Monday, August 13, 2012

மறந்து போன குடை

குடைய எங்க விட்டுட்டு வந்தீங்க ? மனைவியின்  கேள்வியால் சற்றே ஆடித்தான்போய் விட்டார்  சண்முகத்தார்,    எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு உறைக்கவே உறைக்காதா ?  எனஅர்சனையை தொடர்ந்து கொண்டேஅவளின்  மூலஸ்தானமான சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.விருப்பம் இல்லா விருந்தாளியாய்  கண்முன்னே உட்காந்துகொண்டிருக்கும் சோடா புட்டி கண்ணாடி ,சுருக்கம் நிறை முகம், நரையால் பாதியளவு ஆக்கிரமிப்பு  செய்யப்பட்ட முடியென அறுபதின்  அனைத்து அம்சங்களும் அப்படியே பொருந்தியிருந்தன அவருக்கு .

கண்டிப்பான கணக்கு வாத்தியார் என்பதனை  விட மிகவும் கண்டிப்பான கணக்கு வாத்யார் என்பதே பொருந்திவரும் அவரின்  செய்கைகளை பார்க்குமிடத்துடத்து, கையில் ஓர் கட்டு புத்தகங்கள், சார்க் பீஸ்,பிரம்பு  என தீ போல்வ வ வகுப்பறையில் இவர் நுழைகையில் பயத்தில்உறைந்தே போய் விடுவார்கள் மாணவர்கள் . உண்மையினை சொல்ல போனால்இவரிடம் படித்து சித்தி பெற்ற மாணவர்களை விட இவரின்  தண்டனைக்கு பயந்து பள்ளிக்கூடத்தை விட்டு ஓடியவர்களே அதிகம்.

என்னங்க நினைவுக்கு வந்துடுச்சா? கடைசியா எங்க போன ?  எங்க உட்காந்திங்க, பஸ்ல விட்டிருப்பீங்களோ?  பட்டினதுக்கு போய்ட்டு நேரா இங்க வராம யார் கூடவும் அரட்டை அடிச்சிட்டு குடைய அங்கேயே   மறந்து விட்டுட்டு வந்திருப்பீங்க? என வெளியூர் புலனாய்வு பிரிவில் வேலை செய்த அனுபவம் உள்ளவள் போல கேள்விக்கணைகளை வீச தொடங்கியிருந்தாள் ..கொஞ்சம் பொறுத்து கொள்ளுடாப்பா! அதான் ஜோசிச்சுகிட்டு இருக்கன் இல்ல என மனைவியிடம் எதோ சொல்ல முனைந்தாலும் அவள் விடுவதாய் இல்லை ..போன பென்சன் காசில வேண்டுனது ..ஒவ்வொரு பென்சனுக்கும் ஒவ்வொரு குடையா ? இனி நீங்க குடை வாங்கவும் தேவல தொலைக்கவும் தேவல ..மழையில நனைஞ்சு வந்தாத்தான் புத்தி வரும் உங்களுக்கு .

என் பென்சன் காசு நான் வேண்டுவேன் தொலைப்பன் என எதிர் வசனம் பேச முற்படுகையில் சார் சார்  ..என கதவடியில் ஓர் குரல்  ..ஒ ஒ ஒ வந்திட்டார் உங்கட சிநேகிதன் போங்கோ போய் ஊரார் உத்தியோகத்தம் பாருங்க மனைவி மீண்டும் ஆரம்பித்து இருந்தாள்  .ஆனாலும்  சற்றே  வித்தியாசமான குரல், கூடவே  தன் வீட்டு நாய் ஏதோ புதியவரை கண்டது போல்  விடாமல் குரைப்பது போன்ற அறிகுறிகளால் யார் என படலையினை எட்டி பார்த்தார் .

.ஓர் பையன் கையில் குடையுடன் நின்று கொண்டிருந்தான் .அதுவும் அவரின் அந்த கருப்பு நிற நீள கைப்பிடி குடை , வா தம்பி வா உள்ளே வா!!! யார் எவர்  என்ற விசாரிப்பு ஏதும் இல்லாமல் குடையை கண்டதும்தான் தாமதம் உள்ளே ஈர்த்துகொண்டார் அவனை .
சார் நான் குமார் உங்க கிட்ட படிச்சவன் சார் ..இன்னிக்கு பட்டினத்தில இருக்கிற என்கடைக்கு வந்திருந்தீங்களாம்  ..குடைய விட்டுட்டு வந்திட்டிங்களாம் என வேலை செய்யுற பையன்க சொன்னாங்க அதான் குடைய கொடுத்துட்டு போவம் எண்டு வந்தன் சார் ...

ஆமா  எந்த குமார் நீ ? அழகப்பன் பையனா என விழித்தார்?

ஆமா சார் ஒரு நாள் கணக்குபுத்தகம் கொண்டு வர மறந்து போனதுக்கு எல்லோர் முன்னுக்கும் வச்சி எனக்கு அடிச்சிங்களே ?அதோட ஊர விட்டு பட்டினதுக்கு ஓடினவன்தான் சார் நான் என அவன் சொல்லிக்கொண்டு போகும் போதெல்லாம் இவர் முகம் போன போக்கை அவரின் மனைவி கவனிக்க தவற வில்லை .