யார் எதை கொடுத்தாலும் உண்பான் அவ்வளவுதான் 
குட்டி நாயை அவனிடம் இருந்து பிரிக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்துக்கு போய்கொண்டிருந்தது .அவனின் அழுகை இன்னும் அதிகரித்து கொண்டு இருந்தது 

அந்த நாய்குட்டி யாரிடம் போகவேண்டுமோ அவனுடமே சேர்ந்திருக்கிரது என எண்ணி நானும் வீடு திரும்ப எத்தனித்தேன் .


Monday, May 12, 2014

நம்மளையும் மதிச்சு

தொழில்நுட்ப கல்லூரியில் இன்று இடைவேளை நேரத்திலே வகுப்பறை முன்னே மரத்தடி பெஞ்ச் ஒன்றில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டிருந்தேன் ( உண்மைய சொன்னால் காலையில் போட்ட மொக்கை போஸ்ட் க்கு இதனை பேரு வேலை வெட்டி இல்லாம லைக் பன்னிருக்கிறாகன்னு எண்ணிகொண்டிருந்தேன் )

சேர் !!

சத்தம் கேட்டதும் மொபைலில் புதைத்திருந்த முகத்தை கொஞ்சம் வெளியில் எடுத்து புருவத்தை ஏறிட்டேன் ,
தொழில் நுட்ப கல்லூரிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத மூன்று முகங்களுடன் அலுவலக உதவியாளரும் நின்றிருந்தார்

சேர் !! இவங்க கொஞ்சம் பேச வேண்டுமாம் உங்க கூட

பேஸ்புக்கில் நாமதான் பிரபல்யம் ஆச்சுதே !!அதுதான் ஏதும் பேட்டி கீட்டி எடுக்க வந்திருப்பாகளோ பார்த்தால் வெறும் கையை ஆட்டிக்கொண்டு வந்திருகிறார்கள் (((த்தூதூதூ ))

ம்ம்ம்ம் இருங்கோ !! என்ன விஷயம் ?

நாங்க மட்டகளப்பு சென் மைக்கல் ஹோலிஜ் ல படிக்கிறோம் ,அட நானும் அங்கேதான் படித்தேன் !!

என நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் "மக்ஸ்வெல் பேட்டிங் செய்யுறானு தெரியாம போலிங் செய்ய வந்த அஸ்வின் போல" சொல்லியிருந்தேன்

ஸ்கூல் ல ஒரு கண்காட்சி(எக்ஸிபிசன் ) செய்யுறம் சேர் !!,
அதுல எலக்ரோனிக் சம்பந்தமான ஒரு புத்தாக்கம் செய்ய ஐடியா இருக்கு ,அதுக்கு உங்க ஐடியா ,அட்வைஸ் தேவை

சொல்லுங்க!!! நல்ல விஷயம் அதுக்கு என்ன செய்யணும் ?? என கொஞ்சம் கூட கூச்சமோ வெட்கமோ இல்லாமல் கேட்டேன்

"வயர்லெஸ் ல எலெக்ட்டிசிட்டி ரான்ஸ்மிசன்" அப்பிடி இப்பிடி என அவர்கள் இநோவேசன் பற்றி பேசிகொண்டிருந்ததை காது மட்டும் கேட்டு கொண்டிருந்தது ,ஆனால் மனசோ இந்த வடிவேலு ஜோக்கை ரிவைண்ட் செய்து பார்த்து பார்த்து சிரித்து கொண்டிருந்தது Sunday, January 5, 2014

அவனே உலகஅழகன்

நீல நிறமாய் டி-சேர்ட் ,
நினைப்புகள் பலதரும் அவனுக்கு
கண்ணாடி முன்னே அவனே உலகஅழகன் . முடி கோதி ஊதிவிடும் அழகில்  ஆயிரம் 
அழகிகள் விழுந்து விடும் என நினைப்பு ,
பைக்கில் சன்கிளாஸ் அனிந்தால் 
சினிமா ஹிரோவுக்கு டூப் போட்ட நினைப்பு .

கொஞ்சமாய் எட்டி  பார்க்கும் தாடி 
உரம் போட்டு வளர்க்க முயலும் ஒரு பயிர் அது, 
 சலூன் கடை கத்தியின்  கூர்மை பரிசோதிக்கும் 
சோதனை கூடமாய் மாறிவிட்டிருக்கும் அவன் முகம் .

பயர் அண்ட் லவ்லியே துணையாகும்  அவனின் வெண்மைக்கு .
பெர்பியும் வாசம் ,அவன் வெளிநாடுநண்பனின் 
பெயரையும்  ஊரையும்  சொல்லி வீசும் .

ஊரில்  பெண்பெயரோடு  வரும் கடிதங்களின்
விலாசங்களை போஸ்ட் மனுக்கு  விளக்குவார் .
படிப்பு  இவரின் போன வருடத்து டயரி .


