Pages

Wednesday, June 29, 2016

வெளிநாட்டுச்சாராயம்அப்பிடியென்ன ஸ்பெஷல் அதுல இருக்கு?? நம்ம நாட்டு சப்பட்டை சாராயத்துல  இல்லாத   போதையா  இருக்கபோகிறது அந்த வெளிநாட்டு சாராயத்தில ??.
"சொல்லுங்க சொல்லுங்க நீங்க யாரு? பாம்பாய்ல என்ன செய்திட்டு இருந்தீங்க???" பாட்ஷா பட கேள்வி போலவேபலதடவை இந்த கேள்வி என்னை டிஸ்டப் பண்ணியிருந்துச்சு .

 நண்பன் வாங்கிதரும்   ஓசிபியருக்காக யாருக்குமே தெரியாம ஒண்டரை கிலோமீட்டர் தூரம்  சைக்கிளில் அவனைவைத்து மிதித்து போய் குடித்துவந்த  கரடியே காறித்துப்பும் நிலையில்   இருந்த நமக்கு இது தேவை இல்லை என பத்துவருடங்களாக சொல்லிவந்த அதே சமாளிப்பயே ரீமேக் செய்து வெளியீட்டு நாக்கு மூக்கு போன்ற ரசிகசிகாமணிகளை திருப்திபடுத்தியது  ; எம் கே ராஜேஷ் வகை இயக்குனரான மனசு.    இப்ப கொஞ்ச நாளாவே அந்த கேள்வி என் மண்டையில medula ablangada ல அடிபட்டு புத்திபேதலிச்சவன் பேசுவது போலவே திரும்ப திரும்ப வந்து வந்து 
போச்சுது.ஒரு நாள் அலுவலகத்திலே நடந்த அப்ஸ்சைரல்(appraisal)   மீட்டிங்கில்உங்க தொழில்துறையில் சாதிக்க விரும்புவது யாதெனும் கேள்விக்கு
"சாகிறதுக்கு முன்னாடி வெளிநாட்டு சாராயம் வாங்கி மொட மொட எண்டு ஒரே சிப்ல குடிச்சி 
முடிச்சிடனும் " எண்டுஜோக்காவவே நான் நண்பர்களிடையே சொன்னாலும் உள்மனசுக்குள்ள 
ஆழமா உட்காந்திருந்த அந்த வெளிநாட்டுசாராய ஆசைதான் அப்பிடி பேச வைத்தது என்பது  
போதிதர்மரின் முதலாம் அறிவுக்கு கூட  விளங்கியிருக்கும்.


வெளிநாட்டு சாராய ஆசை எனக்கு வந்த வரலாறு , சமூகக்கல்வி,புவியியல் சுகாதாரமெல்லாம்  கொஞ்சம்சுவாரசியமானது .நட்பு வட்டதில் எல்லோருக்கும் ஒரு பெரியப்பாவோ சித்தப்பாவோ அங்கிளோ ஆண்டியோவெளிநாட்டில் இருப்பார்கள் .அவங்க கொண்டுவந்த சாராயத்த வைச்சு 
அவனுக காட்டின படம் தான் இப்படி ரிவென்ஞ் எடுக்க தோனிச்சு அப்பெல்லாம் நாங்க சும்மா 
மூடிய மணந்துபார்க்கிறது, ஒரு பியர பதினெட்டு பேர் சேர்ந்து குடிக்கிறது என சும்மா குடிக்க 
பழகின நேரம் ஒவ்வொருத்தனும் வந்து 

"மச்சான் பெரியப்பா கொண்டு வந்த போத்தல் பிரிஜ்ல இருந்து ஒரு சொட்டு குடிச்சி    ஒருவருக்கும் தெரியாமகுடிச்சண்டா ! மணமே இல்ல சும்மா ஜிவ் வெண்டு இருந்துச்சு" 

"மச்சி மாமா கொண்டுவந்தது குடிச்சி பிரிஜ் ல வைச்ச மிச்சம் குடிச்சண்டா அப்டியே மிதக்கிற மாதிரி இருக்குடா "
இந்த வார்த்தைகள்தான் எனக்குள்ள தூங்கிகிட்டிருந்த சாராய மிருகத்த தட்டி எழுப்பிச்சு, அப்பதான் அவங்க கிட்டசொன்னேன்.

இன்னிக்கு உங்க மாமா, பெரியப்பா எல்லாம் வெளிநாட்டில இருக்காங்க அவங்க கொண்டு வருவாங்க எங்கிற திமிருல ,

ஜொனிவோர்க்கர் குடிச்சன் விஸ்கி குடிச்சன் நு  சொல்லி எனக்குள்ள தூங்கிட்டு இருந்த  வெளிநாட்டு சாராய வெறியதட்டி எழுப்பிட்டீங்க .

நண்பர்களே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இது வரைக்கும் என்ன நீங்க வெறும் பியர் குடிக்கிற ஒருத்தனாத்தான் பார்த்திருபீங்கஇனி ஜொனிவோர்க்கரோ கார்ட் டெயிலோ குடிக்கிறவனா பார்க்கப்போறீங்க. 

இந்த நாள் உங்க காலண்டர்ல குறிச்சிவைச்சுக்கோங்க.


இன்னையில இருந்து  எனக்கும் உங்களுக்கும் வெளிநாட்டு சாராய யுத்தம் தொடங்கிடுச்சு! இந்த யுத்தத்தில உங்களவிடவும் அதிகமா ரெட்லேபிள் ,கோல்ட் லேபிள் ஏன் ப்ளூ லேபிள் ஜொனிவோர்க்கர் வரைக்கும் குடிச்சி உங்களவிடவும் சிறந்த குடிகாரன்னு சமூக அந்தஸ்து எடுத்து, இப்ப எப்பிடி அது இப்பிடியிருக்கு இது அப்பிடியிருக்குசொல்லிறீங்களோ அதே போல நானும் உங்க கிட்ட சொல்லல


என் பேரு .........இல்லைடான்னு 


அண்ணாமலை பட ரஜனிகாந்தா மாறி அவனுகளுக்கு விட்ட சவாலை இன்னமும்நிறைவேற்றினால்தான் இந்த ஜீவன் முத்தியடையும் என்பதே பெரிய விடயமாய் பட்டதெனக்கு.

இந்த சவால்தான் இத்தனை துன்பத்துக்கும் காரண கர்த்தாவாக இருந்ததால் நான் கர்த்தரையே வேண்டிக்கொண்டேன்

சர்வ வல்லமை பொருந்திய ஆண்டவரே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! எனக்கும் ஒரு மாமாவோ சித்தப்பாவோ வெளிநாட்டில இருந்து அவர்கள்எனக்கு ஒரு போத்தல் ஜொனிவோர்க்கர் பிளாக் லேபலோ ரெட் லேபிளோ கொண்டு வந்து குடுக்கும்படி செய்வாக  ஆமென் ஆமென்  ..

 அவனவன் நகை நட்டு வாங்கவென சம்பள காசுல கொஞ்சங்கொஞ்சமா மிச்சம் பிடிப்பான்   இல்லாட்டி கதிர்காமம்போகவெண்டாலும் கொஞ்சங்கொஞ்சமா மிச்சம் பிடிப்பான். இந்த  லோகத்திலே சாராயம் வாங்கி குடிக்கனும் எண்டதுக்காகவே சம்பள காசுல நூறோ இருநூறோ மாசம் மாசமா மிச்சம் பிடிச்சி வந்த ஒரே ஒரு  பரிதாபத்துக்குரியஜீவன் நானாத்தான் இருக்கும் பொண்டாட்டிக்கு கூட தெரியாமல் சேர்த்து வைச்ச காசு "சிறுதுளி பெரும் போத்தல்"எனும் குடிமொழிக்கு ஏற்ப நாளொரு பியரும் பொழுதொரு கார்ட்ஸ்பெக்கும் என வளர்ந்து 6000 ரூபாயாக வந்துநின்றது.

அப்பதான் அலுவலக நண்பன் ஒருத்தனுக்கு பிசினஸ் டார்கெட் அடித்த காரணமாய்  போனாபோகுதுன்னு எமது  அலுவலகத்தினால் "பங்கொங்"செல்ல வசதிஏற்படுத்தி கொடுக்கபட இருக்கிறது  எனும் செய்தி இன்ப பியர் வந்து பாயிதுகாதினிலே போல வந்து சேர்ந்தது .

என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறன் இதுல இனி இந்த கையால ஒரு பிளாக் லேபிள்  ஜொனிவோர்கர்தான் பார்க்கனும் என சொல்லி அந்த 6000 ரூவாவை குடுத்துவிட்டேன் !  சிவப்பு கலரில் "டியுட்டிப்ப்ரீ" என பெரியகொட்டைஎழுத்தில் இருந்த ஒரு பிளாஸ்டிக்பையிலே கொண்டுவந்து சேர்த்தான், கூடவே நான்கைந்துசொக்கலேட்டுகள் யாருக்கு வேண்டும் அந்த சொக்கலேட்  போத்தலை கொண்டாடா என மிட்டாயைபறித்துகொண்டோடும் குழந்தை போல ஓடினேன்.

கையில இருந்த முட்டாச காக்கா கொத்தின மாதிரி பொண்டாட்டி எனும் சண்டாளி போத்தலை பையோடே பிடிங்கிகொண்டாள்! இண்டைக்கு இல்ல நாயிற்றுகிழமை தான் குடிக்கலாம் நானே  எல்லாம் செய்து தாரன் இந்த பதில்கொஞ்சம் திருத்தியை உண்டாக்கியது, என்றாலும் எதுவும் தெய்வகுத்தம் ஆகி  "கிக்" குறைந்துவிடுமோ எனும் பயம்இருக்கதான் செய்தது, அட ஆக்க பொறுத்த நமக்கு ஆற பொறுக்க முடியாதா?? ரெண்டு நாள் தானே நிதானமாகுடிக்கலாம் என நினைத்து மனிசியாரிடம் உத்தரவு வாங்கிக்கொண்டேன்.அந்த பொன்னான நாயிறும்/நாளும்  வந்தது! காலையில எழுந்து வீட்டில் உருபடியாய் ஏதாச்சும் வேலைசெய்த்தால்தான்  எவ்வித நச்சரிப்போ அரியண்டங்களோ இல்லாமல் குடிக்கலாம் எண்டு எண்ணி கொள்ளி  கொத்துவதுமுதல்கொண்டு புல்லு செதுக்கிற எண்டு பெரிய வேலைகாரன் கம்பு போல சுழண்டு சுழண்டு வேலை செய்ததால் (மனிசியின்  உள்பாவாடை சட்டை எல்லாம் துவைத்ததை சொல்ல வெட்கமாக இருப்பதால் சொல்லவில்லை) குடிப்பதற்கான பச்சை லைட்டை மனிசியார் எரிய விட்டார்.

குளித்து விட்டு சாப்பிட முதல் இருக்கும் அரைமணித்தியாலத்துக்குள் குடிக்கலாம் என  திருக்கணித பஞ்சாங்கத்திலேசொல்லப்பட்டிருப்பதால் , குளித்துவிட்டு குசினிப்பக்கம் போனால் ஆச்சரியம் காத்திருந்தது. பன்பாய்  விரிக்கபட்டுஅதிலே கிளாஸ் ,சுடசுட மீன் பொறியல், பிரிஜ் ஜில் இருந்து எடுத்த பெப்சி போத்தல் எல்லாம் எடுத்து ரெடியாகிஇருந்தது.உள்ளூர பயம் தொற்றிக்கொண்டது . வீட்டுக்க ஒத்த பியர் குடிக்கிறதுக்கே உலகம் தாண்டி செவ்வாய்கிரகத்துக்கே  கேட்கும் படி கத்துற நம்ம பொண்டாட்டியா இப்பிடியெல்லாம் ஏற்பாடு செய்திருப்பது. ஒரு  வேளை உள்ளேயே வைத்து ஊமகுத்தாக குத்திவிட போகிறாளோ? இதுதான் கடைசி இண்டையோட இந்த கருமத்தயெல்லாம்உட்டுடனும் எண்டு சொல்லிடுவாளோ? சீ இருக்காது அப்ப ஏன் இப்படி அன்பாக நடந்து கொள்கிறாள்?
ஒருவேளை நானும் ஒரு "சொட் "குடிக்க போறேன் என பங்கு கேட்டு வந்துடுவாளோ ? இவ்வளவு காலமும் ஒத்த பியர்என்றாலும் பாட்னசிப் தரும் அந்த நண்பனுக்கு கூட சொல்லால் குடிக்க போகிறேன்  இதில் இவளுக்கு வேறு குடுப்பதா??? இல்லை அப்படி எதுவும் இல்லை என்பது பொண்டாட்டாட்டியின் "அந்த" சிரிப்பில் தெரிந்தது .ஆனாலும் பாயில்கொமடியன், குணச்சித்திர நடிகர்கள் நாயகி என எல்லோரும் இருந்தாலும் அந்த முக்கியமான கதாநாயகனை இன்னமும் காணவில்லை . பிரிஜ் ஜை திறந்தேன் உள்ளே என் செல்லாகுட்டி கறுப்பு சட்டையோடு உட்காந்திருந்தாள்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பெஸ்ட் கப் எடுக்க காத்திருப்பவன் இவ்வளவு எக்சைட்மெண்ட்டோடு இருக்க மாட்டான்.முதல்முதலில் ஒரு வெளிநாட்டு சாராய போத்தலின்  மட்டையை தடவி பார்த்தேன் .கீழே இருந்த தண்ணீர் போத்தலைஎடுத்து கொண்டே எனது செல்லாகுட்டையை மட்டையோடு சேர்ந்து கையிடுக்குக்குள் இறுக்கு கொண்டேன் . ஏ ஆர்ரகுமான் ஒஸ்கார் அவார்ட்டை கையில் எடுத்த போது இவ்வளவு சந்தோச பட்டிருக்க மாட்டார் விட்ட சவாலைநிறைவேற்ற போகும் சந்தோசம் ஒருபக்கம் ! முதல் முதலில் தனியே "அரக் " குடிக்கும் ஆசை ஒருபக்கம் எனபுழகாங்கிதம் எனக்கு .

"செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே."

இந்த தேவாரம்  எப்படி அப்பொழுது நினைவுக்கு வந்ததோ தெரியல இருந்தும் சிட்டிவேசனுக்கு மிகவும் சிறப்பாகவேஇருந்தது. இரண்டடி வைத்திருப்பேன் ஜில் ஜில் என உள்ளே குலுங்கும்  சப்தம் காதில் சதங்கை ஒலி போலஒலித்தது.இன்னுமொரு அடி கால் வைத்திருப்பேன் ,  தலைவரின்  ராஜீவ் காந்தி  தற்கொலை பாணியில் சொல்வதானால்   அப்போதுதான்து  அந்த  துன்பியல் சம்பவம் நடந்தேறியது . "கிளிங் "என்றொரு சப்தம் மூலமாய்  என் ஆசை , சவால் , சந்தோசம் எல்லாமே நிலத்திலே   வழிந்தோடிக்கொண்டிருந்தது.