ஆயிரம் ஹீரோயிசம் இருந்தாலும் 
அப்பா  "செலவுக்கு பணம் கொடு "எனும் போது 
கைகட்டி நிற்கும்  சாதாரண இளைஜன் .இவன் 

Saturday, January 4, 2014

எர்வாமட்டீன் ஏடாகூடங்கள்

கொஞ்ச நாளாவே  எர்வாட்டின்  காரனுக  படுத்தும் பாடு தாங்கல ,இவனுக கூட கூட்டுகளவாணி இந்துலேகா பிருந்தா ன்னுட்டு இன்னுமொரு குருப்பு .
முந்திஎல்லாம்  அமேசான் காடுன்னாலே  அனகொண்டா  பாம்பும் ,அந்த  அனகொண்டா படமுந்தான்  நினைவுக்கு வரும் ,இப்போ கஸ்டகாலம் எர்வாமட்டிந்தான் நினைவுக்கு வருது .பிஸ்னஸ் பண்ணும் பெரிசுக "கஸ்டமர் மைண்ட் ரீடிங் "க்காக  பதினாறு பேர் கொண்ட நிபுணர் குழுவையே  நியமிச்சிருப்பாங்க. இப்போல்லாம்  "ஜோகா" கிளாஸ்  ன்னுட்டு சிறிசு ,பெருசு  எல்லாம் ஓடுது ,ஏன்  தியான வகுப்பு ன்னு கூட  "கார்பரேட் சாமி" கிட்ட  போற  வையராவும் (வயாகரா  இல்லை ) இருக்கு.இப்பிடியான  மனித மனசுகள  அடிப்படையா வச்சு  ஆயுள்வேதம் ,மூலிகை  ,அமேசான் காடு ன்னு புரளி கிளப்பி   பழைய  விசயத்தையே அதுதான் இட்லிய  உப்புமா ஆக்கி  கொண்டு வந்த விசயந்தான் இந்த முடி உதிர்வ தடுக்கும் மருந்து .


இந்த வகையறா மருந்துகள் வெறும் 100,200 ரூபாயாக இருந்திருந்தால் காக்காய் கூட  சீண்டி பார்த்து இருக்காது ,அங்கதான்  அந்த பதினாறு பேர் கொண்ட குழு தீயா வேலை செய்து முன்றாயிரம் ,நாலாயிரம்  என விலை நிர்ணயித்து  கொள்ளை லாபம் பார்த்து சந்தோசமா  மொட்டை தலைய  தடவி கொண்டே இருக்குதுக .

இதுல இவங்க   டி வி  விளம்பரங்கள் பார்க்கும் போது  பயமா இருக்கும் , உதிர்பவ்ன் கூட இப்படி கவலை பட மாட்டான் ,இவர்கள்  விசுவல் பார்த்தால்  "விழாவுக்கு  வரசொல்லி  மிரட்டுறாங்க தலைவரே " என பேசும் "தல" யின் நிலைமையாய் முடி உதிர்ரும் எல்லோரும்  வாங்கி பாவிக்க வேண்டும்   போல் இருக்கிறது  ,இதுல செலிபிறேட்டிஸ்  சேர்த்து  சேவாக் ,கம்பீர்  ஏன்  கடைசியா  ஜக்  கலிஸ்   போட்டோவின்  முன்னே,பின்னே  விளையாட்டுல மொடலாக  வாருகிறார்கள் . கொஞ்ச நாள் முதலா ஒரு விளம்பரம் ஓடிக்கொண்டு இருக்கிறது ,காலியான வயசுல முடி உதிர ஆரம்பிச்சு ன்னு தொடங்கி  ஓர் விளம்பரம் .ஏதோ  முடி உதிர்த்தா  கலியாணமே நடக்காது எனும்படியாய் . இதெல்லாம்  அதிகம் ன்னு தோணல இந்த விளம்பர குருப்புக்கு .

பொதுவாகவே சாதாரண பொதுமகன் எனும் லுக் இப்போல்லாம் மாறிகிட்டே வருது அதுவும் ஓர் ஆண்  எனும் பொது கொஞ்சம் உப்பலான வயிறு ,ஏறிய முடி என மக்கள் அந்த தோற்றத்தை  ஏற்றுகொள்ள ஆரம்பித்து விட்டனர் ,முன்பெல்லாம் பல விளம்பரங்களில் அழகிய ,சிமார்ட் ஆண்களே மொடல்களாக இருந்தவர்கள் இப்போ கொஞ்சம் கொஞ்சமாய் பொதுபடியான தோற்றம் உள்ள ஆண்களே  விளம்பர மொடல்களாக  தோன்றுகிறார்கள் .ஆனாலும் பச்ச தண்ணில  சீனிய  கலந்து இளநி  ன்னு விளம்பரம் போட்டால் லைன் ல இளநி நின்னு உடம்புக்கு நல்லது ன்னு குடிக்கும் கோஸ்டி ஆச்சே நாம விடுவமா     ...


அடுத்த பச்சை கலர்  எர்வமாட்டின் போத்தல் வாங்க பணம் இல்லாமல் ஜோசிக்கும்  போது  தோன்றிய  கடுப்பு பதிவு இது