பிரிஜ் ஜில் இருந்ததால் அந்த மட்டைகவரின் அடிப்பாகம் நனைந்து இருந்ததை என் சாராய ஆசைமிகு கண்ணுக்குதெரியாமலே போய்விட்டது . நிலத்தில் விழுந்து அடிப்பாகம் வெடித்து என்   ஆசையே அலைபோலஓடிக்கொண்டிருந்தது.
 ரோம் நகரம் பற்றி எரியும் போது பிடில் வாசித்துகொண்டிருந்த நீரோ மன்னன் போலவே இந்த  துயரத்தை எல்லாம்கண்ணுறாத என் மனைவி  இன்னமும் குசினிக்குள் பாத்திரம் தேய்த்து தன்  கடமையுணர்ச்சியைகாட்டிக்கொண்டிருதாள்.

என் அப்பா இறந்த போது கூட கண்கனை கலங்காமலே பார்த்துக்கொண்டேன், ஆனாலும் இப்போது கொஞ்சம் கலங்கியேபோனது ,இருக்காதா பின்னே ஆறேழு வருடத்து ஆசை ஒரு நிமிடத்தில் நிராசையாகி போனது. கமுக்கட்டுக்க(கையிடுக்குக்க) எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே எனும் கவலை இன்னொருபுறம்  என  மொத்தமாய்  போத்தலோடு சேர்த்து நானும்  உடைந்தே  போனேன் .என் அலறல் கேட்டு வந்தமனைவியோ 

கவலை படாதீங்க இன்னொரு நாளைக்கு பார்க்கலாம் என உடைந்த போத்தல் துண்டுகளை பொறுக்கதுவங்கினாள்.கொஞ்சம் பொறு பொறு என சொல்லி குனிந்து விரலாலால் அதை தொட்டு நக்கி பார்த்தேன் . என் ஆறுவருடத்து வியர்வை கொஞ்சமாய் உப்பு உறைத்தது .

(இது நண்பன் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட ஒரு சராய காவியம்ஆகும்!!. மற்ற படி எனக்கும் இதுக்கும் எவ்வளவும் சம்பந்தம் இல்ல)

Monday, June 13, 2016

ஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)

ஆசைதான் அது ! அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல்  " எனும்மாதிரியான ஒருவகையாசை

நீல கலர்ல ஒரு பஸ் "கொழும்பு -கல்முனை " எனும் பெயர்பலகை ;கூடவே சூப்பர்லைன் எனும் பெயரோடையும் புதுசா அப்போதான் எங்க ஏரியாவால போகதொடங்கின காலம். "இதோட பல்லே பலகோடி ரூவா போகுமன்ன" இதோட ஈரலு மெடிசின்" எனும் மாதிரியாய்

புல்லா ஏசி;

போர்த்துதான் இருக்கனும்;
ஓட்டமெட்டிக் டோர்;

அக்சிடெண்ட் பட்டா அப்பிடியே பலூன் மாதிரி ஒண்டு வந்து அதுக்குள்ள போய் சேப்பா இருப்பம்;

அப்பிடியே ஏரோப்பிளேன்ல போற மாதிரி இருக்கும்( இத சொன்ன நாயி மட்டக்களப்ப தாண்டி கூட இன்னமும் போகல , அவன் சொன்னத நான் நம்பி)

எனும் படியாய் " ஏசி பஸ்சை பிடிக்க பத்து காரணங்கள்  " எனும் படியாக அடுக்கிவிட்டார்கள் !!

பொரிச்ச நெத்தலிகருவாட்டுவாசம் ஊர்முழுக்கபரவுன மாதிரி என் மூளை , மூக்கு ஈரல் இதயம் கை கால் எல்லா இடத்துக்கும் "ஏசி பஸ் "ஆசை பரவி பரதநாட்டியம் ஆட ஆரம்பிச்சுது .
டிக்கெட் விலை 1000/= ஓவா! இதுதான் லவ் பண்னின புள்ளையிட்ட லவ் சொல்லபோக்க அவளுட  அடிதடி அண்ணன் குறுக்கவந்தமாதிரி  அடிவகுத்துக்குள்ள குறுகுறுக்கவைச்ச விடயமா இருந்தாலும்  . "நீ ஏசி பஸ்ல எல்லாம் போய் படிச்சு கிளிக்க வேனாம் வீட்டிலயே தின்னுட்டு கிட" எண்டெல்லாம் அம்மா ஏசாம காச தந்தாங்க ! (இப்பிடி சொன்னா நம்பிடவா போறீங்க ).

ரஜனி படத்துக்கு FDFS டிக்கெட் புக் பண்னின எபெட்ல அந்த ஏசி பஸ்க்கும் டிக்கெட் புக் செய்தாயிட்டு அந்த பொன்னான நாளும் வந்தாயிற்று
ஏற்கனவே இவனுக புல்லா ஏசி ஆகையால கை கால் எல்லாம் விறைச்சிபோயிடும், காதுக்கால குளிர் ஏறி   .......

எண்டெல்லாம் எச்சரிக்கை இல்லை கட்டளை எனும் படியாய் சொன்னதும் கட்டிலில் கிடந்த மெத்த பெரிய பெட்சீட்டை மடித்து இன்னும் பெரிய பையினுள் வைத்துக்கொண்டு ஒரு குருசேத்திர போருக்கே தயாராகினேன் .

சரியாய் 9:30 க்கு சொல்லிவைத்தது போல வந்துநின்றது அந்த பஸ் .கண்டக்டர்தான் சிங்களத்தில் ஏதோ கேட்டான் ! "கொழும்பு கொழும்பு புக்கிங் புக்கிங் சீட் நம்பர் ருவெண்டி;    ஓடிப்போன பொண்டாட்டிய தேடிப்போன புருசன் மாதிரி என் நாக்கு நாலைஞ்சு இங்கிலீசு சொல்ல தேடித்தேடி அலைஞ்சுது .
அவன் முகத்தில மலர்ச்சி! தன்ன விடவும் கேவல இங்கிலிசு கதைக்க ஒருத்தன் ஊருக்குள்ள இருக்கான்னு நினச்சு சிரிச்சிருப்பான் போல
அத விடவும் நம்ம கேனத்தனமா இங்கிலீச  புரிஞ்சிட்டான் எனும் விஸ்பரூபமலர்ச்சி எனக்கு

டிக்கியில bag க போடுவமா எண்டு சிங்களத்தில கேட்டிருப்பான் போல நானும் டிக்கெட் காசு கீசு குடுத்தாச்சா எண்டு கேட்கானோ எண்டு நினைச்சு பயத்தில பெரிய சத்தமாவே " ஓவ் ஓவ்" எண்டு மாட்டுவண்டி ஓட்ட, அந்த பெரிய bag க தூக்கி அவனும் டிக்கியில போட்டுட்டு வந்துட்டான்.

உள்ள ஏறினதும்
பெஸ்ட் நைட் ரூமுக்க வந்த புதுபொண்டாட்டி மாதிரி என் நிலமை இருந்துச்சு.
எங்க இருக்கிற , எத இழுக்கிற , எத வைக்கிற ஒண்டுமே விளங்கவும் இல்ல புரியவும் இல்ல ,மீண்டும் அவனேதான் வந்தான் , ஒரு சீட்டை காட்டிவிட்டான் போய் உட்காந்துகொண்டேன்.

பஸ்சில் கொழும்பு போகும் அந்த வழமையான அனுபவம் டோட்டலா மிஸ்ஸிங்
வெற்றிலை பாக்கு போட்டு துப்பி துப்பி பேசும் கண்டக்டர் இல்லை,பஸ்ல போற சிங்கள பைலா பாட்டு கடபுடா கடபுடா சத்ததையும் தாண்டி சைனா போனில் " காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே" வகை பாட்டு போடும் பக்கத்து சீட் காரர் இல்லை, வியர்க்குது எண்டு சொல்லி சேர்ட்டை கழட்டி வெறும் பனியனோடு உட்காந்திருக்கும் சனியன்கள் இல்லை, இது போக "பாஸ்போர்ட் எடுக்க போறன் பெரியப்பா அங்க போயிட்டு கோல் எடுக்கன்" மாதிரியான செல்போன் உரையாடல் இல்லை ,இதை விடவும் பஸ் ட்றைவருக்கு சுண்ணாம்பு தடவிகுடுக்கும் ஒரு அள்ளக்கை ,முதலாம் ரெண்டாம் நம்பர் இருக்கைகளில் இருக்கும் பெண்கள் அணியினர் என எதுவும் இல்லாமல் வெத்துவேட்டாய் இருந்தது அந்த பஸ்.

உட்காந்தாயிற்று! அட பரவாயில்லையே எனும் படியான சீட்; அதை அட்ஜெஸ்ட் செய்வதில்   என் அதிதீவிர சிக்ஸ்பக் தன ஜிம்மை காட்ட முயன்று கொண்டிருந்தேன் .பக்கத்துசீட்காரர் என்னை பாவமாய் பார்த்தார்,உள்ளே இருந்த மான மரியாதை ரோச நரம்பு நாடிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து "லொக் இறுகிட்டுது போல அதான் நிமித்தேலாம கிட்டகுதுன்னு "கேவமான ஒரு சமாளிபிக்கேசனை சொல்லியதுகள்

அப்பிடி இல்ல இத மெதுவா அமத்துங்க எண்டு சொல்லி  சின்னதாய் ஒரு நைஸ் சிமைல் செய்துவிட்டார்,அவமானம் அங்க இருந்தே சீவி சிங்காரிக்க தொடங்கியது.

கொஞ்சம்  கொஞ்சமாய் குளிர் ஏற ஆரம்பித்ததும்  தான்
ஆரம்பத்தில்  பஸ் கண்டக்டருடன் பேசிய  அரைகுறை  இங்கிலீசு தனது வேலைய  காட்டி விட்டதை  உணர்ந்தேன்  ,"தானறியா இங்கிலிசு  தன் புடரிக்கு  சேதம் " என  தமிழர் பெருமை  பேசும் பிரேசில்  நாட்டில்  கிடைத்த   கல்வெட்டு  மொழிகளுக்கு  ஏற்ப   எனக்கு  அந்த  அரைகுறை  இங்கிலிசு  மடிச்சு  வைச்ச பெட் -சீட்டை  எடுக்காமலே  பயணப்பையை   பஸ் -டிக்கிக்குள்ளே  போட வைத்துவிட்டது  .பக்கத்துக்கு  சீட்  காரர்  வேறு  பல்லைக்காட்டி  சிரிச்சாலே  பத்து லெட்சம் ரூவா  நட்டமாகி போயிடும் என்பது போல  ஒரு உம்மணா மூஞ்சியாக கற்பனை கடந்த  சோதியாக  காட்சி கொடுத்துகொண்டிருந்தார்.

குறுக்க கைய எப்ப கட்டினேன்னு  நினைவில்ல  கொஞ்சம் கொஞ்சமா  குளிர்  வேலைய காட்டி  காது  கன்னம்  குடல்  குந்தாணி  வரைக்கும்  தாக்குதல்  நடத்த  தொடங்கியது  .அடிக்குது  குளிரு துடிக்குது  தளிரு  பாட்டுக்கு  என்  மேல் கீழ் பல்லுகள் டுயட்  பாட தொடங்கியிருந்தன  .நாராயணா!!!!!!! நாராயணா  !!!  சேலை உருவினாதான்  ஏதும் துணி குடுப்பியா  எனக்கெல்லாம்  துணி  குடுக்கமாட்டியா  என  தீடிர் சாமி பக்தனா்னேன்  .என் குரல்  நாராயணனுக்கு  கேட்டுச்சோ இல்லையோ  பக்கத்துக்கு  சீட்  உம்மணா மூஞ்சி  அங்கிளுக்கு  கேட்டிருக்கும்  போல
தம்பி  இந்தாங்க  துவாய்  இத போர்த்து கொள்ளுங்க!என சொன்னதும் தான்  தாமதம் போர்வை என் உடம்பை  சுத்தியிருந்தது  .ஓட்டமாவடி  சாப்பாட்டு கடையில  நிப்பாடினா  பஸ் கொண்டக்கர் கிட்ட   கேட்டு  அந்த  டிக்கிக்குள்ள  கிடக்கிற  பெட் சீட் எடுத்து விட வேண்டியதுதான்  என  நினைத்தாலும்  எப்படி  போய்  அவனுட்ட கேக்கிறது

my bag  is inside the  dikki .please take that

எனக்கு  தெரிந்த ஓட்டு மொத்த இங்கிலிச  வடிச்சு எடுத்து  இந்த நாலு  வசனத்தையும்  பாடமாக்கி கொண்டிருந்தேன் .அதுக்குள்ளே  ஒரு டவுட்டு
take என்டு வருமா  இல்லை  took  என்டுவருமா  ??  பிரெசென்ட் டேன்ஸ்வருமா  ? பாஸ்ட் பார்டிசிபேட்  ல  has ,have போட்டு  வருமா ?  எண்டெல்லாம்  குழம்பி முடிவுக்கு வரமுதலே  சாப்பாடு கடயில பஸ்  நிப்பாடி பிரேக்  போட்டான்  .என்  கூட படிச்ச ஒருத்தனுக்கு  போன்  செய்துனைய  சொல்லி எப்படி சிங்களத்துல  கேட்கிறது  எண்டு  கேட்டன்  அவன்  சொன்னத  பார்த்தா   முத்து படத்துல  இரஜனி   "இறுக்கி அணைச்சு  ஒரு  உம்மா  கொடு   "  மாதிரி  மாட்டி  விட்டுடுவான்  போலவே  தோணியது  .

குதிச்சுடுடா கைப்புள்ள எண்டு நானேவே போய் அவனுட்ட கேட்டுடலாமெண்டு "பட்ஷா பாரு பாட்ஷா பாரு பால்வழியும் முகத்தபாரு " என சோகமான BGM பின்னால ஒலிக்க பஸ்ல இருந்து இறங்கினேன் , இந்த ஹொட்டல்ல ஓசியில தின்னனுமெண்டு காலையில இருந்து பட்டினி கிடந்திருப்பான் போல இறங்கி வார நேரத்துக்குள்ள  " ட் ரைவரும் கண்டக்டரும் மட்டும் வரவும் " எனும் போர்ட் இருந்த ரூமுக்குள் போய் விட்டான்.அவன் திரும்ப வருவதுக்கு இடையிலே வயிற்றுக்கு அப்லோடிங் , வயிற்றுக்கு கீழே டவுன்லோடிங் என்பன செய்ய கிடைத்தது. அந்தாட்டிக்கா கண்டத்துல பிறந்தவங்கதான் பஸ்ல வருவாங்கன்னு நினைச்சிருப்பானோ தெரியல ,வெப்பம் மைனஸ் செல்சியஸில் இருந்ததால் டவுன்லோட் செய்ய நிறைய "டேட்டா " இருந்தது. முழுவதும் டவுண்லோட் ஆகி மொபைல் டேட்டாவை ஓப் செய்து கொண்டேன்,இன்னமும் அவன் வெளியாக வில்லை.  லவ் பண்னின புள்ளை கிளாஸ் முடிஞ்சுவெளியில வாரத பார்க்க கூட இப்பிடி வெறிச்சு வெறிச்சு பார்த்து இருக்க மாட்டான் ;அந்த கொண்டக்டர பார்க்க வேண்டிய ஒரு குளிர்கால சூழ்நிலை.

கையில் ஒரு மணக்குச்சியோடு வந்தான் , அய்ய bag டிக்கி  எடுக்கனும் என என்னவோ எல்லாம் உளறினேன்!
என்ன அண்ணன் bag எடுக்கனுமா? கொச்சை தமிழில் பேசி எடுத்துகொடுத்தான். அந்நியன் போல இருந்தவன் இப்படி அம்பியாய் மாறி காட்சியளித்தான் .

கிளைமாக்ஸ் இப்பிடி இனிதாய் விக்கிரமன் படம் போல முடியுமென நான் நினைத்தே இருக்கவில்லை , பாலா படத்து ஹீரோ / கிளைமாக்ஸ் போல தான் இந்த பயணம் அமையுமென்றே நினைத்திருந்தேன் .


பெட்சீட் மணம் எல்லாம் தாண்டி நன்றாய் தூங்கியது, பக்கத்து உம்மனா மூஞ்சி அங்கிள் சிரித்தது என எல்லாம் சுபமாய் அந்த ஏசி பஸ்சில் போன முதல் இரவு முடிந்தாலும் இப்போதும் ஏசி பஸ்சில் போக கிடைத்தால் பெட் சீட் எடுக்க தவறுவதே இல்லை.

Saturday, December 19, 2015

பயங்கரவாதி

ஒருவழியாய் தடவித்தடவி எடுத்த டோர்ச் லைட்டை எடுத்து  சுவரில் தொங்கிய மணிக்கூட்டுக்கு குறிவைத்தான். நள்ளிரவு தாண்டியும் கொஞ்சமும் பயமே இல்லாது தன்னம் தனியாய் ஓடிக்கொண்டிருந்தது அந்த ஜீவன் ! இரண்டு மணிக்கு கிட்டே முள்ளுக்கள் ரெண்டும் முட்டிகொண்டு ஓடிகொண்டிருக்கும் இந்த நடு நிசிநேரத்தில் குமார் ஒருபோதும் தூக்கத்திலிருந்து இப்படி திடிரென முளிப்பது இல்லை .இருந்தாலும்; "டக் டக்" எனும் மின்விசிறி சத்தம் "ஹூஊ "எனும் நுளம்பு சத்தம் என பழகிபோன சப்தங்களை  தாண்டியும் சின்னதாய் கேட்கும் குசு குசு சத்தம் , கடக் கடக் என கேட்கும் புதிய வினோதமான சப்தங்களே இந்த திடீர் முழிப்புக்கு ஏதுவான காரணமாகி போயின.

என்னவாக இருக்கும் ?யாரும் கள்ளனுகளோ?? ஆர்மி இல்லாட்டி  எஸ்.ரி.எப்.மார் ரோட்டில நிக்கிறானுகளோ பல கேள்விகள் வந்து போயின. காதை கொஞ்சம் கூர்மையாக்கியபடி கேட்டுகொண்டிருந்தான் .சத்தம் கொஞ்சம் குறைந்து போக உள்ளூர சமாதானம் ஆகி மீண்டும் தூங்க ஆயத்தமாகி பெட்சீட்டை எடுத்த போதிலே அம்மாவின் மீது காலை போட்டு கொண்டு தூங்கும் தன் மகளை பார்த்ததும் தான் சற்று ஜோசிக்க ஆரம்பித்தான் , புள்ளையிட வருத்தம் சுகமாயிடனுமெண்டு காளிகோயிலுக்கு நேர்த்திகடனுக்காக விட்ட சாவலை அடிச்சிட்டு போக யாரும் வந்திருப்பானுகளோ எனவும் ஒரு ஜோசனை  ;ஆர்மிகாரன் ,எஸ் ரி எப் எல்லாம் திரியுற இந்த நட்ட நடு இரவுல  இவனுகள் எங்க வரபோறானுகள்  ?? தனக்கு தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிகொண்டு  அந்த குருட்டு இரவிலும் சாரனை சரியாய் கட்டிக்கொண்டான் ! 

சரி எதுக்கும் ஒரு எட்டு போய் கோழிகூட்ட பார்த்துட்டுவருவமே என  பின் பக்கத்து கதவின் வார்த்தடியை தூக்க ஆரம்பிக்கும் போது திரும்பவும் அதே   பேச்சு சத்தம் கேட்டது ஆனாலோ இந்த முறை அந்த கோழி கூடு இருக்கும் பக்கம் இல்லாது ரோட்டு பக்கமாய் கேட்டது , முதல் முறையாய் பயப்பட தொடங்கினான் ,யாராக இருக்கும்  ????

மரக்கதிரை ஒன்றை சத்தமே இல்லாது தூக்கி ஜன்னல் பக்கதிலே வைத்து சுவரின் பூக்கல் ஊடாக பார்க முயன்றான் , ஆட்கள் தென்படவே இல்லை இருட்டின் கருமை  அவனது வீட்டை சுற்றிவர ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது. என்னதான் ஆள்நடமாட்டம் தெரியாவிட்டாலும் சின்னதான குசு குசு சத்தம் மட்டும் எங்கிருந்தோ கேட்கிறது .மனிசிய எழுப்பி விசயத்த சொல்ல நினைக்கும் போது சின்ன ஒரு லைட்டர் வெளிச்சமும் ரெண்டு பேரும் பக்கத்து பாள் கிடக்கும் வளவுக்குள் இருக்கும் இத்தி மரத்தடியிலே  ஏதோ செய்து கொண்டிருப்பது தெரிந்தது .

எல்லாம் விளங்கிட்டு குமாருக்கு ! !!  ரெண்டு இயக்க காரனுகள் கிளைமோர் குண்டு செட் பண்ணுறானுகள் . நாசமா போனவனுகள் இவனுக கிளைமோர் வைக்க நம்மட வீட்டு ஏரியாதானா  கிடைச்சுது. இது என்ன சோதனை?

வழக்கமாய் குமார்  இரவில் மெயின் ரோட்டில் இருக்கும் இந்த வீட்டில் தங்காம  இரவையாகினாலே பெட்டி படுக்க்கையோட மனிசியிட அண்ணண்ட வீட்ட போய்த்தான்  தூங்குவது ஊருக்கே தெரியும் ,யாரோ ஒரு இயக்கத்து வால் இத சொல்லித்தான் இவனுகள இங்க கூட்டி வந்திருப்பான் . நாசமா போனவன் கைல கிடைக்கட்டும் இருட்டடி எண்டான அடிக்கனும் என அவனை மனசுக்குள் திட்டி கொண்டே
நாளைக்கு காலையில "ஸ்கொட் " வார எஸ் ரி எப் க்கு தான் இந்த "கிளைமோர்" வைக்கானுகள்  போல என தலையில் கையை வைத்து கதிரையில் இருந்து இறங்கி மெதுவாய் மனிசிய மெதுவாய் தட்டினாள்  

பேசாமபடுங்க !! புள்ளை  எழும்பிடும் உங்களுக்கு எந்நேரமும் இந்த நினைப்புத்தான் என மனிசி தூக்க கலக்கதில்  உளறினாள் 

அடியேய் ! இது வேற விசயம்டி ! கொஞ்சம் எழும்பன் ,ஆறு மாசத்துக்கு முன்னே மார்கெட்டுக்கு முன்னுக்கு எஸ் .ரி.எப் ஒருத்தன இயக்ககாரனுகள் சுட்டு போட்டு ஓட ,அந்த சம்பவ இடத்துக்கு பக்கத்திலே நிண்ட குற்றத்துக்காக  எஸ்.ரி. எப் புடிச்சி போய் நாளு நாளைக்கு வைச்சி அடிச்ச அடி கண்ணுக்கு முன்னுக்கு வந்து போனது. எஸ்லோன் குழாய்ல சீமெண்ட் நிரப்பி படுக்க போட்டு முதுகுல அடிச்ச அடியால் இப்பவும் பாரம் ஒண்டும் தூக்க ஏலாம இருப்பதும் ,குத வழியில்  புகுத்திய உருக்கு குழாயினால் உண்டான வேதனை எல்லாம் மறுபடியும் நினைவுக்கு வந்து மயிர் கூர்ச்செறிந்தது . 

கண்ணை கசக்கிகொண்டே  எழும்பி என்ன சொல்லுங்க என கேட்ட மனிசிக்கு விளக்கதினை சொல்லி முடிக்க முதலே கண்ணில இருந்து தண்ணிய கொட்ட தொடங்கிட்டாள் .எண்ட கண்ணகி அம்மாளே எங்கள காப்பாத்துப்பா!!!!!! அடுத்த நேர்த்திகடன் கூடி போனது .

கடவுள் நம்பிக்கை குறைவு என்றாலும் இப்போதைய நிலமைக்கு அதுதான் துணை ! முருகா முருகா என சொல்லி முளித்து கொண்டே இருந்தார்கள் புருசனும் பொண்டாட்டியும் .

காலையில நேரத்தோட போய் எஸ் ரி எப் ட சொல்லுங்கள் மனிசி  சின்ன ஜோசனை சொன்னாள் ,
சம்பந்தமே இல்லாமல் அண்டைக்கு யாரோ சுட்டதுக்து  தனக்கு அத்தனை அடி அடித்த அந்த எஸ் .ரி.எப்   சாவதில் எந்த வித மனவருத்தமோ அவனுக்கு உண்டாகுவதில் நியாயம் இருப்பாதாய் தெரியவில்லை கூடவே ஒட்டிகொண்டிருக்கும் ஈழ தாயக ஆசையும் சேர்ந்து மனிசியின் ஜோசனை நிராகரிக்க பட்டது . விடியச்சாமமே பெட்டி படுக்கையோட மனிசிட அண்ணண்ட வீட்டுக்கு போயிடுறது எண்டும் அங்கதான் இரவு தங்கின ஐயா! எங்களுக்கு ஒண்டும் தெரியா எண்டு சொல்லி தப்பலாமெனவும் முடிவாகி அதன் படியே எல்லாம் நடந்தது .

சிவப்பு வானம் விடிய தொடங்கியது ,குமாரின் குடும்பத்துக்கு மட்டும் அந்த நாள் ஏன் விடிந்தது என்பதாய் இருந்தது , வழக்கம்போல சாமன் சக்கட்டு எல்லாம் ஏத்திகொண்டு மார்கெட் வியாபாரத்துக்கு போய் விட்டார்கள் குமாரும் மனிசியும் . மார்கெட்டுக்கு பக்கதிலே சின்னதாய் ஒரு சில்லறை கடை அதில்தான் அவர்களில் சீவியம் ஓடிக்கொண்டிருந்தது. கடைக்கு பக்கதிலே வெத்திலை விக்கும் கனகம்மா கிழவி இருவரின் முகத்திலும் ஏதோ பிரச்சனை இருப்பதை கண்டே பிடித்துவிட்டாள் ,கிழவியின் நச்சரிப்பு தாங்காமல் சொல்ல ஆரம்பித்த போதே குண்டு சத்தத்தில் மார்கெட் அதிர்ந்தது !!!!கூடவே குமாரும் மனிசியும் இன்னமும் கொஞ்சம் சேர்ந்து அதிர்ந்து போனார்கள் .

அரைமணி நேர துப்பாக்கி சூட்டு சத்தம் எல்லாம் தணிந்து அரசல் புரசலாய் ஸ்கொட் போன எஸ்டிஎப் ரெண்டு பேர் செத்துட்டானுகளாம் என கதை மார்கெட் முழுதும் பரவியது கூடவே அன்றைய மார்கெட் நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்து கடை சாமான்களை மூட்டை கட்டி கொண்டிருக்கும் போதே 

அடோ அடோ குமார் கோ!!

என கேட்டு கொண்டே மானை பிடிக்க வரும் சிங்கம்போலெ பாய்ந்து வந்து கொண்டிருந்தான் ஒரு எஸ்.டி.எப் , அது அவந்தான் கொஞ்ச நாளுக்கு முதல் தன்னை தலை கீழாய் தொங்க போட்டு வயிற்றில் துவக்கால் அடித்த அந்த முரடன் தான் வந்து கொண்டிருந்தான் .

அடோ உத்... புத்....  அங்க வீட்டு  பக்கதில கிளைமோர் வச்சிட்டு இங்க பிசினஸ் என அரைகுறை தமிழில் ஏசிக்கொண்டு துவக்கை நீட்டிய படியே வந்தான் அந்த கொலைகார எஸ்.டி.எப் , காலை பிடித்து கொண்டு கதறினாள் குமாரின் மனிசி 
சேர் எங்களுக்கு தெரியா சேர்
நாங்க இரவையில அங்க 
படுக்கிறல்ல சேர் எங்கள விடுங்க சேர்!!

அவளில் வயிற்றிலே பூட்ஸ் காலால் உதைத்ததில் கடை தகரத்தில் போய் மோதிக்கொண்டாள் ,குமாரை சேர்ட் கொலரில்  
இழுத்து பிடித்து கொண்டே போனான் அவன் , குமாருக்கு விளங்கிவிட்டது தன் வாழ்க்கை கடைசி நாள் இன்றுதான் என மகள கவனமாபார்த்குக்கோ என மனிசியிடம்  சொல்லிகொண்டே போனான் குமார் , அவளிடம் கடைசியாய் பேசிய வார்த்தை அதுதான் ஆனால் அதை கேட்கும் நிலையில் அவள் இல்லை . எஸ்.டி.எப் உதைத்த உதையில் மூர்ச்சையற்று போயிருந்தாள்.


தம்பி ! தம்பி நீ சொன்ன ஊர் வந்துடுச்சு பஸ் கொண்டக்ரர்  இறக்கி விட்டதும்தான் பழைய நினைவிலிருந்து மொத்தமாய் திரும்பினான் குமார்,  ஊர் மொத்தமாய் மாறி போயிருந்தது . மலைப்பாம்பு வீதிகள் மாடமதில்கள் என தன் வீட்டை தன்னாலே அடையாளம் காணாமல் தவித்து கொண்டே ஒரு சாப்பாடு கடைக்குள் புகுந்து கதிரையில் உட்காந்திருக்கும் போது ஓங்கி ஒலித்து கொண்டிருந்த   வானொலி செய்தியில்
"விடுதலை செய்யபட்ட அரசியல் கைதிகள் எல்லாம் புலி பயங்கரவாதிகள் எனவும் அவர்களை விடுதலை செய்தது தவறெனவும் " ஒரு இனவாதி பேட்டி கொடுத்து கொண்டிருந்தான் ! அப்படின்னா நானும் புலியா? ம்ம்ம் புலி பயங்கரவாதியா?? என தன்னை தானே கேட்ட படி  பிலேண்டி ஒன்றை  சுரத்தை  இல்லாமலே குடித்து முடித்து  . தனக்கு "பிணை"  தந்த அந்த புண்ணியவானுக்கும்  நன்றி சொல்லி கொண்டே வீட்டை தேடி  நடக்க தொடங்கினான்


Tuesday, November 17, 2015

சூரன் போர் எதிர் ISIS

மச்சான் கேளு !!!!!
நம்ம உலகத்தில கறுப்பர்கள்(ஆசியர்களையும் சேர்த்து ) வெள்ளையர்கள்என ரெண்டு நிறபிரிவு இருக்கிறா போல ,விண்ணுலகத்திலும் அசுரர்கள் ,தேவர்கள் என ரெண்டு பிரிவு இருக்கு( இருக்காம்)
வெள்ளையர்களுக்கு எப்பிடி அமெரிக்கா , பிரித்தானியா எல்லாம் பெரிய ஆட்களோ அதே போல தேவர்குலத்துக்கும் சிவபெருமான் உமாதேவி என ரெண்டு மூனு பெரியவங்க இருக்காங்க ...இதுல என்ன சிக்கல் எண்டு நீ கேட்கிறது விளங்குது
நமக்கு கீழ இருக்கிறவன் நல்லபடியா பிரச்சனை இல்லாம இருந்தா நம்மள தேடி வருவானா? இல்ல ஆக இவங்க ரெண்டுபேருமே அடுத்தவங்க கூட்டத்த குழப்பி சண்டை பிடிக்க வைச்சு குளிர்காய நினைச்சாங்க
அதாவது அல்கொய்தா, தலிபான், பலஸ்தீன சண்டை, இந்தியா பாக்கிஸ்தான் சண்டை, சூடான் , சோமாலியா சண்டைக்கெல்லாம் உள்ளாலே அமெரிக்கா ஆயுதங்கள் சப்பிளை செய்யுற மாதிரி
சிவபெருமானும் தன்ன நோக்கி தவம் இருக்கிற அசுரர்களுக்கு அந்த அஸ்திரம் இந்த அஸ்திரம் , சாகாவரம் என ஆயுதங்கள குடுத்து அவனுகட அசுரர்குலத்துக்குள்ள சண்டை வரட்டுமே என வேலைய காட்டினார் .
ஆனா ரியாலிட்டி வேற மாதிரி இருந்துச்சு தங்களுக்குள்ளே போரிட்டு அலுத்து போன கீழைத்தேயத்து உதாரணமா ISIS தீவிரவாதி போன்றவங்க தங்கள் கட்டுபாட்டுக்குள்ளே முழு உலகமும் இருக்கனும் எனவும் தங்க ஏரியாவுக்கு வந்த வெள்ளையன் தலைய வெட்டுறது, நிக்கவைச்சு அறுக்கிறது (தலையத்தான்) என வெள்ளையனுக்கும் தங்கட கைவரிசைய காட்டினாங்கதானே இதே போல சூரன் போன்ற அரக்கனும் தேவர்கள புடிச்சி சிறை வைக்கிறது , தேவர்குல பெண்கள பாலியல்பலாத்காரம் செய்யுறது, விண்ணுலத்தை தங்கள் கட்டுபாட்டுக்கு கீழ கொண்டுவாரது என ஒரே தொல்லையா இருந்தான் .
வெள்ளையர்கள் எனும் மேலைதேயத்தவர்கள இப்பிடி கொடுமை படுத்த தாங்க முடியா வெள்ளையர்கள் வெகுண்டெழுந்து அமெரிக்கா கிட்ட போய் முறையிட அமெரிக்கா தான் போகாம தண்ட சொந்தகார "நேட்டோ படையை" அனுப்பி அவங்கள அழிக்க முயற்சி செய்யுது ஆனா முடியல
இதே போலத்தான் அசுரர் தொல்லையில இருந்து தங்களுக்கு விடுதலை இல்லையா என தேவர்குலம் சிவபெருமானிட்ட முறையிட அவரோ தான் போறது முறையில்ல எண்ட மகன் அனுப்பிவிடுறன்னு ஒருத்தர அனுப்பினார் !! வருவாண்டா இந்த கொடுமையெல்லாம் தீர்க்க வேலாயுதம் வருவாண்டா என தேவர்குலம் இருக்க
நேட்டோ படை போல முருகன் வந்து இறங்கி சூரன் எனும் அசுரனை கொன்று வீழ்த்தினார்
சரியா மச்சான் விளங்கிட்டா ?
சூரன் போர் பற்றி விளக்கம் கேட்ட சக மதத்தினை சேர்ந்த நண்பனுக்கு நான் சொன்ன விளக்கம்

Tuesday, October 13, 2015

மொட்டை கத்தரிகோல்

இந்தியா   தோல்வியடைவதை    தாங்கமுடியாத  ரசிகர்கள்  தண்ணீர்  போத்தல்களை  வீசி  போட்டிக்கு இடையுறு  விளைவித்தனர் எனும் கேவலமான விளையாட்டு செய்தி முதல்கொண்டு உலக சந்தையில்  கச்சா  எண்ணெய் விலை பரலுக்கு   இவ்வளவு டொலர் அதிகரிப்பு  வரையான  வணிக செய்திவரைக்கும்  வாசித்தது  போதாதென்று   மரணஅறிவித்தல்கள்  மற்றும் யாழ் இந்து வேளாளர் வயது 40 ,கனடா  குடியுரிமை பெற்ற  மணமகனுக்கு  என வரும்  மணமகன்/மணமகள் தேவை விளம்பரங்களையும் விட்டு வைக்காமல் வாசித்துவிட்டேன் .

செய்திகள் முழுவதையும் தின்று விட்டு பெரிய ஏப்பம்  விட்டு நிமிர்ந்து சலூன்காரரை பார்த்தேன் . சலூன் கடைகாரர் என் வயதை ஒத்த ஒருவனுக்கு முகத்திலே இன்னமும் கோலம் போட்டு கொண்டிருக்கிறார்  .
எனக்கு முன்பே கடைக்கு வந்து முடிவெட்ட காத்துகொண்டிருக்கும் இன்னும் மூன்று பேருக்கும் முடியும் வரை  இங்கேயே காத்திருப்பதானால் அந்த மணமகள்தேவை விளம்பர    யாழ் இந்து வேளாளர் வயது 40 கார மணமகனுக்கு பெண் கிடைத்துவிடும் என்றே தோன்றியது  . சுற்றி  சுற்றி அந்த  சலூன் கடையை பார்க்கிறேன் வழக்கமாக எல்லா கடைகளிலும் தொங்கும் அனுஸ்கா, நயந்தாரா படங்களோடான கலண்டர்களை கானவில்லை . நூற்றாண்டு பழமையான கட்டிங் ஸ்டைல் முறைகள் அடங்கிய போட்டோக்கள் கூடவே ,"தேவனிடத்தில் விஸ்வாசமாய் இருங்கள் " என  இருக்கும் ஸ்டிக்கர் வகைகள் தான் சுவர்களில் பல்லி போல் ஒட்டிஇருகின்றன.

எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த 90 காலப்பகுதியிலெல்லாம் ஊரில் முடிவெட்ட சலூன்கடை  என்பதே இருக்கவில்லை . அந்த அவர்  ஒருவர் மட்டுமே  எல்லோரரின்  வீட்டுக்கு  வந்து முடி வெட்டிவிட்டு போவார்.அதனால்தான் என்னவோ   உங்கட ஊரே எண்ட  சொல்லுக்கு கட்டுபட்டு தலை ஆட்டுவாங்கடா என்று எங்களிடம் சொல்லிசிரிப்பார்   ." அம்பட்டன் கணேசன்" அப்படித்தான் அவர் பெயர் எனக்கு அறிமுகமானது .மழை பெய்து குளத்துக்குள் தண்ணீர் சேர வந்து சேரும் பறவை போல சரியாய் எங்கள் தலையில் முடி சேர்ந்த நேரத்துக்கு அவர் வீடுகளுக்கு வந்து சேருவார் .நீல நிற ஹீரோ சைக்கிள் அவருக்கு வாய்த்த பிஎம்டவிள்யூ கார்  .அந்த சைக்கிளுக்கு  கடைசியா எப்போது பிரேக் வேலை செய்ததென அவருக்கே  நினைவில் இருக்காது .செருப்பை  கிறவல் ரோட்டில் தேய்த்து பிரேக் அடிக்கும்  சத்தம் கேட்டாலே அவர் வருகிறார் என மதித்து விடலாம் .எங்கள் வீட்டுக்கு முன்னால் செருப்பை ரோட்டில் தேய்க்க தொடங்கினால் பக்கத்து கோவில் மூலையிலே போய் நிற்கும் அவரின் சைக்கிள் .அப்படி இருந்தாலும்  அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார் , அப்பாவிடம்  கள்ளு , சீல் சாராயம்  குடிக்கவென காசு வாங்கி போவார் சிலவேளை ரெண்டு பேரும் சேர்ந்தே குடிக்க போவார்கள் . அதே சைக்கிளில் அப்பாவை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும் பழக்கமும் வைத்திருந்தார் .
சனி ஞாயிறு தினங்கள் அவரின் வேலைபழு மிகுநாட்களானாலும் காலையிலே எட்டு மணிபோல தொழில் செய்ய இருக்கும் வீடுகளுக்கு நேரத்துக்கேவந்து விடுவார். "பன்" நாரினால் பின்னபட்ட கைபிடி வைத்த ஒரு பையினுள்ளே அவரின் தொழில் ஆயுதங்கள் எல்லாம் சுற்றி சைக்கிள்  கரியரில்   இறப்பர் பட்டியினால் இறுக்க கட்டியபடி  இணைத்திருக்கும்.  அவர் எங்களுக்கு முடிவெட்ட வருவது பற்றி அப்பா முதல்நாளே எங்களுக்கு சொல்லிவிடுவார்  

"நாளைக்கு கணேசன் வருவான் தலைமயிர் வெட்ட , விளையாட கிளையாட போயிடாம வீட்ட நில்லுங்க"

உரிமட்டையில் இருந்து தும்பை கிளித்து எடுப்பது அப்போதைய என் வயதுக்கு ஐம்பது கிலோ சீமேந்து மூடையை தனியே தூக்குவது போல. முடிவெட்ட எதிர்பார்த்திருக்கும் அண்ணாமார் தும்பை பிய்த்து எடுத்து வீட்டு விறாந்தையில்  லங்காரானி பவுடர், உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி சகிதம் அவரை எதிர்பார்த்து இருப்பார்கள் . நானோ உரிமட்டையிலிருந்து தும்பெடுக்க முயன்று அமுதம்  கடைந்த தேவ,அசுர சேனைகள் போல வியர்த்து கொட்டி நிற்பேன். பரிதாபபட்ட ஒரு அண்ணா வந்து  பிய்த்து கொடுத்துவிட்டு போவான் .அந்த நேரத்தில் அவனில் இடத்தை இன்னுமொரு அண்ணா பிடித்து கொள்வான் , யார் முதலில் முடிவெட்டி விட்டு விளையாட ஓடுவது என்பதே அவர்களில் தலையாய  பிரச்சனை 


சம்மர்கட், பொண்டிங் தாடி, பெக்கம் கட் என அவருக்கு எதுவும் தெரியாது.அத்தோடு அப்போதெல்லாம் சேவிங் மெசின் , றீம்மர் என எதுவும் அவரிடம் இருக்கவில்லை மாறாக ஒரு கையில் கத்தரிகோல், மறுகையில் சீப்பு இதெல்லாம் போக வாயிலே பீடி வேறு ஒட்டிகொண்டிருக்கும் .சில பொழுதுகளில் அவருக்கு பிடித்த பாடல்களை பாடிகொண்டே முடிவெட்டுவதில் அலாதி இன்பம் அவருக்கு   .அநேகமாய்    அவர்  "சொந்தமும் இல்லே பந்தமும்  இல்லே  சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார்  " பாட்டை  கரகர  இருமல்  குரலோடு பாடி கொண்டே  எங்களுக்கு முடிவெட்ட ஆரம்பிப்பார்   .அவர் மூலமாகதான்  அப்படி ஒரு பாட்டே  இருப்பதாய் எனக்கு தெரியவந்தது  வேறுகதை.

சேர்ட் , டீ சேர்ட் கழட்டி விட்டு தனியே கால்சட்டையோடு  ஒரு மரகுத்தி ஒன்றில் குந்தியபடி இருப்போம்  .தலையில் நீர் தெளித்து அபிசேகத்துடன்ஆரம்பித்த பூஜையானது   கத்தரிகோல் சீப்பு முதலியவற்றை கொண்டு  எங்கள் தலையில் பரதநாட்டியம் ,குச்சுபுடி, கதகளி எல்லாம் ஆடி கடைசியாய் சவரகத்தியால் ஓரங்களில் ரத்தபலி எடுக்கபட்டு  இனிதே வெறும் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் முடிந்திருக்கும் . ரத்தம் வடிவதை தடுக்க லங்காராணி பவுடர், உடம்பில் ஒட்டிய முடிகளை தட்டிவிட அந்த உரிமட்டை தும்பு என ஏற்பாடுகளையும் சேர்த்து பதினைந்து இருபது நிமிடங்களில் மூன்று நாலு பேருக்கு வெட்டி முடிந்து புறப்பட ஆயத்தமாயிருப்பார்; அதற்கான காசு , பணமெல்லாம் ஏலவே கொடுக்கபட்டு குடிக்கபட்டிருக்கலாம் அல்லது இனித்தான் கொடுக்கப்பட குடிக்கபட காத்திருக்கலாம் .தம்பி !! தம்பி உங்களத்தான்  நீங்க வாங்க ;அவங்க பிறகு வெட்டிகொள்ளுவாங்க என கடைக்காரர் அழைத்தது நினைவிலிருந்த என்னை நனவுக்கு கொண்டுவந்தது  

 எப்பிடி தம்பி சேவ் எடுக்கவோ?

ஓம் ஓம் கொஞ்சம் றீம் பண்ணிவிடுங்க போதும் ,அவர் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது 

உங்களுக்கு கணேசன்னன தெரியுமோ? சின்ன வயசுல முதலெல்லாம் எங்க வீட்டுக்கு எல்லாம் வந்து முடி வெட்டிவுடுறவர் இப்போ ஆள் எங்க எண்டே தெரியலடாப்பா   இருக்காரா இல்ல செத்துட்டாரோ  தெரியல  என சலூன்காரரிடம்  கேட்க நினைத்தேன் !! 

தள்ளி இருந்த  ரேடியோவில் இருந்து     "சொந்தமும் இல்லை பந்தமும் இல்ல சொன்ன இடத்தில்  அமர்ந்து கொள்கிறார் நாங்க  மந்திரி இல்ல மன்னர்கள் இல்ல"""    என  பாடல்  ஒலிக்க தொடங்கியது  .ஆமாம் அந்த கணேசன்  அண்ணன்  எங்கேயோ  உயிரோடுதான்  இருப்பார்  என  நம்பிக்கை  பிறந்தது  .
Related Posts Plugin for WordPress, Blogger...